ச
மூக வலைத்தளங்களைப் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்துவோர் மத்தியில், குழந்தைகள் வளர்ப்பு, வளரிளம் பெண்களுக்கு ஆலோசனை, மருத்துவக் குறிப்புகள், மனநல ஆலோசனை எனப் பல தரப்பட்ட சமூக அக்கறைக் குறிப்புகளை வழங்கிவருகிறார் ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின். இவரது 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுவருகின்றன. 2015 டிசம்பர் 30-ல் இருந்து முகநூலில் குழந்தை வளர்ப்பு குறித்த பதிவுகளை எழுதத் தொடங்கிய இவரை ஒன்றரை லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
தந்தை ஊட்டிய தமிழ்ப்பற்று
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஆஷா லெனினுடைய கணவர் லெனின் முத்துராஜாவும் ஹோமியோபதி மருத்துவர்தான். கணவர் அளித்த ஊக்கத்தால்தான் சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கத் தொடங்கியதாகச் சொல்கிறார். இவரது பல்வேறு வீடியோக்கள் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தாய்மொழியைக் கற்பதன் முக்கியத்துவத்தையும் விளக்குபவை. ராணுவ வீரரான இவருடைய தந்தை இதற்கு முக்கியக் காரணம்.
“வேலூர் மாவட்டத்தின் அம்பலூர் கிராமம்தான் என் சொந்த ஊர். என் தந்தை கே.தியாகராஜன் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் நாட்டுப்பற்றோடு தமிழர்களின் தொன்மையான கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை விளக்கும் கதைகளைச் சொல்லி தமிழ்ப்பற்றையும் சமூக அக்கறையையும் ஊட்டி வளர்த்தார். எனது கிராமமான அம்பலூரிலிருந்து நானும் என் தம்பியும் புற்றுக்கோவிலுக்கு சைக்கிளில் செல்வோம், அங்கிருந்து பஸ் பிடித்து திருப்பத்தூர் சென்று படிப்போம். பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் மதுரை திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனையில் படித்தேன். அங்கு பேராசிரியர்களின் கற்பித்தலில் மருத்துவத்தோடு, பல மகத்துவங்களையும் தெரிந்துகொண்டோம். உடன் படித்த லெனின் முத்துராஜாவைக் காதலித்து மணந்து கொண்டேன். குழந்தைகள் பிறந்தபோது அவர்களை வளர்க்கும் முறை குறித்து பல நூல்களைத் தேடிப் படித்தேன். குழந்தைகள்தான் எனது உலகம். அவர்களுக்காக நான் கற்றதையும் பெற்றதையும் மற்ற பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினேன்” என்கிறார் ஆஷா.
தாய்மொழியைத் தவிர்க்காதீர்
குழந்தைகளுக்கு அவசியம் தாய்மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஆஷா, அதற்கான காரணங்களை விளக்குகிறார். “குழந்தையின் மூன்று வயதுவரை தாய்மொழியைக் கற்றுக்கொடுங்கள். பின்னர், அக்குழந்தை 5 வயதுக்குள் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் பெற்றுவிடும். ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளைத் தாய்மொழி மூலம் புரியவைத்தால், விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு.”
அதிகம் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்தான் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடியும் என்கிற கற்பிதத்தையும் உடைக்கிறார் ஆஷா. “குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதற்குப் பெற்றோர் டாக்டராகவோ இன்ஜினீயராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்துல்கலாம் உட்பட பல சிந்தனையாளர்களும் சாதனையாளர்களும் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான். ஒரு குழந்தையைச் சிறந்த அறிவாளியாகவும் சமூக அக்கறையுள்ள மனிதனாகவும் உருவாக்குவதில் பெற்றோருக்கு முக்கியப் பங்குள்ளது” என்கிறார்.
வெளியுலகைக் காட்டுங்கள்
குழந்தைகள் கஷ்டப்படாமல் வளர வேண்டும் என்று நினைக்கும் சில பெற்றோர் வீட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள். ஆனால், சிறு வயதிலேயே கள அனுபவம் பெற வேண்டிய அவசியத்தை விளக்குகிறார் ஆஷா. “எதுவும் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டாம், அவர்களைக் களத்தில் சென்று கற்றுக்கொள்ளச் செய்யுங்கள். தாம் பட்ட கஷ்டங்களைப் பிள்ளைகள் படக் கூடாது எனப் பெற்றோர் நினைப்பதே தவறான சிந்தனை. வெளியுலகுக்குக் கொண்டு வாருங்கள். நாள்தோறும் காய்கறிச் சந்தைக்கு அழைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் குழந்தை ஓர் இடத்தையும் அது சார்ந்த மற்ற தொடர்புகளையும் தெரிந்துகொள்ளும். இப்படி சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்ளும். பள்ளியில் மதிப்பெண் பெறுவது, முதல் மாணவனாக வருவது மட்டுமே வாழ்க்கையல்ல. அதையும் கடந்து வாழ்க்கை உள்ளது என்பதை உணர்த்த வேண்டும்.”
பெருமைகளை நினைவூட்டல்
குழந்தை வளர்ப்பு மட்டுமல்லாமல் தமிழர்களின் பெருமைகளையும் கலாச்சாரச் சிறப்புகளையும் விளக்கும் வீடியோக்களையும் வெளியிடுகிறார் ஆஷா “செம்புக் குடத்தில் வைத்த தண்ணீரை வைரஸ், பாக்டீரியாக்கள் அண்டாது என்பதை உணர்த்திய தமிழர்களின் நுண்ணறிவு வரும் தலைமுறைக்கும் தெரிய வேண்டும். தமிழ்க் கலாச்சாரத்தில் பெரியவர்களைக் கண்டால் எழுந்து மரியாதை செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் என் வீடியோக்கள் மூலம் நினைவூட்டுவதை முக்கியக் கடமையாகக் கருதுகிறேன்” என்கிறார் ஆஷா.
மேலும் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்தும் வீடியோக்களும் இவரிடமிருந்து நிறைய வந்துள்ளன.
“நமது அன்றாட வாழ்க்கையில் செல்போன், கம்ப்யூட்டர் என உயிரற்ற பொருட்களோடு தொடங்கி இரவில் டிவி உள்ளிட்ட உயிரற்ற பொருட்களோடு அன்றாடப் பொழுது முடிவடைகிறது. இதில் எங்கே உணர்வுகள் பரிமாறப்படுகின்றன? இயற்கையில் இணைந்தவாறு காலையில் சூரிய வணக்கத்தில் தொடங்கி இரவில் நிலாச்சோறில் முடிவடைய வேண்டும். இதுபோன்ற சின்னச் சின்ன வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்களையும் என் வீடியோக்களில் வெளிப்படுத்துகிறேன். எனது கிளினிக்குக்கு வரும் பெற்றோர், மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ஆலோசனைகள் வழங்கிவருகிறேன். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்குத் தன்னம்பிக்கையூட்டிப் பேசிவருகிறேன்” என்று தொடரும் தன் பணிகளைப் பட்டியலிடுகிறார் ஆஷா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago