புதிய விடியல்: நம்பிக்கை தரும் மாற்றங்கள்

By கோபால்

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் குடும்பம், சமூகம், பொருளாதாரம், அரசியல் என்ற பல்வேறு தளங்களில் அவர்களுக்குச் சம வாய்ப்பும் பாலினச் சமத்துவமும் பெறுவதற்கு இன்னும் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பாலியல் வன்முறையிலிருந்தும் குடும்ப அடக்குமுறையிலிருந்தும் பெண்களை விடுவித்து அவர்களுக்குச் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் உறுதிசெய்யத் தேவைப்படும் முயற்சிகளும் மாற்றங்களும் ஏராளம். இந்த ஆண்டில் நிகழ்ந்த அப்படிப்பட்ட சில வரவேற்கத்தக்க மாற்றங்கள் பெண்களுக்கும் பெண்ணுரிமைக்காகப் போராடுபவர்களுக்கும் சற்று நம்பிக்கை அளித்துள்ளன. அவற்றின் தொகுப்பு இது:

வடுவை நீக்கும் கல்வி உரிமை

டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் உடல்ரீதியான இயலாமை உடையோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அமிலத் தாக்குதலுக்கு ஆளானோர், தாலசீமியா, உயரக் குறைவுடையோர் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். நடப்புக் கல்வியாண்டில் இருந்து இவர்களும் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைவர். அமில வீச்சால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் பெண்கள்தாம். இந்தக் கொடூரத் தாக்குதலால் பல பெண்கள் கல்வியைக் கைவிடும் சூழல் உள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற இட ஒதுக்கீடு அவர்கள் கல்வியைத் தொடர உதவும்.

முத்தலாக்குக்குத் தடை

இஸ்லாமிய ஆண்கள் ஒரே நேரத்தில் மூன்றுமுறை ‘தலாக்’ சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் தடைசெய்தது. பல ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. ஆகஸ்ட் 22 அன்று அந்த அமர்வின் மூன்று நீதிபதிகள் ‘உடனடி முத்தலாக்’ நடைமுறையைத் தடைசெய்தனர். நீதித் துறை விதிகளின்படி பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இந்திய இஸ்லாமியப் பெண்களின் திருமணம் சார்ந்த உரிமைகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது.

கணவன் என்றாலும் குற்றமே

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 18 வயதுக்குக் கீழுள்ள பெண்ணுடன் பாலியல் உறவுகொள்வது பலாத்காரக் குற்றமாகக் கருதப்படும். ஆனால், 15 முதல் 18 வயதுக்குள் இருக்கும் மனைவியுடன் அவரது ஒப்புதல் இன்றிகூடக் கணவன் பாலியல் உறவு கொள்ளலாம் என்ற விதிவிலக்கு இருந்தது. இந்தியாவில் பெண்ணுக்கான திருமண வயது 18-ஆக இருந்தாலும் மேற்சொன்ன விதிவிலக்கைப் பயன்படுத்தி, பல ஏழைக் குடும்பங்கள் 14, 15 வயதுகளிலேயே மகள்களுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இந்நிலையில் 18 வயதுக்குள் இருக்கும் பெண் தன்னுடைய மனைவி என்றாலும் அவருடன் பாலியல் உறவுகொள்ளும் ஆண் பாலியல் பலாத்காரம் செய்தவராகிறார் என்றும் பாதிக்கப்பட்ட பெண், குற்றம் நடந்து ஒரு ஆண்டு காலத்துக்குள் புகார் அளிக்கலாம் என்றும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 11-ல் வழங்கியது.

முதல் முயற்சியிலேயே வெண்கலக்கோப்பை

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற நான்காவது பாலி கோப்பை சர்வதேசப் போட்டியில் சக்கர நாற்காலி கூடைப்பந்து பிரிவில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 பேர்கொண்ட இந்தியப் பெண்கள் கூடைப்பந்து குழு பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒரு சர்வதேச பாரலிம்பிக் போட்டியில் இந்தியப் பெண்கள் குழு பங்கேற்றது இதுவே முதல் முறை. 15 நாட்கள் மட்டுமே இந்த குழுவினர் ஒரு அணியாகச் சேர்ந்து விளையாடப் பயிற்சி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிகளுக்குக் கிடைத்த நீதி

2011-ல் மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆறு ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதமும் கிடைத்துள்ளது. சிறார் மீதான பாலியல் குற்றங்களைத் தண்டிப்பதற்கான பாக்ஸோ சட்டம் 2012-ல் அமலானது. அதற்கு முன்பு நடந்த சிறார் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்ற நிலையில் மற்ற சட்டங்களைப் பயன்படுத்தி சாட்சிப் பிறழ்வுகளைத் தடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரின் அடையாளம்கூட வெளியே தெரியாமல் பாதுகாத்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பைப் பெற்றுள்ளனர்.

மாதவிடாய்க்கு விடுப்பு

ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவில் மும்பையில் இயங்கும் ஸ்டார்ட்-அப் ஊடக நிறுவனம், மாதவிடாய் வந்த பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன்கூடிய விடுப்பை அறிவித்தது. இதனால் ஈர்க்கப்பட்டு கேரளத்தின் முன்னணி மலையாள ஊடக நிறுவனம் மாத்ருபூமி, பெண் ஊழியர்கள் மாதவிடாயின் ஏதாவது ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற விதியை நடைமுறைப்படுத்தியது. சென்னையில் இயங்கும் மேக்ஸ்டர் நிறுவனமும் மாதவிடாய் விடுப்பை அறிவித்தது.

தனிமைப்படுத்துவது குற்றம்

நேபாளத்தின் கிராமப் பகுதிகளில் மாதவிடாய் வந்த பெண்களைத் தனிக் குடிலில் தங்கவைக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. இதைத் தடுக்க ஆகஸ்ட் மாதம் நேபாள நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மாதவிடாய் வந்தபெண்களைத் தனிமைப்படுத்துவது குற்றம் என்றும் அப்படிச் செய்பவர்களுக்கு மூன்று மாதச் சிறை அல்லது ரூ.2,000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பெண்களும் கார் ஓட்டலாம்

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது தடைசெய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக இதை எதிர்த்துப் பெண்ணுரிமை ஆர்வலர்கள் போராடிவந்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் சவுதி அரசர் சல்மான் இந்தத் தடையை நீக்கினார். மதவாதிகளின் எதிர்ப்புக்கு இடையில்தான் இது சாத்தியமாகியுள்ளது. இதன்மூலம் சவுதி பெண்கள் கார் ஓட்டுநர் வேலையையும் பெற முடியும்.

காவல்துறையில் கால்பதித்த திருநங்கை

திருநங்கை பிரித்திகா யாஷினி, சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக அக்டோபர் 19-ல் பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா, குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு 2011-ல் சென்னைக்கு வந்தார். மகளிர் தங்கும் விடுதியின் காப்பாளராக இருந்துகொண்டே காவல்துறை பணிக்கு விண்ணப்பித்தார். அவரது பாலினத்தைக் காரணம்காட்டி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்தப் பணியைப் பெற்றிருக்கிறார்.

கவனம் ஈர்த்த வீராங்கனைகள்

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மகளிர் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. 2017 மகளிர் உலகக் கோப்பை அந்த நிலையைச் சற்று மாற்றியது. இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி 171 ரன்கள் அடித்தது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்று இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி விளையாடியதை நாடே நம்பிக்கையுடன் பார்த்தது. அதில் போராடித் தோற்றாலும் இந்திய மகளிர் கிரிக்கெட்டுடை கவனம் பெறவைத்தது மகளிர் அணியினரின் மகத்தான சாதனை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்