ஆ
ண்களின் ஆதிக்கத்தில் இயங்கிவரும் திரையுலகில் தங்கள் ஆளுமையைத் தனித்து வெளிக்காட்டிய பல பெண்கள் காலம்தோறும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். தற்கால மலையாள சினிமாவில் அப்படியொரு ஆளுமை ரீமா கல்லிங்கல். 2009-ல் வெளியான ‘ரிது’ மலையாளப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும், ‘22 ஃபீமேல் கோட்டயம்’ திரைப்படம் அவரது முழுமையான நடிப்புத் திறமையை வெளிக்காட்டியது. திரையுலகில் பணிபுரியும் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்காக கடந்த ஆண்டு ‘வுமன் இன் சினிமா கலெக்ட்டிவ்’ என்ற அமைப்பைத் தொடங்கிய நிறுவனர்களில் ஒருவராக ரீமா கல்லிங்கல் தன்னை முன்னிறுத்தியபோது கேரளத்தைத் தாண்டியும் அவர் கவனிக்கப்பட்டார்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டெட்எக்ஸ் (TedX) நிகழ்ச்சியில் ‘திரையுலகில் பெண்களுக்கு எதிராக நிலவிவரும் பாலினப் பாகுபாட்டை மாற்றுதல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். துணிவுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் பேசிய ரீமா கல்லிங்கல்லின் உரை வைரலாகப் பரவிவருகிறது. அந்த உரையின் சுருக்கம் இது.
“எனக்கு 12 வயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. ஒரு நாள் என் பாட்டி, சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் இரவு உணவைச் சாப்பிட என் தாயின் அருகில் அமர்ந்தேன். அவரிடம் மூன்று வறுத்த மீன் துண்டுகள் மட்டுமே இருந்தன. அவற்றில் ஒன்றைப் பாட்டிக்கும் மற்ற இரண்டு துண்டுகளை இரண்டு ஆண்களுக்கும் பரிமாறினார். மீன் கிடைக்கவில்லை என்பதில் எனக்கு ஏமாற்றமும் வருத்தமும் ஏற்பட்டன. கூடவே ஏன் என்ற கேள்வியும். தனிமையில் அமர்ந்து அழுதேன் என்றாலும் பின்னர் ஏன் அழ வேண்டும் எனத் தோன்றியது. என் தாயும் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கான மீன் துண்டுகளைச் சுவைக்காமல் தியாகம் செய்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த இடத்திலிருந்துதான் எனக்குள் கேள்விகள் பிறக்கத் தொடங்கின.
நான் படித்த பள்ளியில் மாணவர்கள் அனைவரும் நான்கு தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு குழுவின் தலைவரையும் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடந்தபோது அதில் நான் போட்டியிட்டேன். அதிக வாக்குகள் பெற்ற மாணவன் தலைவராகவும் அவரைப் போலவே அதிக வாக்குகள் பெற்ற மாணவி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். மாணவரைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் மாணவிகளை துணைத் தலைவராகவே நியமிக்கும் நடைமுறை இருந்தது. அந்த நடைமுறைக்கு எதிராக எங்களில் சிலர் குரல் கொடுத்தோம். எங்கள் குரல் கேட்கப்பட்டது. அதன் பின்னர் பழைய நடைமுறை மாறியது. ஒவ்வொரு குழுவுக்கும் மாணவர் மற்றும் ஒரு மாணவியைத் தலைவராக நியமிக்கத் தொடங்கினார்கள். சமத்துவமின்மைக்கு எதிராக இப்படிக் கேள்விகள் கேட்டால் அது கிடைத்துவிடும் என்று நம்பினேன். ஆனால், பள்ளிக்கல்வி முடிந்து நிஜ உலகை எதிர்கொண்டபோது யதார்த்தம் முகத்தில் அறைந்தது.
கேள்வியால் திறந்த பாதை
நான் திரைத்துறையில் நுழைந்தபோது சில படங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தேன். ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் ‘நீ எப்படி சினிமாலும் நடித்துக்கொண்டு தொலைக்காட்சியிலும் வேலை செய்யலாம்’ என்று கேட்டார்கள். ‘ஏன் கூடாது’ என்று நான் கேள்வி கேட்டபோது, எனக்குத் தடை விதிக்கப்பட்டது. எனது கருத்தை யாரும் கேட்கவில்லை, என்னுடன் விவாதிக்கவும் இல்லை. ஏன் என்று கேள்வி கேட்டதற்காகவே தடைவிதிக்கப்பட்டேன். அதுகூட எனக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. அதை நான் செய்தித்தாளில் பார்த்தே தெரிந்துகொண்டேன். ஆனால், எந்தத் தடையும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது.
நான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறபோது என் அம்மா உட்பட பல பெண்கள் இதுபோல் கேள்வி கேட்பதே இல்லை. ஆசிரியைகளும் அப்படியேதான் கடந்து வந்திருக்கிறார்கள். கேள்விகள் கேட்காமல் இருப்பதுதான் வாழ்க்கைமுறை என்பதை ஏற்றுக்கொண்டே பெண்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை.
நான் திரைத்துறைக்குள் நுழைந்தபோது சினிமா வாழ்க்கை என்பது மிகக் குறுகிய ஒன்று; எனவே, சமரசம் செய்துகொள், விட்டுக்கொடுத்துப் போ, நிறைய சிரி, முக்கியமாக வாயை மூடிக்கொண்டு அடங்கி இரு என அறிவுறுத்தப்பட்டேன். நடிப்புத் திறமை என்று வருகிறபோது பெண்கள் எப்போதும் சிறந்தவர்களாக இருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 150 பெண்கள் நடிகர்களாக அறிமுகமாகிறோம். யாருக்காக? சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருக்கும் பத்தே பத்து நடிகர்களுக்கு இணைகளாக நடிக்க. 150 பெண்களை அறிமுகப்படுத்தும் திரையுலகம், எங்களுக்கு 10 ஆண்களை மட்டுமே கண்டுபிடித்து வைத்திருக்கிறது.
இந்த இடத்தில் எனது கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. இன்னும் எத்தனை காலம்தான் எங்களை அடங்கி நடக்கச் சொல்வீர்கள்? இன்னும் எவ்வளவு காலம்தான் எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மவுனமாக இருப்பீர்கள்?
உடைந்த மௌனம்
கடந்த ஆண்டு பிப்ரவரியில் என் தோழி மற்றும் சக பெண் நடிகர் ஒருவர் காரில் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டு, பாலியல்ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியுலகுக்குச் சொன்னால் தனக்குப் பிரச்சினை ஏற்படலாம் எனத் தெரிந்தும், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் துணிவுடன் வெளிப்படுத்தினார். அவருக்கு நீதி கிடைத்தது. அவரது முன்மாதிரியான துணிவு, எனது மௌனத்தை உடைத்தெறிந்தது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமூக ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நடிகையின் முகநூல் பக்கத்தின் கமெண்ட் பகுதியைப் பாருங்கள். அங்கே வரும் ஆண்கள் இடும் பின்னூட்டங்களை வாசியுங்கள்.
ஒரு நடிகை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். நாங்கள் என்ன உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடிக்க வேண்டும், ஒரு பெண்ணாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக எப்படிப்பட்ட முறைகளில் எல்லாம் எங்களைப் பாலியல் வன்புணர்வு செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
தற்காலத்தில் நடிகர்களின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குதான் நடிகைகளுக்குக் கிடைக்கிறது. ஒரு படத்தில் பங்குபெறும் நடிகைக்கு எவ்வித வியாபார மதிப்பும் இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் அழகுக்காக வைக்கப்படும் அரங்கப் பொருட்களில் ஃபர்னிச்சர்களும் உண்டு. எங்களை அவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் மட்டும்தான் ஆண் - பெண் விகிதாச்சாரம் சமநிலையில் இருக்கிறது. ஆனால், இது திரைத்துறையில் இல்லை. இங்கே ஒரு ஆண் 40 முதல் 70 ஆண்டுகள் வரை நடிக்க முடியும். அவர்களுக்காக விதவிதமான கதாபாத்திரங்கள் எழுதப்படும். ஆனால், மிகப் பெரிய வெற்றிபெற்ற படங்களில் நான்கு விதமான பெண் கதாபாத்திரங்கள்தாம் திரும்பத் திரும்ப உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அடங்கி நடக்கும் மனைவி, கவர்ச்சி பிம்பமாக நாயகனை வலம்வரும் காதலி, மிகக் கொடூரமான மாமியார், பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கும் தாய். எதற்காக இந்த அநீதிகளை எல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்? கடந்த தலைமுறை கேட்காமல் விட்ட எல்லாக் கேள்விகளையும் நாம் அனைவரும் இணைந்து கேட்போம், அவற்றுக்குத் தீர்வு காண்போம் வாருங்கள். அதன் பயன் நம் வருங்காலத் தலைமுறைக்காவது கிடைக்கட்டும்”.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago