களம் புதிது: உழைக்கும் பெண்களை உயர்த்தும் வங்கி!

By டி.எல்.சஞ்சீவி குமார்

 

கா

ந்தி பிறந்த குஜராத் மண்ணில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வற்றாத ஜீவநதியைப் போல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது காந்தியம். அந்த நதியின் ஒரு துளிதான் ‘ஸ்ரீமகிளா சேவா ஷககாரி வங்கி’. இது காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எளிய பெண்மணி உருவாக்கிய காந்தியப் பொருளாதாரச் சித்தாந்தத்தின் அடிப்படையிலான அமைப்பு. குஜராத் மட்டுமின்றி உலகெங்கும் 32 நாடுகளில் சாமானிய உழைக்கும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை இது உயர்த்தியிருக்கிறது.

வங்கியில் வாழும் காந்தி

அகமதாபாத்தின் எல்லீஸ் பாலத்துக்கு அடியில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் இருக்கிறது ஸ்ரீமகிளா சேவா ஷககாரி வங்கி. வங்கியை அடைந்தபோது மாலை ஏழு மணியாகிவிட்டது. கதவு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே விளக்கு வெளிச்சம் இருக்கவே மெதுவாகக் குரல் கொடுத்தோம். எட்டிப் பார்த்த பெண்ணிடம் பத்திரிகையாளர் என்றவுடன், முக மலர்ச்சியுடன் பூட்டைத் திறந்துவிட்டார். ஆச்சர்யமாக இருந்தது. “பல கோடி ரூபாய் புழங்கும் வங்கியில் பெரிதாக விசாரிக்காமல் அதுவும் நேரம் கடந்து எங்களை அனுமதிக்கிறீர்களே, சந்தேகமோ அச்சமோ இல்லையா?” என்றோம். “காந்தி எங்களுடன் இருக்கிறார். இவை வெறும் வார்த்தைகள் அல்ல, எங்கள் வங்கியின் கோஷமும் இதுதான்” என்று புன்னகையுடன் சொன்னார். வங்கியின் சுவர்களிலும் அந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததன.

31chlrd_bhumika joshi (2) பூமிகா இடைவிடாத சேவை

அங்கே அந்த நேரத்திலும் காய்கறிகள் எஞ்சிய கூடையுடன் அமர்ந்திருக்கிறார் பெண்மணி ஒருவர். இன்னும் சில பெண்கள் பணம் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டிருந்த நம்மை வரவேற்ற பூமிகா ஜோஷி, வங்கியின் துணை மேலாளர். “அன்பும் கருணையும்தான் எங்கள் வங்கியின் அடிப்படை விதிமுறை. கூலி வேலைபார்க்கும் பெண்கள், காய்கறி விற்பனை செய்பவர்கள் எனப் பலரும் மாலை ஆறு மணிக்கு மேல்தான் வங்கியில் வந்து பணம் செலுத்த முடியும். அதனால், பெரும்பாலும் நேரம் பார்ப்பதில்லை.

குழந்தையைப் பாம்பு கடித்துவிட்டது என்று நள்ளிரவு போன் செய்து எழுப்பிய பெண்களுக்கும்கூட வங்கியைத் திறந்து பணம் தந்திருக்கிறோம்” என்கிறார் பூமிகா. உழைக்கும் சாமானியப் பெண்கள்தான் இவர்களுடைய வாடிக்கையாளர்கள். பீடி சுற்றும் பெண்கள், விவசாயிகள், வீட்டு வேலை செய்பவர்கள், அப்பளம், ஊறுகாய், ரெடிமேட் சப்பாத்தி விற்பவர்கள், தையல் உள்ளிட்ட கைத்தொழில் செய்பவர்கள் எனப் பல்வேறு சுயதொழில் புரியும் பெண்கள் அதில் அடக்கம்.

அவர்களுக்கு வங்கி நடைமுறைகள், பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைகள் ஆகியவற்றைக் கற்றுத்தருகிறார்கள். இங்கே வீட்டுக் கடன், தொழில் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் உண்டு.

உழைக்கும் பெண்களால் உருவான வங்கி

இந்த வங்கி தொடங்கப்பட்ட வரலாறு சுவாரசியமானது. 1970-களின் தொடக்கத்தில், அகமதாபாத்தைச் சேர்ந்த இலா பென், சாலையோரம் காய்கறி விற்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்களின் உரிமைகளுக்கான போராளியாக இயங்கிவந்தார். சிறு வயதிலேயே காந்தியக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இவர், காய்கறிச் சந்தையில் சிறு கடை வைத்திருக்கும் பெண்கள் பலரும் தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி சிரமத்துக்குள்ளானதைப் பார்த்தார். எந்த வங்கியின் கதவுகளும் இந்தப் பெண்களுக்காகத் திறக்கவில்லை.

31chlrd_ela-bhatt (2) இலா பென் right

அப்போதுதான் அந்தப் பெண்களுக்காகவே வங்கியைத் தொடங்கலாம் என்ற யோசனை இலா பென்னுக்கு ஏற்பட்டது. ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. நிதி நிர்வாகத்தில் ஆண்களே ஆதிக்கம் செலுத்திவந்த சூழலில் இவரது யோசனையைப் பலரும் ஏளனம் செய்தார்கள். அரசு இயந்திரமும் செவிசாய்க்கவில்லை. மூன்று ஆண்டுகள் தொடர் போராட்டத்துக்குப் பிறகு ரிசர்வ் வங்கி இவரது கோரிக்கையை, ‘ரூ.40 ஆயிரம் முதலீட்டுத் தொகை தேவை’ என்ற நிபந்தனையுடன் ஏற்றது. அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை அது.

உழைக்கும் சாமானியப் பெண்களிடம் இலா பென் ஒரு வேண்டுகோளை வைத்தார். நான்காயிரம் பெண்கள் தலா ரூ.100 அளித்தால் அவர்களின் பங்களிப்புடன் வங்கி தொடங்கப்படும் என்றார்.

மறுநாளே ஆயிரக்கணக்கான உழைக்கும் பெண்கள் இவர் வீடு முன் திரண்டார்கள். பல ஆண்டுகளாகத் தாங்கள் சேர்த்து வைத்திருந்த சேமிப்பைக்கொண்டு வந்திருந்தார்கள் அவர்கள். சிலர் தாலியை விற்றுப் பணம் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னார்கள். சிலர் தங்களது சிறு விவசாய நிலத்தை விற்றும் பணத்தைக் கொண்டுவந்திருந்தார்கள்.

பலர் வீட்டிலிருந்த சில்லறைகளைப் பொறுக்கிக்கொண்டு வந்து தந்தார்கள். ஒரே நாளில் ரூ.40 ஆயிரம் திரண்டது. இப்படி உழைக்கும் பெண்களின் வியர்வையில் உருவானதுதான் ஸ்ரீ மகிளா சேவா ஷககாரி வங்கி.

பெண்களுக்கான உலக வங்கி

சில ஆண்டுகளில் வங்கி நன்றாகச் செயல்படத் தொடங்கியதும் உலக அளவில் இதே போன்றதொரு அமைப்பை நிறுவத் திட்டமிட்டார் இலா பென். ஐ.நா. சார்பில் மெக்ஸிகோவில் நடந்த உழைக்கும் சாமானியப் பெண்களுக்கான கருத்தரங்கில் தனது திட்டத்தை முன்வைத்தார். நியூயார்க் வால் ஸ்டீரிட்டைச் சேர்ந்த பிரபல வணிகக் குழுமத்தின் மிக்கேலா வால்ஷ், ஆப்பிரிக்காவின் கானாவைச் சேர்ந்த எஸ்தர் ஒக்லூ ஆகியோர் இவரது திட்டத்துக்கு ஆதரவளித்தனர். ஐ.நா.வின் உதவியுடன் 1979-ல் ‘பெண்களுக்கான உலக வங்கி’ தொடங்கப்பட்டது.

உள்ளூரில் கிடைக்கும் கிராமப் பொருட்கள் மற்றும் கிராம மக்களின் உழைப்பைக்கொண்டு கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் காந்தியப் பொருளாதாரச் சித்தாந்தமே பெண்களுக்கான உலக வங்கியின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவிலும் பெண்களுக்கான உலக வங்கியின் நட்புக் குழுமம் தொடங்கப்பட்டது. குஜராத்தில் பெண் தொழில்முனைவோர் பலருக்கும் ஏற்றுமதி உள்ளிட்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது பெண்களுக்கான உலக வங்கி. அமெரிக்கா, சீனா, ஆப்பிரிக்கா, ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 32 நாடுகளில் பரவியிருக்கும் பெண்களுக்கான உலக வங்கி, அங்கெல்லாம் இருக்கும் உழைக்கும் பெண்களுக்கான நிதியுதவிகளைச் செய்துவருகிறது.

மூன்றாம் உலக நாடுகளில் பாலியல் தொழில், குழந்தைத் தொழிலாளர் கொடுமைகளிலிருந்து பெண்களை மீட்டதில் இந்த வங்கிக்கு முக்கியப் பங்கு உண்டு. கடந்த 2016-ம் நிதியாண்டில் இந்த வங்கியின் மொத்தப் பற்று, வரவு மற்றும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 32,607,697 டாலர்கள்.

தற்போது இலா பென்னின் வயது 84. இவர் வித்திட்ட பெண்களுக்கான உலக வங்கி இன்று உலகப் பொருளாதாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அந்த வங்கியின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் இலா பென் உலகம் முழுவதும் சென்று பேசிவருகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் மறக்காமல் சொல்வது, ‘காந்தி எங்களுடன் இருக்கிறார்’ என்பதே.

ஆம், காந்தி எப்போதும் நம்முடன் இருப்பார்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்