பெண்கள் 360: உயர் நீதிமன்றத்தின் அஜாக்கிரதை

By செய்திப்பிரிவு

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டுக் கர்ப்பமான குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கருவைக் கலைக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்தப் பெண்ணின் உடல் நிலை, கருவின் வளர்ச்சி ஆகியன குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக் குழுவுக்கு உத்தரவிட்டது. கடந்த 10ஆம் தேதி அந்தக் கருவைக் கலைக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக மருத்துவக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. 11இல் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை 17ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது. இறுதியாக அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ‘மனுஸ்மிருதி’ குறித்தெல்லாம் கருத்துத் தெரிவித்ததாக விமர்சிக்கப்பட்டது. அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆகஸ்ட் 21இல் உச்ச நீதிமன்றம் பெண்ணின் 27 வார காலக் கருவைக் கலைக்க அனுமதி அளித்தது. அந்தக் கருவைக் கலைக்க முடியாதபட்சத்தில் அந்தக் குழந்தையை வளர்க்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை அஜாக்கிரதையாகக் கையாண்ட குஜராத் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தன் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

தந்தைக்கும் வேண்டும் பேறு கால விடுப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் காவல் துறை ஆய்வாளர் சரவணன் தாக்கல் செய்த ரிட் மனு குறித்த விசாரணையில் தந்தையின் பேறுகால விடுப்பு பற்றிய முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செயற்கைக் கருத்தரிப்பு முறையில் மனுதாரரின் மனைவி குழந்தை பெற்றுக்கொண்டார். பிரசவத்தில் இருந்த சிக்கலால் மனுதாரர் பிரசவத்துக்காக 90 நாள்கள் விடுப்பு கோரியுள்ளார். முதலில் அனுமதிக்கப்பட்ட விடுப்பு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி ரத்துசெய்யப்பட்டது. அதனால், அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர் நீதிமன்ற உத்தரவில் மே 1இலிருந்து மே 30 வரை அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. செயற்கைக் கருத்தரிப்பு முறையின் சிக்கலால் மனுதாரரின் மனைவி மே 31இல்தான் பிரசவித்தார். அதனால் மனுதாரரால் பணியில் சேர முடியவில்லை. ஜூன் 22 வரை விடுப்பு வேண்டி மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்திய அரசமைப்புச் சாசனக் கூறு 21இன்படி இது குழந்தையின் உரிமை என்றும் கூட்டுக் குடும்ப முறை மாறி, தனிக் குடும்ப வாழ்க்கை முறை சவால்களைச் சந்திக்கும் இன்றைய காலகட்டத்தில் தந்தையின் பேறுகால விடுப்பு முறையை கொள்கை வகுப்பாளர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE