தொ
ழிற்சங்க இயக்கத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பெண்கள் முன்வைத்த கேள்விகள்/குற்றச்சாட்டுக்கள் பல.
“தொழிற்சங்கக் கூட்டங்களில் பெண்கள் பங்கேற்க முடியாதவாறு கொஞ்சம்கூட நேரம் குறித்த உணர்வே இல்லாமல் கூட்டங்களை நீங்கள் நடத்துகிறீர்கள். ஆண் தோழர்கள் கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போனால் சூடான உணவு தட்டுகளில் தயாராக இருக்கும். எங்களுக்கு அப்படியா? மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகள் வேறு காத்திருப்பார்கள் அல்லவா?
சாயங்காலம் அலுவலகம் முடியும் நேரத்தில் காத்திருக்கும் குழந்தைகள், காத்திருக்கும் வீட்டு வேலைகள் பற்றிய பதற்றம் எங்களைத் தொற்றிக்கொள்கிறது. ஆனால், உங்களுக்கு அப்பாடா வேலை முடிந்தது என்ற விடுதலை உணர்வு கிடைத்துவிடுகிறது. பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் பதைப்புடன் காத்திருக்கும்போது நீங்கள் நிம்மதியாக, நிதானமாகக் கேலிச் சிரிப்புகளுடன் டீக்கடையை நோக்கிப் போவதைப் பார்த்தபடிதான் தினமும் பஸ் ஏறுகிறோம். நாங்கள் இப்படி உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற தன்னுணர்வாவது உங்களுக்கு இருக்கா தோழர்?” என்பது அப்படியான கேள்விகளில் ஒன்று.
இரு வேறு உலகங்கள்
எங்களுக்குத் திருமணமான புதிதில் அதிகாலையில் தூக்கம் கலைந்து எழும்போது ‘அச்சோ லேட் ஆயிடுச்சே’ என்கிற பதற்ற உணர்வோடு என் இணையர் எழுவார். தூக்கம் கலைந்து சோம்பல் முறித்து, தூக்கத்தை விட்டுப் பிரிய முடியாத செல்லக் கோபத்துடன் நானும் எழுவேன். இந்த பேதத்தைத் தாமதமாகத்தான் நான் உணர்ந்தேன் - ஒரு பாயிலிருந்து எழும் இரு ஜீவன்களின் வேறு வேறான உணர்வும் உலகமும்.
வீட்டில் என்னைத் திருத்திக்கொண்டேன். வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியதால் நான் திருந்திவிட்டதாக என் ஆண் மனம் கருதிக்கொண்டது. வேலைத் தளத்தில், தொழிற்சங்கத்தில் எங்களைத் திருத்திக்கொள்ள முயன்றோம். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. பெண்கள் குறித்த ஏற்ற இறக்கமான, பல்வேறு புரிதல்களும் கருத்துகளும் உள்ள ஆண்களின் கூட்டு மனமாக எங்கள் தொழிற்சங்கக் கிளை இருந்தது.
ஒருவர், பெண்களை ‘சைட்’ அடிக்கிற கட்டத்தையே தாண்டியிருக்கவில்லை. என்ன வயதானாலும் ‘விடலைப் பருவம்’ தாண்டாத பல ஆண் தோழர்கள் இருந்தனர். பார்வையோடு நிறுத்தாமல் பெண் ஊழியர்களிடம் எப்போதும் வழிந்து/வலிந்து பேசும் வகை இன்னொன்று. பெண்கள் மீது இரக்கமும் கருணையும் பொங்கும் மனதுடன் பலர் இருந்தனர். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்குப் போய்விட வேண்டும். ‘தொழிற்சங்கம், போராட்டம் இதெல்லாம் ஆம்பிளைங்க சமாச்சாரம். நாம பாத்துக்கிடலாம். பாவம் அவங்களை ஏன் கஷ்டப்படுத்தணும்? மாநாட்டுக்கு மட்டும் வந்து அவங்க ஓட்டு போட்டாப்போதும்’ என்பது அவர்களின் நிலை.
பெண்களும் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஆனால், செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளில் அவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. துணைப் பொருளாளர், துணைத் தலைவர் போன்ற ‘டம்மி’ பொறுப்புகளில் இருந்தால் போதும். பெண்களுக்கும் இடம் அளித்துவிட்ட மன நிறைவு சங்கத்துக்கு முக்கியம் என்ற எண்ணத்தில் ஒட்டுமொத்தத் தொழிற்சங்கமும் இருந்தது. இப்பவும் அப்படியேதான் இருக்கிறது. எங்கள் கிளை மட்டுமல்ல, எல்லா வகையான பொது இயக்கங்களும்தாம். ஒட்டுமொத்த நாடும்தான்.
மாற்றுப் பாதை
இங்கே தொழிற்சங்க இயக்கத்தை மட்டும் தனியாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போதாது. பெண்கள் குறித்த நம் சமூகத்தின் பார்வைதான் இங்கேயும் பிரதிபலிக்கிறது. சமூகத்தை மாற்றப் பிறந்த தொழிற்சங்க இயக்கம் தன்னையும் மாற்றிக்கொண்டு சமூக மாற்றத்துக்காகவும் போராட வேண்டிய கட்டத்தில் நிற்கிறது என்பதுதான் கூடுதலான சுமை.
நம்முடைய கிளை அளவில் இந்த மனநிலைகளை மாற்றுவதற்கு ஏதாவது செய்யலாம் என நாங்கள் யோசித்தோம். மாதம்தோறும் ஒரு இலக்கியக் கூட்டம். மாதம் ஒரு உலகத் திரைப்படம் திரையிடல். மாதம் ஒரு வாசகர் வட்டக் கூட்டம் எனத் தொழிற்சங்க இயக்கத் தோழர்களை அழைத்துச் சென்றோம். தொழிற்சங்கப் பணிகளையே வழக்கமான பாணியில் அல்லாமல் கலாபூர்வமாகத் திட்டமிட்டுச் செய்தோம். காலம் குறித்த உணர்வுடன் கூட்டங்களை ஒழுங்கு செய்தோம். கலைகளும் இலக்கியங்களும் காற்றைப் போலத் தோழர்களின் மனக் கதவுகளின் உள் அறைகளுக்குள் ஊடுருவிப் பரவின. வறண்ட நிலத்தில் புல்லும் செடியும் முளைக்கத் தொடங்கின.
எங்கள் வட்டாரம் முழுவதிலும் இருக்கின்ற உழைக்கும் பெண்களைத் திரட்டி ஒரு மாநாடு நடத்தலாம் என்ற ஆலோசனை பெண் தோழர்கள் தரப்பிலிருந்து வந்தது.
ஒரு வேலைக்கு இரு ஊதிய முறை
பல பாடங்களைத் தந்த அந்த மாநாட்டில் முக்கியமாக நாங்கள் கண்டது ஒன்று. என்ன மாதிரியான பணிகளில் நம் வட்டாரப் பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள், எப்படியான பணிகளைப் பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே அது. குடும்பப் பொறுப்புகளை முதன்மையாக வைத்துக்கொண்டு அதற்கு இடையூறு இல்லாத வேலை நேரம் அமைகிற பணிகளை அவர்கள் விரும்பி ஏற்கிறார்கள். பீடி சுற்றுவதை வீட்டிலேயே செய்துகொள்ளலாம் என்பதால் லட்சக்கணக்கான பெண்கள் அந்தத் தொழிலில் நீடிக்கின்றனர். பீடி கம்பெனி முதலாளிகளுக்கு இது மிகவும் வசதி. பென்ஷன், பிராவிடண்ட் ஃபண்டு, தற்செயல் விடுப்பு, மாத விடுப்பு, பேறுகால உதவி ஏதும் தரவேண்டியதில்லை. வீட்டுத் தோட்டம் போடுவதுபோல வீட்டு வேலையின் ஒரு பகுதி மாதிரி இது ஆகிவிடுகிறது. சின்ன இடைவெளி கிடைத்தாலும் அதில் புகுந்து கூடுதல் உழைப்புச் சுரண்டலுக்கு முதலாளித்துவம் வழி தேடும்தானே?
வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் அந்தந்த வீட்டுக்காரர்களின் கருணை, நியாய உணர்வின் தன்மைக்கும் அளவுக்கும் ஏற்ப ஊதியம் பெற்றனர். செங்கற்சூளைகளிலோ ஒரே வேலை செய்தாலும் ஆணுக்கு நிகரான கூலி பெண்ணுக்கு இல்லை. உழைப்புச் சந்தை பெண் உழைப்பை ஒருபடி கீழே வைத்திருப்பதை அந்த மாநாட்டில் நடுத்தர வர்க்கப் பெண்களும் ஆண்களும் கண்டார்கள். அங்கே உழைப்பல்ல, பால் பேதமே ஆட்சி செய்கிறது. பண்பாட்டில் பொதிந்துள்ள ஆணாதிக்க மனோபாவத்தை முதலாளித்துவ உழைப்புச் சந்தை சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
பாதிச் செலவைக் குறைத்த பெண்கள்
400 பேர் பங்கேற்ற மாநாட்டின் அனைத்துப் பணிகளையும் பெண்களே செய்தார்கள். நோட்டீஸ் அச்சிட அச்சகம் செல்வது முதல் மாநாட்டுக்கான நிதி வசூல் செய்வது, தோரணம் கட்டுவது, மைக்செட்காரரை அமர்த்துவது, சமையல், சாப்பாடு பரிமாறுதல்வரை அனைத்து வேலைகளையும் அவர்களே செய்தார்கள். நாங்கள், ஆண்கள் பொறுப்பேற்று 200 பேர் கொண்ட தொழிற்சங்க மாநாட்டை நடத்த ஆகும் செலவில் பாதிச் செலவில் அவர்கள் மாநாட்டை முடித்தார்கள். அவர்கள் எழுந்து வந்துகொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும் சிறு அச்சத்தையும் ஒருசேர அளித்தது.
பரிசீலனைக் கூட்டத்தில் மாநாட்டு அனுபவத்தையொட்டி ஒரு பெண் தோழர் கேள்வி எழுப்பினார். “அந்த பீடி கம்பெனி முதலாளிக்கும் எங்களுக்குத் துணைத் தலைவர் பொறுப்பைத் தாண்டி வேறு முக்கியப் பொறுப்பை அளிக்க மறுக்கும் தொழிற்சங்கத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?”
“அதை அப்படி சமப்படுத்திப் பார்க்கக் கூடாது” என்று உடனே மறுத்துவிட என் உதடுகள் துடித்தன. ஆனால், அப்படிச் சொல்லிவிடாதே என்று என் மனம் தடுத்துவிட்டது.
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago