ஆ
ங்கிலத்தில் ‘அபோகலிப்ஸ்’ என்றொரு சொல் உண்டு. உலகை இறுதியாக அழிக்கவந்த நிகழ்வு என்று பொருள். இன்று நம்மை அழித்துக்கொண்டிருக்கும் அந்த நிகழ்வு, பருவநிலை மாற்றம்!
நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக்கொண்டேபோகிறது. பருவம் தப்பி மழை பெய்கிறது. ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு புயல் நம்மைப் புரட்டிப்போடுகிறது. விவசாய நிலங்கள் குறைந்துகொண்டேவருகின்றன. புதுப் புது நோய்கள் தோன்றுகின்றன. அதிகரிக்கும் கடல் மட்டத்தால் கடற்கரையோர நிலங்கள் காணாமல்போகின்றன. இத்தனைக்கும் பருவநிலை மாற்றம்தான் காரணம். ஆனாலும், ‘பருவநிலை மாற்றம் என்பது மாபெரும் பொய்’ என்று சொல்பவர்கள் இன்று அதிகம்.
இப்படிச் சொல்பவர்கள், தனி மனிதர்கள் அல்ல. ‘கார்ப்பரேட்’ எனப்படும் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள்தாம் அவர்கள். எண்ணெய், நிலக்கரி, பெட்ரோல், தங்கம், வைரம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல விஷயங்களுக்காகப் பூமியைத் தோண்டிக்கொண்டேயிருக்கிறார்கள். மனிதச் செயல்பாடுகளால்தான் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. அல்லது உணர்ந்தும் சும்மா இருக்கிறார்கள். அவர்களை வீதிக்கு வந்து செயலாற்றச் செய்ய, மேற்கே ஒரு பேனா முளைத்திருக்கிறது. அந்த பேனா நவோமி க்ளெய்ன் என்பவருடையது.
24chnvk_naomi1.jpg‘பிராண்ட்’ தந்த பெண்ணியம்
1970 மே 8 அன்று கனடா நாட்டின் கியுபெக் மாகாணத்தில் யூதக் குடும்பத்தில் பிறந்தார் நவோமி க்ளெய்ன். தந்தை மைக்கேல் க்ளெய்ன், மருத்துவர். தாய் போன்னி ஷேர் க்ளெய்ன், ஆவணப்பட இயக்குநர். இவர்களது குடும்பம் அமைதிச் செயல்பாடுகளுக்குப் பெயர்பெற்றது. வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போரை எதிர்த்து அமெரிக்காவிலிருந்து வெளியேறி கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் நவோமியின் பெற்றோர்.
இப்படியொரு குடும்பத்தின் வழிவந்த நவோமிக்கு அவரது இளமைக் காலத்தில் சமூகத்தின் மீது எந்தப் பற்றும் இல்லை. அவருக்கு எதிலுமே ‘பிராண்ட்’தான் முக்கியம். காலில் போடும் ஷூவோ வாயில் போடும் உணவோ அவை ‘பிராண்டட்’ ஆக இருந்தால் மட்டுமே மனமும் வயிறும் நிறையும்.
இப்படிப் போய்க்கொண்டிருந்த நவோமியின் வாழ்க்கையில் நடந்த இரண்டு நிகழ்வுகள் அவரது பார்வையை மாற்றின. நவோமியின் 17-வது வயதில் அவரது தாய்க்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவரைக் கவனித்துக்கொள்வதற்காக நவோமி படிப்பைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. படிப்பு மட்டுமல்ல; அதுவரை தான் செய்துவந்த ஊதாரித்தனமான செலவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. ‘பிராண்டட்’ விஷயங்களைத் தவிர்க்கப் பழகினார். ‘பிராண்ட்’ என்பது வேறு, ‘பொருள்’ என்பது வேறு என்பதை உணரத் தொடங்கினார். அவசியம் என்பதற்கும் அநாவசியம் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவருக்கு விளங்கியது.
இந்த நுகர்வு கலாச்சாரம் மக்களை எப்படியெல்லாம் சிக்கலில் தள்ளுகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தார் நவோமி. இதன் விளைவாக 30-வது வயதில் ‘நோ லோகோ’ என்ற தலைப்பில் பெரு நிறுவனங்களின் ‘பிராண்ட்’ எனும் வியாபார உத்திக்கு எதிராகப் புத்தகம் ஒன்றை எழுதினார். அதைப் படித்த பலர் பிறகு ‘பிராண்டட்’ பக்கமே தலைகாட்டவில்லை.
அவரது வாழ்க்கையில் நடந்த இரண்டாவது முக்கிய நிகழ்வு, குபெக்கில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 14 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்ற செய்தியை அவர் அறிந்தது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அவர்கள் பெண்ணியவாதிகளாக இருந்தது. மார்க் லெபின் என்ற இளைஞர், ‘பெண்ணியவாதிகளால் என் வாழ்க்கை சீரழிந்தது’ என்று சொல்லி, அந்தப் பெண்களைக் கொலை செய்தார். அன்றைய நாட்களில் ஆண்கள் பலருக்கும் இருந்த சிந்தனை அதுதான். அந்தப் படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு ஆணாதிக்கத்தை எதிர்க்கும் விதமாக நவோமியும் பெண்ணியவாதியாக வலம்வரத் தொடங்கினார்.
இது எல்லாவற்றையும் மாற்றுகிறது!
பெரு நிறுவனங்களுக்கு எதிராக நவோமி போராடிவந்தபோது, ஒரு கட்டத்தில் ‘நாம் போராட வேண்டியது பெரு நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாக முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராட வேண்டும்’ என்பதை உணர்ந்தார்.
அதன் தொடர்ச்சியாக மனித வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் முதலாளித்துவம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராயத் தொடங்கினார். அப்படி ஆராய்ந்ததன் விளைவாகப் பருவநிலை மாற்றத்துக்கும் முதலாளித்துவமே காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.
அவரது முதல் புத்தகம் ‘நோ லோகோ’, ‘பெரு நிறுவனங்களுக்கு எதிராக வளர்ந்துவரும் இயக்கத்தின் மூலதனம்’ என்ற பெருமையைப் பெற்றது என்றால் முதலாளித்துவத்துக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து அவர் எழுதிய ‘திஸ் சேஞ்சஸ் எவ்ரிதிங்’ எனும் புத்தகத்தை ரேச்சல் கார்சனின் ‘மவுன வசந்த’த்துக்கு நிகராக அழைக்கிறார்கள் சூழலியலாளர்கள். இந்தப் புத்தகத்துக்காக ‘அமெரிக்கன் புக் அவார்ட்’ உள்ளிட்ட பல விருதுகளை வென்றார் நவோமி. மேலும், 2016-ல் பருவநிலை மாற்றம் தொடர்பாகப் பணியாற்றுவதற்காக சிட்னி அமைதி விருதை வென்றார்.
இன்று நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக முயற்சிகள் நடக்கின்றன. இதே போன்று அமெரிக்காவில், கனடாவில், இதர ஐரோப்பிய நாடுகளில் பெரு நிறுவனங்கள் இயற்கை எரிவாயு எடுக்கும்போது, அதற்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களை இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார் நவோமி.
“இதுபோன்ற பெரு நிறுவனங்களுக்கு நாம் சொல்லிக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். நிலத்தைப் பிளந்து எரிபொருளை எடுக்கும் நடவடிக்கை இங்கேயும் வேண்டாம், எங்கேயும் வேண்டாம் என்பதுதான் அது” என்கிறார் நவோமி. பூமியில் புதைந்து கிடக்கும் படிம எரிபொருட்கள்தான், பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்பதால் நவோமி இப்படிச் சொல்கிறார்.
கார்பன், மீத்தேன் போன்ற ‘பசுங்குடில்’ வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை இரண்டு டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது உலக நாடுகள் பலவும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தம்.
சர்வதேச ஆற்றல் முகமை அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர், ஃபதி பிரோல் 2011-ல் ‘இரண்டு டிகிரி செல்சியஸை அடைவதற்கான கதவு மூடப்பட இருக்கிறது. 2017-ல் அது முற்றிலும் மூடப்பட்டுவிடும்’ என்று சொன்னதாக நவோமி தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். 2017-ம் ஆண்டு முடியப்போகிறது. கடைசியாக பூமி பிழைத்திருப்பதற்கு வாய்ப்புதரும்அந்தக் கதவும் மூடப்பட்டுவிடுமோ?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago