எசப்பாட்டு 12: சந்தேகம் என்னும் பெருநெருப்பு

By ச.தமிழ்ச்செல்வன்

 

ருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பெண் விடுதலை குறித்த கருத்துகளைப் பேசிவிட்டு இறங்கினால், யாராவது ஒருவர் கொஞ்சம் தனியாகப் பேசணும் என அழைப்பது இப்போதெல்லாம் அதிகமாகிவருகிறது. அப்படி அழைப்பவர்கள் எல்லோருமே விதிவிலக்கின்றித் தொடங்கும் வார்த்தைகள்: “பொம்பளைங்களுக்காக இப்படி மாஞ்சு மாஞ்சு பேசறீங்களே, எங்க அண்ணன் கதையைக் கொஞ்சம் கேளுங்க.”

குடும்பங்களை அவிக்கும் நெருப்பு

நிச்சயமாக அவர்களிடம் ஓர் உண்மைக் கதை இருக்கும். சமீபத்தில் ஒருவர் சொன்ன கதை இது. “எங்க அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி நாலு வருசம் ஆச்சு. ஒரு பெண் குழந்தை இருக்கு. திடீர்னு எங்க அண்ணிக்கு அண்ணன் மேலே சந்தேகம் வந்துடுச்சி. எதிர்வீட்டுப் பொண்ணுக்கும் எங்க அண்ணனுக்கும் முடிச்சு போட்டு ஏகமாகக் கற்பனை பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாங்க. இப்போ உச்சத்துல நிக்கிறாங்க. எதுத்த வீட்டுப் பொண்ணு அவங்க கணவனோடு ஸ்கூட்டர்ல உட்காந்து எங்க அண்ணிக்கு இயல்பா டாட்டா சொன்னாக்கூட அவ உங்களுக்குத்தான் டாட்டா சொல்றான்னு அண்ணன்கிட்டே சொல்லுவாங்க. ஜன்னல் பக்கம் நின்னா குத்தம். வாசல்படியிலே நின்னா குத்தம்னு சொந்த வீட்டுல சுதந்திரமா இருக்க முடியாம எங்க அண்ணன் நடைப்பிணமாக வாழ்ந்துகிட்டிருக்கார்.”

இன்னொருவர் சொன்ன கதையில் அவருடைய மருமகள் தன் மகனைச் சித்திரவதை செய்வதாகச் சொன்னார். சம்பாத்தியம் முழுவதையும் கணவன் தனக்குத் தெரியாமல் அவனுடைய அப்பா அம்மாவுக்கும் தங்கைக்கும் வாரி வழங்கிக்கொண்டிருப்பதாக அவளுக்குச் சந்தேகம்.

இன்று முகநூல் நட்புவட்டம் பெருகிவரும் சூழலில் தன் கணவன்/மனைவியின் முகநூல் பக்கத்தில் வரும் ‘லவ் யூ செல்லம்...’ போன்ற வரிகளைத் தடவித் தடவிப் பார்த்து அதில் கூடுதலாக ஏதாவது ஒட்டியிருக்கிறதா என்று ஆராய்ந்து சண்டைகள் போடுவதும் அதிகமாகியிருக்கிறது.

பல பரிமாணங்களில் பரவிக் கிடக்கும் பிரச்சினைகளில் சந்தேகம் முக்கியமானது.சந்தேக நெருப்பில் கருகிப்போன குடும்பங்கள் ஏராளம். 19-ம் நூற்றாண்டில் வெளியான இப்சனின் ‘பொம்மை வீடு’ தொடங்கி எத்தனையெத்தனை கதைகள்! பொம்மை வீடு கதையின் நாயகி டோரா, சந்தேகப்படும் கணவனை உதறி வீட்டைவிட்டு வெளியேறுவாள். அப்படி எத்தனை பேரால் உறவுகளை உதிர்த்துவிட்டு வெளியேறிவிட முடிகிறது?

ஊதிப் பெருக்கப்படும் சிறு குற்றங்கள்

இப்படி ஆண்கள் சொல்லும் கதைகளை அப்படியே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நெருப்பில்லாமல் புகையாது என்பதே என் கட்சி. ‘பெண்களைப் பார்த்துப் பல்லிளிக்காத ஆண்கள் உண்டா?’ என்று சுந்தர ராமசாமி ஒரு கதையில் எழுதியிருப்பார். மனதுக்குள் இளிப்பது, வெளித்தெரிய இளிப்பது, வழிவது, பின்னாலேயே போவது என்று அதில் பல படி நிலைகள் உண்டு. அதைப் பெண்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்படிப் ‘பிடிபட்ட’ ஆண்கள் செய்த குற்றம் சிறியதாக இருந்தாலும், அவற்றைப் பெண்கள் தங்கள் கற்பனையில் ஊதிப் பெருக்கித் தாங்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி அவரையும் வாழவிடாமல் கலங்க வைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. ‘தப்பு செய்தவன் என்று சொல்வதற்கும் தப்பான ஆள் என்று தீர்ப்பு சொல்வதற்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கிறது? பெண்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?’ என்பது ஆண்களின் புலம்பல்.

ஆண்கள் பார்க்க மறுக்கும் மறுபக்கம்

இதற்கு மறுபக்கமாகப் பெண்கள் மீது ஆண்கள் சந்தேகப்பட்டால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு வண்டி வண்டியாக உண்மைக் கதைகள் இருக்கின்றன.

மத்திய கால வரலாற்றில் ‘சேஸ்டிடி பெல்ட்’ எனப்படும் ‘கற்புப் பாதுகாப்பு இடுப்புக் கச்சை’களை உலோகத்தில் தயாரித்துப் பெண்களுக்கு மாட்டி, பூட்டுப்போட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஆண்கள் போர்க்களத்துக்கும் புனிதப் பயணங்களுக்கும் வியாபாரத்துக்கும் போன கதைகள் ஏராளம் உண்டு. கி.ராஜநாராயணன் தொகுத்த ‘நாட்டுப்புறப் பாலியல் கதைகள்’ புத்தகத்திலும் இதுபோன்ற கதைகள் உண்டு.

‘சார்... அதெல்லாம் எந்தக் காலத்துக் கதை. இப்ப ஏன் அதைப் பேசணும்?’ என்று கேட்பவர்களுக்காக என் சொந்த ஊரில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

கோவில்பட்டியில் ராணுவ வீரனான ஒரு இளைஞன் தன் அக்காள் மகளை விரும்பித் திருமணம் செய்தான். அவனுக்கு மனைவி மீது எப்படியோ சந்தேகம் வந்துவிட்டது. அவளுடைய பேரழகே அவன் மனதில் சந்தேக நெருப்பை மூட்டிவிட்டதைப் பின்னர் அறிய முடிந்தது. அவன் ராணுவத்தில் நிம்மதியில்லாமல் இருப்பான். ஆண்டுக்கு இருமுறை விடுப்பில் வந்துவிட்டுப் போகும்போது மனைவிக்கு மொட்டையடித்து அவள் அழகைக் குறைத்துவிட்டுப் போவான். அவள் காலம் பூராவும் மொட்டைத் தலையோடு வாழ்ந்தாள்.

இடையில் அந்த ராணுவ வீரனின் தம்பி தன் அண்ணியிடம் பாலியல் சேட்டைகள் செய்யப்போக, அவள் கத்தி கூப்பாடு போட்டு ‘உன் அண்ணனிடம் சொல்கிறேன்’ என்று மிரட்டியிருக்கிறாள். தம்பி முந்திக்கொண்டு அண்ணனுக்கு போன் பண்ணி, அண்ணி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகச் சொல்லிவிட்டான். ஏற்கெனவே சந்தேகச் சகதியில் விழுந்து கிடந்த அண்ணன் ஆத்திரம் கொண்டு பறந்து வந்தான்.

அவளை அடித்து உதைத்துக் காயப்படுத்தி மீண்டும் மொட்டையடித்து அவளை நிர்வாணமாக்கி, அவள் பிறப்புறுப்பில் சுண்ணாம்பு, மூக்குப்பொடி போன்றவற்றைத் திணித்து வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டான்.

தனிமைச் சிறைக்குள் பல நாள் பட்டினி கிடந்த அந்தப் பெண் எப்படியோ கதவின் ஆணிகளை நெம்பித் திறந்து ஆடையில்லாமல் வெளியே ஓடிவந்தாள். அக்கம் பக்கத்தார் அவளுக்கு ஆடை கொடுத்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 52 நாட்கள் சிகிச்சை பெற்ற அந்தப் பெண்ணை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சந்தித்துத் தைரியப்படுத்தி வழக்குப் பதிவுசெய்தனர். ராணுவத்துக்கு ஓடிவிட்ட அவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். இன்றைக்கும் அந்த வழக்கு முடியவில்லை.

சந்தேகம் பெண்ணுக்கு வந்தால் வார்த்தைகளாகவும் வசவுகளாகவும் அழுகையாகவும் வெளிப்படுகிறது. ஆணுக்கு வந்தால் அது எளிதாக வன்முறை வடிவம் எடுக்கிறதே ஏன்? சந்தேகத்தின் பாற்பட்ட எதிர்வினையிலும்கூட ஆண் பெண் பேதம் படிந்துள்ளது.

பேச்சே சிறந்த தீர்வு

பெண்ணை சக மனுஷி என்று பார்க்காமல் உடம்பாகவும் உடைமையாகவும் பார்க்கும் ஆணாதிக்க மனோபாவமே வன்முறைக்குக் காரணம். தற்சார்பில்லாமல் ஆணைச் சார்ந்ததாகப் பெண்ணின் வாழ்க்கை இருப்பதால் வாழ்க்கை உத்தரவாதமற்ற நிலையில் ‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்ற உணர்வு பெண்ணுக்குக் கூடுதலாகிவிடுகிறது. ஏமாந்துவிடக் கூடாதென்ற பதற்றத்தில், அழுகையில் முகம்புதைக்க வேண்டிவருகிறது. மனம் திறந்த பேச்சைவிட வேறென்ன தீர்வு இருக்க முடியும்?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்