தி
ரைத் துறையில் ஒளிவீசுவதால் மட்டும் திரைத்துறைப் பெண்களுக்கு அனைத்தும் சாதகமாக நடந்துவிடுவதில்லை. பெண் என்பதாலேயே அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் அதிகம். ஒவ்வோர் ஆண்டும் அவை புது வடிவம் எடுக்கின்றன. இந்த ஆண்டு அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும் திரைத் துறை சார்ந்தும் சந்தித்த பிரச்சினைகளும் அவற்றை அவர்கள் துணிச்சலாக எதிர்கொண்ட விதமும் கவனத்துக்குரியவை.
துணிச்சலால் கிடைத்த நீதி
பிரபல மலையாள நடிகை ஒருவர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்து ஏறிய சில ஆண்கள் ஓடும் காரிலேயே அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண், நடிகை என்ற தன் அந்தஸ்து பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாகக் காவல்துறையில் புகார் அளித்தார். நடிகைமீது நடத்தப்பட்ட அத்துமீறலுக்குக் காரணம் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான திலீப் என்பதும் பாதிக்கப்பட்ட நடிகைக்கும் அவருக்கும் இடையிலான முன்விரோதமே இதற்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட திலீப், இப்போது பிணையில் வெளியே வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பார்வதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட மலையாள நடிகைகள் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘விமன் இன் சினிமா கலெக்ட்டிவ்’ என்ற அமைப்பை உருவாக்கி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தனர்.
நடிகை எதிர்கொண்ட அவலம்
மலையாள நடிகை மீதான பாலியல் வன்முறைச் சம்பவம் நாடு தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தமிழ் நடிகை வரலட்சுமி சரத்குமார், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தன்னிடம் பாலியல்ரீதியான அனுகூலங்களைக் கோரியதாக ட்விட்டரில் பகிரங்கமாக அறிவித்தார். இதன் மூலம் திரைத் துறையில் நுழைய விரும்பும் பெண்கள், ‘காஸ்டிங் கவுச்’ எனப்படும் ‘படுக்கையைப் பகிர்ந்துகொள்ள’ அழைக்கப்படும் அவலநிலை விவாதப் பொருளானது. பல நடிகைகளும் பிரபலங்களும் தங்களது மோசமான அனுபவங்களை வெளியிட்டனர். திரைத் துறையில் இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை வரலட்சுமி தொடங்கினார். பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளுக்குத் தனி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அமைப்பின் மூலம் முன்வைத்தார்.
குறும்படம் வெளிப்படுத்திய கோணல்கள்
பொதுவாக சமூக வலைத்தளங்களில் திரைப்படங்கள் கிளப்பும் விவாதத்தை ‘லட்சுமி’ என்ற குறும்படம் கிளப்பியது. கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதை அறியும் ஒரு பெண், தானும் வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது போன்ற கதையமைப்பைக் கொண்ட இந்தப் படம் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த கலைஞர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக அந்தப் படத்தின் மையப் பாத்திரத்தில் நடித்த லட்சுமி பிரியா சந்திரமவுலியைப் பாலியல்ரீதியாக இழிவுபடுத்தும் பல்வேறு மீம்கள் உலாவந்தன.
தலைக்கு வைக்கப்பட்ட விலை
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ இந்தித் திரைப்படம், சித்தூர் ராணி பத்மாவதி பற்றியது. ராஜபுத்திர அரசன் ரத்தன் சிம்ஹாவை மணந்த பத்மாவதி, அவரது மரணத்துக்குப் பின் உடன்கட்டை ஏறி இறந்ததாக நம்பப்படுகிறது. இந்தப் படம் தங்கள் வம்சத்து அரசியான பத்மாவதியையும் அதன் மூலம் தங்கள் வம்சத்தையும் இழிவுபடுத்துவதாகப் பல ராஜபுத்திர அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. இதையடுத்து டிசம்பர் 1 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் இன்னும் தணிக்கை சான்றிதழ்கூடப் பெறவில்லை.
பன்சாலியின் தலைக்கும் பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலைக்கும் பரிசுத் தொகைகளைப் பலர் அறிவித்தனர். இப்படி அறிவித்தவர்களில் ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சூரஜ் பால் அமு பன்சாலியும் ஒருவர். பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும் தணிக்கை வாரியம் பார்த்திராத படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். கவுரவத்தின் சின்னமாகப் பெண்கள் பாவிக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்கும் வன்முறைக்கும் ஆளாக்கப்படும் போக்கின் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.
இணைய ‘வீர’த்துக்கு எதிராக நிஜ வீரம்
மலையாள சினிமாவின் மூத்த நட்சத்திரங்களில் ஒருவரான மம்முட்டி நடித்த ‘கசாபா’ திரைப்படத்தில் இடம்பெற்ற பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான வசனங்களைப் பற்றித் துணிச்சலாக விமர்சித்திருந்தார் நடிகை பார்வதி. இதற்காக சமூக வலைத்தளங்களில் இவருக்குக் கடுமையான வசைகளும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. ஆனால், சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த ஒரு இளைஞர் மீது காவல்துறையில் பார்வதி புகாரளித்தால் அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வரவேற்கத்தக்க மாற்றம்
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளையோ பெண் கதாபாத்திரத்தையோ மையப்படுத்திய படங்கள் வருவது அதிகரித்திருப்பது, இது போன்ற படங்களுக்கு இருக்கும் வரவேற்பின் வெளிப்பாடு. இந்தப் படங்கள் பெண்களையும் அவர்களது பிரச்சினைகளையும் கையாளும் விதத்தில் தென்படும் போதாமைகளைத் தாண்டி இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதுதான்.
2017-ல்தமிழில் வெளியான பெண் மைய படங்களின் தொகுப்பு இது:
தரமணி
எவ்வளவு வசதியான நவீன வாழ்க்கை வாழ்ந்தாலும் உடன் இருக்கும் ஆண்களின் சந்தேகப் பார்வையும் அவர்களால் போகப்பொருளாகப் பார்க்கப்படுவதும் பெண்களைப் பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இருப்பதை அழுத்தமாக எடுத்துரைத்த விதத்தில் ராம் இயக்கிய இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது.
மகளிர் மட்டும்
குடும்ப வாழ்வின் அழுத்தங்களில் அமிழ்ந்துகிடக்கும் மூன்று பெண்கள் தங்கள் நட்பைப் புதுப்பிக்க நினைக்கிறார்கள். அந்தப் பயணத்தில் சுதந்திரத்தை உணர்வதையும் அவர்களது இல்லாமையின் மூலம் அவர்களது முக்கியத்துவத்தைக் குடும்பத்து ஆண்கள் புரிந்துகொள்வதையும் சித்தரித்தது இந்தப் படம். குடும்ப அமைப்பில் பெண்களின் மகத்துவமான பங்கை இப்படம் அழுத்தமாகப் பதியவைத்தது.
அறம்
மக்கள் பிரச்சினையை அதன் தீவிரத்தன்மை குறையாமல் பேசிய படத்தில் பெண் மாவட்ட ஆட்சியரை மையக் கதாபாத்திரமாக வைத்ததும் அதில் நயன்தாரா போன்ற நட்சத்திர நடிகையை நடிக்க வைத்ததும் தமிழ் சினிமாவில் நடிகைகளின் பங்களிப்பு தொடர்பாக நிலவிவரும் கற்பிதங்களை உடைத்தன. பஞ்ச் வசனங்கள், ஸ்லோ மோஷன் காட்சிகள், அதிரடி பின்னணி இசை இல்லாமல் நயன்தாரா ஏற்ற மதிவதனி கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கவைத்த விதமும் இதை ஒரு அரிதான படமாக்கியது.
அருவி
எய்ட்ஸ் நோய் பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட இந்தப் படம் தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு இந்தச் சமூகம் இழைக்கும் அநீதிகளை உரக்கச் சொன்னது. ஒரு பெண்ணை வைத்தே சமூக அவலங்களைக் கேள்வி கேட்கவும் பகடி செய்யவும் வைத்தது மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago