மனைவியே மந்திரி: விழுதாகத் தாங்குபவர்! - ஆர்ஜே பாலாஜி

By கா.இசக்கி முத்து

நா

னும் என் மனைவி திவ்யா நாகராஜனும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். படிப்பு முடிய சில மாதங்கள் இருக்கும்போதுதான், ‘இது நட்பு இல்லையோ?’ என்று தோன்றியது.

படிக்கும்போதே திருமணம்

கல்லூரி நாட்களில் ஜாலியாக இருப்பேன். என்னைப் பற்றி அவரது வீட்டில் விசாரித்தபோது, யாருமே நல்லவிதமாகச் சொல்லவில்லை. எங்கள் விஷயத்தை அவர் தன் வீட்டில் சொன்னதிலிருந்து ஒரு வருடத்துக்கு எங்கேயுமே அனுப்பவில்லை, போனையும் வாங்கிவைத்துக்கொண்டார்கள். அவர் ரொம்ப வைராக்கியத்துடன் இருந்தார். அவரைப் பார்க்க முடியாத தவிப்பு எனக்கு. சென்னையில் இருக்க வேண்டாம் என்று கோயம்புத்தூருக்கு மேற்படிப்புக்குச் சென்றுவிட்டேன்.

இருவரும் எந்தத் தொடர்புமே இல்லாமல் இருந்தோம். திடீரென வேறொரு நம்பரிலிருந்து போன் செய்து, “நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?” என்று கேட்டார். கல்லூரிப் பேராசிரியரிடம் 1,400 ரூபாய் வாங்கிக்கொண்டு சென்னை கிளம்பினேன். திருமணம் செய்துகொள்வது குறித்து ஒருநாள் முழுவதும் நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினோம். மறுநாள், ஜனவரி 26-ம் தேதி திருமணம் செய்துகொண்டோம்.

இளங்கலை முடித்ததுமே திருமணம் செய்துகொண்டதால் நிறைய கஷ்டப்பட்டோம். குடும்பத்தை எப்படி நடத்துவது, யார் சமைப்பது உள்ளிட்ட எந்த விஷயத்தையுமே முடிவு செய்ய முடியாமல் தவித்தோம். இப்போது நினைத்துப் பார்த்தால் சீக்கிரம் திருமணம் செய்ததுதான் நல்லது என்று தோன்றுகிறது.

நிவாரணப் பணியில் உறுதுணை

அம்மாவைப் போலவே என் மனைவியும் காமெடியாகப் பேசுவதில் வல்லவர். நிறைய மேடைகளில் நான் பேசும் காமெடிகள் எல்லாம் அவர் வீட்டில் சொன்னவையாகத்தான் இருக்கும். மற்றவர்களிடம் பேசும்போது நன்றாக இல்லையென்றால் உடனே சொல்லிவிடுவார். அவரிடம் எந்தவொரு ஒளிவு மறைவும் இருக்காது.

அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தபோது சென்னையில் வெள்ளம் வந்தது. அப்போது கிட்டத்தட்ட 15 நாட்கள் வீட்டுக்கே போக முடியவில்லை. அப்படியே போனாலும் ஐந்து நிமிடத்துக்கு மேல் இருந்ததில்லை. அப்போதுகூட, ‘என்னை நீ கவனிக்கவே இல்லை’ என்று குறைபட்டுக்கொண்டதில்லை. எனக்கு உறுதுணையாக நின்றார். சனி, ஞாயிறுகளில்கூட என்.ஜி.ஓ. பணிகள் ஏதாவது இருக்கும். நண்பர்களோடு சென்றுவிடுவேன். ‘நானும் வரட்டுமா’ என்று கேட்டு ஆச்சர்யப்படுத்தினார்.

தனித்துவப் பரிசு

எந்த வேலையாக இருந்தாலும் அவரைவிடச் சிறப்பாக யாரும் செய்துவிட முடியாது என்பது மாதிரி செய்வார். அப்போது அவருக்கு வங்கியில் பணி. எட்டு மாத கர்ப்பமாக இருந்தபோதும், இரவு 9 மணிவரை வேலை செய்துவிட்டு வருவார்.

திருமணமான புதிதில் சம்பளம் குறைவு ஆனால், பொறுப்புகள் அதிகம். வருடந்தோறும் அவரது பிறந்தநாளுக்கு ஏதாவது புதிதாக யோசித்து பரிசுகள் கொடுப்பேன். நானே வரைந்தவை, நானே தயார் செய்த ஆல்பம் என நிறைய வித்தியாசமாகக் கொடுத்திருக்கிறேன். அவரது 27-வது பிறந்தநாளுக்கு அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத 27 பேரைச் சந்திக்க வைத்தேன். இப்படி ஏதாவது செய்து அவரைச் சந்தோஷப்படுத்துவேன்.

நல்லவர்களை வளர்க்கும் அம்மா

குழந்தையைப் பள்ளியில் சேர்த்ததிலிருந்து பேரன்ட்ஸ் மீட்டிங் என்றால் இருவரும் சேர்ந்துதான் போவோம். முக்கால்வாசி நேரம் நான் வெளியே இருப்பதால் இரண்டு குழந்தைகளையும் அவர்தான் பார்த்துக்கொள்கிறார்.

என் மனைவி போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதால் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டோம். அருகில் இருந்த என்னைப் பார்த்தவுடன் எங்களை விட்டுவிடத் தயாராக இருந்தார்கள். ஆனால், ஆழ்வார்பேட்டை சிக்னலில் நின்று அபராதம் கட்டிவிட்டுத்தான் வந்தோம். அதற்குக் காரணம் என் மனைவிதான். அப்பாவைப் பார்த்ததால்தான் தவறு செய்தாலும் விட்டுவிட்டார்கள் என்ற எண்ணமோ லஞ்சம் கொடுத்துத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமோ குழந்தைக்கு வரக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அடுத்த முறை காரில் ஏறியவுடன் என் மகன், “போன் பேசினால் காவல்துறையினர் பிடிப்பார்கள். பேசக் கூடாது” என்று சொன்னான். அதுதான் அவரது வளர்ப்பு.

பிரமிக்கவைத்த மனவலிமை

என் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் தனியாகச் செய்ததில்லை. தனியாகச் செய்தால் நம்பிக்கை வராது என்பதால், நண்பர்களுடயே இருப்பேன். அவர் கர்ப்பமாக இருந்தபோது டூவீலரில் படத்துக்குப் போயிருந்தோம். வண்டியை அவர் ஓட்டிக் கொண்டிருந்தபோது, “எனக்கு வலி வருவது மாதிரி இருக்கிறது” என்றார். உடனே நான் வண்டியை ஓட்டிக்கொண்டு அவரைப் பின்னால் உட்காரவைத்து மருத்துவமனைக்குச் சென்றேன். வலிக்கிறது, முடியவில்லை என்று அவர் புலம்பவும் இல்லை, அழவும் இல்லை. மருத்துவமனையில் சேர்ந்தவுடன் அவரே அவர் குடும்பத்தினருக்குத் தகவல் சொன்னார். இரண்டு குழந்தைகள் பிறந்தபோதும் அவரோடு அறையிலே இருந்தேன். அவரது மனவலிமை எப்போதுமே பிரமிக்கவைக்கும். அதேபோல், இப்போதுவரை அவர்தான் வண்டி ஓட்டுவார். நான் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன். ஆம், எப்போதும் எதிலும் எங்களைத் தாங்கிப் பிடித்து வாழ்க்கைப் பயணத்தை இதமாக்குபவர் அவர்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்