வான் மண் பெண் 34: விஷக் காற்றில் முளைத்த விருட்சங்கள்!

By ந.வினோத் குமார்

 

1984

டிசம்பர் 3 நள்ளிரவு.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து, மீத்தைல் ஐசோ சயனேட் விஷ வாயு கசிந்தது. அது சுமார் எட்டாயிரம் பேரைக் கொன்றது. நள்ளிரவில் கசிந்த அந்த விஷம், அதிகாலைவரை ஊரெங்கும் பரவியது.

நாளை கண் விழிப்போம் என்ற நம்பிக்கையில் உறங்கிய பலர், கண் விழிக்கவே இல்லை. ‘நாளை அவரைப் பார்ப்போம், இவரைப் பார்ப்போம்’ என நினைத்து உறங்கிய சிலர், அடுத்த நாள் அவர்களின் சடலத்தைத்தான் பார்த்தார்கள். அந்தத் துயர்மிகு இரவு இன்னும் பலருக்கு விடியவே இல்லை. அந்த இரவு விடியாமல் போய் இன்றோடு 33 ஆண்டுகள் ஆகின்றன.

அந்தச் சம்பவம் நடந்த பிறகு சுமார் இரண்டு தலைமுறைகள் உடலில் பல்வேறு நோய்களைச் சுமந்து வாழ்கின்றன. கண், காது, கைகள், கால்கள் போன்ற உறுப்புகள் இல்லாமல் பல குழந்தைகள் பிறந்து இறந்தன. பல இறந்தே பிறந்தன.

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் அங்கு இன்னும் நம்பிக்கையுடன் பல ஜீவன்கள் உயிர்த்திருக்க முக்கியக் காரணம் சம்பா தேவி சுக்லா, ரஷீதா பீ ஆகிய இரண்டு பெண்கள்தான்!

துயரத்தில் முளைத்த நட்பு

அந்தக் கொடூர இரவில் நடந்த விபத்தில் ரஷீதா தன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை இழந்தார். சம்பா தேவியும் அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர். சில காலம் கழித்து சம்பா தேவியின் கணவர் பத்ரி, விஷவாயு தந்த புற்றுநோயால் இறந்தார். சம்பாவின் மூன்று மகன்களில் இருவர் விஷவாயு விபத்து தொடர்பான நோய்களால் இறந்தனர். இரண்டு மகள்களில் மூத்த மகள், பக்கவாதத்துக்கு ஆளானார். மீதமிருக்கும் ஒரு மகனும் மகளும் பல்வேறு நோய்களைச் சுமந்து வாழ்கிறார்கள்.

விஷவாயுகசிவு நடந்த அடுத்த சில மாதங்களுக்கு, வாழ்க்கையை நடத்துவது இருவருக்கும் கடினமாக இருந்தது. இந்நிலையில் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட 100 பெண்களுக்கு எழுதுபொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் 1985 நவம்பரில் மாநில அரசால் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது. நாளொன்றுக்கு வெறும் ஐந்து ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. அந்தப் பயிற்சியின்போதுதான் சம்பா தேவியும் ரஷீதாவும் சந்தித்துக்கொண்டார்கள்.

மூன்று மாதங்களில் அந்தப் பயிற்சி நிறைவடைந்தது. ஆனால், பயிற்சி பெற்ற பெண்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அப்போது அந்த நிறுவனத்துக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குறைகளைச் சொன்னார்கள். ஆட்சியரோ இந்தப் பிரச்சினையில் முதல்வர்தான் முடிவெடுக்க முடியும் என்று கைவிரித்தார். அந்தப் பெண்களுக்கோ முதல்வர் யார் என்பதுகூட அப்போது தெரியாது.

கூலி வாங்காமல் எதிர்ப்பு

இருந்தும் அந்தப் பெண்கள் சம்பா, ரஷீதா இருவரின் தலைமையில் அடுத்த நாள் காலை முதல்வரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். காரணம், அவர்களிடம் பேருந்துக்குக்கூடக் காசில்லை. அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் மோதிலால் வோராவைச் சந்தித்துத் தங்கள் குறைகளைச் சொன்னார்கள். செய்கிற பொருட்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூலி வழங்கும் அரசு எழுதுபொருள் நிறுவனம் ஒன்றில் அந்தப் பெண்களுக்குப் பணி வழங்க வோரா உத்தரவிட்டார்.

ஆனால், அங்கும் அவர்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு வெறும் ஆறு ரூபாய்தான் கூலியாகக் கிடைத்தது. “அன்றைய தேதியில் ஒரு கிலோ உருளைக் கிழங்கின் விலையே எட்டு ரூபாய்” என்கிறார் சம்பா தேவி.

இதனால் அவர்கள் அடுத்த நாளிலிருந்து கூலியே வாங்காமல் வேலை செய்து எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இறுதியில் அரசு பணிந்தது. அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.150 கூலியாக வழங்க முன்வந்தது.

அந்த வெற்றிக்குப் பிறகு 1986-ல் அவர்கள் இருவரும் இணைந்து, ‘போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட பெண் எழுதுபொருள் பணியாளர் சங்கத்தை நிறுவினார்கள். சில காலம் கழித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நூறு பெண்களும் மத்திய அரசு அச்சகத்தில் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், அங்கு அவர்களின் உடல் ஊனத்தைக் காரணம் காட்டி இதர பணியாளர்களைவிடவும் குறைவான ஊதியத்தை அரசு வழங்கியது. இதை எதிர்த்து சம்பா, ரஷீதா தலைமையில் 1989-ல் போபாலில் இருந்து டெல்லிவரை அந்தப் பெண்கள் நடந்தே சென்று அன்றைய பிரதமரைச் சந்தித்தனர். அதன் பலனாக அவர்களுக்கு இதர பணியாளர்களுக்கு இணையான ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட்டன.

போராட்டம் தந்த பரிசு

இதே காலகட்டத்தில் சம்பாவும் ரஷீதாவும் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். விபத்து நடந்து பத்து ஆண்டுகள் கழித்து சுமார் 2,820 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கியது அந்த நிறுவனம். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே இழப்பீடு கிடைத்தது. அரசின் ‘சிவப்பு நாடா’ தன்மையால் அதுவும்கூடப் பலருக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விஷவாயு விபத்து நடந்த பகுதியை யூனியன் கார்பைடு நிறுவனம் சுத்தம் செய்ய வேண்டுமென்று சம்பாவும் ரஷீதாவும் 1999-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்கிடையில் 2001-ல் டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் யூனியன் கார்பைடு இணைக்கப்பட்டது. பிறகு 2002-ல் சம்பாவும் ரஷீதாவும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 19 நாட்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படிப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததால் சில கோரிக்கைகள், சில வழக்குகளில் வெற்றி கிடைத்துள்ளன. ஆனால், இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை.

சம்பா, ரஷீதா இருவரின் போராட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு ‘கோல்ட்மேன் என்விரான்மெண்டல் விருது’ 2004-ல் வழங்கப்பட்டது. அதில் கிடைத்த தொகையைக் கொண்டு ‘சிங்காரி அறக்கட்டளை’யை நிறுவினார்கள். விஷவாயு தாக்கியதால் பல குறைபாடுகளுடன் பிறந்த சிறப்புக் குழந்தைகளுக்கு அதன் மூலம் மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்று அதில் சுமார் 800-க்கும் அதிகமான சிறப்புக் குழந்தைகள் உள்ளனர்.

“தான் பிறந்ததிலிருந்து தனக்குத் தெரிந்த எல்லா உறவுகளையும் விட்டு, திருமணத்தின்போது அறிமுகமில்லாத யாரையோ ஏற்றுக்கொள்கிறாள் ஒரு பெண். மிகவும் அடிப்படையான நிலையில் ஒரு பெண் அப்படியொரு மாற்றத்தை எதிர்கொள்ளும்போது தன் முன்னேற்றத்துக்கான எந்தவொரு போராட்டமும் அவளை பயமுறுத்திவிடாது!” என்கிறார் ரஷீதா. உண்மைதானே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்