மனைவியே மந்திரி: தோழியே மனைவி! - நடிகர் பிரசன்னா

By கா.இசக்கி முத்து

சி

னிமா துறையில் இருந்து காதலித்து இணைந்த நானும் சினேகாவும் திருமணத்துக்கு முன்பே இரண்டு குடும்பங்களின் பிரச்சினைகளையும் பேசி முடித்துவிட்டோம். இருந்தாலும் பல குடும்பங்களில் இருப்பதுபோல் உரசல்கள், நெருடல்கள் இருக்கத்தான் செய்தன. அவற்றையெல்லாம் எனக்காகப் பொறுத்துக்கொண்டு தேவைப்படும்போது விட்டுக்கொடுக்கத் தயங்கியதே இல்லை அவர். சமீபத்தில் என் அப்பா, “நாங்களே உனக்குப் பெண் பார்த்துத் திருமணம் செய்துவைத்திருந்தால்கூட, உன் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கி இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பாரான்னு தெரியாது. சந்தோஷமா இருக்கு” என்றார். அந்த அளவுக்குக் குடும்பத்தையும் என்னையும் சினேகா பார்த்துக்கொள்கிறார்.

அம்மா என்பதில் ஆனந்தம்

10chlrd_prasanaமகன் விஹான் பிறந்த பிறகு அவரை முழுமையான தாயாகவே பார்க்கிறேன். முன்பு நினைத்த நேரத்துக்கு வெளியே சாப்பிடச் செல்வோம், காரில் சுற்றுவோம், வெளிநாடு செல்வோம். ஆனால், மகன் பிறந்த பிறகு அவன் இல்லாமல் சினேகாவால் இருக்க முடியாது. படப்பிடிப்புக்குக்கூட அவனைக் கூட்டிச்சென்று கொஞ்ச நேரம் வைத்துக்கொள்வார்.

வெளியூர் படப்பிடிப்பு என்றால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அழைத்து மகனைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார். விஹானுக்கு இரண்டரை வயதாகிறது. மகனை விட்டுவிட்டு சினிமாவுக்குக்கூட வர மாட்டார். அப்படியே வந்தாலும் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை வீட்டின் சிசிடிவி கேமரா வழியாகப் பையன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டிருப்பார்.

விஹானின் அம்மாவாக இருப்பதுதான் சினேகாவுக்குப் பிடித்த பொறுப்பு.

தளராத நம்பிக்கை

எனது வெற்றி - தோல்வி அவரை ரொம்பவே பாதிக்கும். வெற்றி கிடைக்கும்போது இருந்ததைவிட தோல்விகளின்போது என்னுடன் நின்றிருக்கிறார். என்னை எந்தவொரு இடத்திலும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.

திருமணத்துக்குப் பிறகு ஒரு கட்டத்தில், “நான் நடிப்பதை நிறுத்தப் போகிறேன். எனக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்து என்னை வேறு மாதிரி மாற்றப்போகிறேன். அதுவரை எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை” என்றேன். எந்தவொரு கேள்வியுமே கேட்காமல் சரி என்று சொன்னார். 2016-ல் ‘திருட்டுப்பயலே -2’ படத்தில் ஒப்பந்தமாகும்வரை என்னிடம் அவர் எதுவுமே கேட்டதில்லை. நானே, “என்னம்மா, ஒன்றரை வருஷம் படம் எதுவுமே செய்யவில்லை.

ஒரு கேள்விகூடக் கேட்க மாட்டாயா?” என்று கேட்டேன். “உன் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது. நீ எவ்வளவு ஈடுபாட்டுடன் உடற்பயிற்சி செய்கிறாய் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறாய். அந்த அர்ப்பணிப்பு வீணாகாது” என்றார். அவர் என்றைக்காவது ஒருநாள், “என்னப்பா படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லையா?” என்று கேட்டிருந்தால்கூட ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிருப்பேன்.

முழு மகிழ்ச்சியைப் பார்த்த நாள்

திருமணத்துக்கு முன்பு பிறந்தநாளை மற்றொரு நாளாகத்தான் பார்ப்பேன். ஆனால், திருமணத்துக்குப் பிறகு என் ஒவ்வொரு பிறந்தநாளையும் மறக்க முடியாத நாளாக மாற்றிவிடுவார். நான் ஒரு கைக்கடிகாரப் பைத்தியம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவற்றை வாங்கிக் கொடுப்பார். அவரை எப்படியாவது ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று நானும் பலமுறை முயன்று தோற்றிருக்கிறேன். அவருக்கு கிறிஸ்தவ முறை திருமணம் பிடிக்கும். 2013-ல் அமெரிக்கா சென்றபோது அங்குள்ள நண்பரின் வீட்டில் எங்களின் கிறிஸ்தவ முறை திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்திருந்தேன். இது எதுவுமே அவருக்குத் தெரியாது. அந்தத் திருமணத்துக்காக அவருடைய அக்காவை இங்கிருந்து அவருக்குத் தெரியாமல் வரவழைத்தேன். சினேகாவின் முழுமையான சந்தோஷத்தை அன்று பார்த்தேன்.

சாம்பாரே பெரிய விருந்து

திருமணமான பிறகு வந்த என் முதல் பிறந்தநாளுக்கு வீட்டிலேயே கேக் செய்து கொடுத்து ஆச்சரியமளித்தார். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் அவரைச் சாம்பார் வைக்கச் சொல்வேன். அதுதான் எனக்குப் பெரிய விருந்து.

அவர் வெளிப்படையானவர். யாராக இருந்தாலும் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். ஆனால், யாரிடம் எதைச் சொன்னாலும் அதில் தேன் தடவியதுபோல மனம் வலிக்காத மாதிரி சொல்வார். அதுதான் அவரது சிறப்பு. வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்வார். எந்தப் பொருள் எங்கு இருக்க வேண்டுமோ, அங்குதான் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைப்பேன்.

புரிதலும் பிணைப்பும்

என்னைப் பற்றித் தவறான செய்திகள் பெரிதாக வந்ததில்லை. சில நேரம் காயப்படுமளவுக்கு ஏதாவது கிசுகிசுக்கள் வரும். அவற்றையெல்லாம் பெரிய விஷயமாக நானும் அவரும் எடுத்துக்கொள்வதில்லை. என்னைவிட வதந்திகளால் பெரிதாக அவர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால், திரையுலகம் எப்படி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எங்களுக்குள் அப்படி ஒரு புரிதலும் பிணைப்பும் உண்டு. நான் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவரை அழைத்துப் பேசிவிடுவேன்.

நட்பே பிரதானம்

விழாக்களில் எங்கள் இருவரையும் சேர்த்துப் பார்க்கும்போது திரையுலகில் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். உதாரணத் தம்பதியாகப் பார்க்கப்படுவது பெருமையளிக்கிறது. ‘நமக்குள் வரக்கூடிய எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் மூன்றாவது நபரிடம் போகாக் கூடாது, அன்றைய பிரச்சினையை அன்றைக்கே முடித்துவிட வேண்டும், எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் பிரிவு பற்றி யோசிக்கக் கூடாது’ என்று பேசி உறுதியெடுத்துக்கொண்ட பின்தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். முதலில் நாங்கள் இருவரும் நண்பர்கள், பிறகுதான் கணவன்-மனைவி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்