‘லெக்கிங்ஸ் அணிவது சரியா தவறா’ என்று பத்திரிகைகளில் விவாதங்கள் நடந்த நாட்களில் கிராமப்புறப் பெண்கள் அதிகமாகப் பங்கேற்ற ஒரு பயிலரங்கில் இந்தக் கேள்வியை நான் முன்வைத்தேன். அந்தப் பெண்கள் ‘தவறு’ என்றுதான் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அதற்குப் பிறகு அந்த விவாதத்தை எந்தத் திசையில் கொண்டு செல்லலாம் என்று என் நகரத்து மூளை திட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் வேறு ஒரு கேள்வியைப் போட்டு என் மூளையின் போக்கை நிறுத்தினார்கள். அவர்கள், “யார் அணியலாம், யார் அணியக் கூடாது என்று கேளுங்கள்” என்றார்கள். “மெட்ராஸ் மாதிரி மாநகரத்துப் பெண்கள் லெக்கிங்ஸ் அணியலாம். நாங்கள் அணிய வேண்டியதில்லை” என்று கருத்துரைத்தார்கள்.
அந்த விவாதத்தில் திரண்டுவந்த மையக்கருத்து, ‘ஆண்களின் கண்களை ஈர்க்காத உடைதான் பெண்ணுக்குப் பொருத்தமான, பாதுகாப்பான உடை’ என்பதுதான்.
ஆண்களிடமிருந்து தொடங்கும் ஆட்சேபம்
ஒரு புகழ்பெற்ற ஜோக் உண்டு. பாரிஸில் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றார்களாம். அங்கே ஆணும் பெண்ணும் ஆடையின்றி நிற்பதுபோல ஓர் ஓவியம் இருந்ததாம். அந்தப் படத்தைக் காட்டி, “இதில் ஆண் யார் பெண் யார்” என்று ஆசிரியர் கேட்டபோது, ஆடை அணியாமல் இருக்கிறார்களே எப்படி ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியும் என்று குழந்தைகள் பதில் சொன்னார்களாம்.
நாம் பிறந்த சமூகம்தான் ஆணுக்கு ஒருவிதமாகவும் பெண்ணுக்கு இன்னொருவிதமாகவும் ஆடையணிவிக்கிறது. அப்படியே பார்த்துப் பார்த்துப் பழகிய கண்கள் அதில் ஏதேனும் மாற்றம் செய்தால் துணுக்குற்று ஆட்சேபிக்கத் தொடங்கிவிடுகின்றன. குறிப்பாக, பெண்களின் உடை குறித்த ஆட்சேபங்கள் ஆண்களின் கண்களிலிருந்துதான் புறப்பட்டுவருகின்றன.
மக்கள் சீனத்துக்குச் சென்று திரும்பிய ஒரு நண்பர் சொன்னார், “சார்.. அங்கெல்லாம் பொம்பளைப் புள்ளைங்க இடுப்பை ஒட்டிக் குட்டியா ஒரு சின்ன டவுசர் போட்டுட்டுத்தான் ரோடெல்லாம் நடந்து போறாங்க. ஆனாலும் ஒரு பையன்கூட அதைத் திரும்பிப் பார்க்கல. நாங்கதான் மொறைச்சி மொறைச்சிப் பார்த்துட்டுத் திரிஞ்சோம். நாலு நாளில் எங்க கண்ணுக்கும் அது பழகிப்போயி சாதாரணமா ஆயிடுச்சி” என்றார். மாசேதுங் தலைமையில் சீனத்தில் நடந்த புரட்சியைப் பின்தொடர்ந்த கலாச்சாரப் புரட்சியின் பகுதியாக தேசம் முழுவதிலும் ஆண்கள், பெண்கள் அனைரும் ஒரே மாதிரி பச்சை, ஊதா, சாம்பல் வண்ணத்தில் முழுக்கைச் சட்டையும் நீளமான கால்சட்டையும் ராணுவத்தினர்போல அணியத் தொடங்கினர். ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாது. பால்பேதம் இப்படி ஒரே இரவில் உடையின் மூலம் முறியடிக்கப்பட்டது (De-Sexing). அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கும் பெண்கள் என்ன உடை அணிந்தாலும் அங்கே ஆடவர் திரும்பிப் பார்க்காத காரணம். இப்படி ஆண்களின் கண்களைப் பழக்கிவிட முடியும் என்பதற்கு சீனா முன்னுதாரணம்.
ஆணோ பெண்ணோ அவரவருக்குப் பிடித்த உடையை அணிந்துகொள்ளும் சுதந்திரம் சமூகத்தில் நிலவ வேண்டும். இன்றைய நாகரிக யுகத்தில் ஆடைத் தேர்வு என்பது ஒருவர் தன்னை இந்த உலகம் எப்படிப் பார்க்க வேண்டும் என்ற மன விருப்பத்தின் பாற்பட்டதாக இருக்கிறது. அந்த மனவிருப்பத்தை ஊடகங்கள் வழியாக ஃபேஷன் வியாபாரிகள் தகவமைக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான உண்மையாக இருந்தாலும், ஆடைத் தேர்வில் அவரவர் அழகுணர்வும் பாதுகாப்புணர்வும் புழக்க வசதியும் தீர்மானகரமான பங்காற்றுகின்றன. இது ஆண், பெண், பாலினச் சிறுபான்மையினர் அனைவருக்கும் பொதுவானது.
ஆனால், பெண்ணின் ஆடைத் தேர்வில் ஆணின் விருப்பமே கோலோச்சுகிறது என்பதுதான் காலம் காலமாகத் தொடரும் அவலம். ஆணின் விருப்பம் என்பது அந்தக் காலத்தின் சாதியப் படிநிலையும் மதப்பழக்கம் உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகளும் பொருளாதாரத்தோடு இணைந்த வர்க்கப் பார்வையும் சேர்ந்து செதுக்கப்படுவதாகவே இருக்கிறது. ஆண் பார்வை என்பது தனித்ததாக இல்லை.
உடைக்காக நடந்த போராட்டம்
“முழங்கால் சேலையைக் கணுக்காலுக்கு
இறக்கிக் கொடுத்த மணலி கந்தசாமி வாழியவே..”
என்றொரு நாட்டுப்புறப் பாட்டு கீழைத்தஞ்சை வட்டாரத்தில் உண்டு. விவசாயக் கூலிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் 1940-கள் வரையிலும் வாழச் சபிக்கப்பட்ட பெண்கள், வரப்பில் நிற்கும் ஆண்டைகளின் வக்கிரப் பார்வைக்குத் தீனியாகவும் வேலையில் சுணக்கம் இருக்கக் கூடாது என்பதற்காகவும் தங்கள் சேலைகளை முழங்காலுக்கு மேலே தூக்கிக் கட்டிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். செங்கொடி இயக்கத்தின் தலைமையில் போராடித்தான் அந்தச் சேலை கணுக்கால்வரை இறங்கியது.
‘குப்பாயம் தந்த கர்த்தரே வாழி’ என்றொரு நாட்டுப்புற வழிபாட்டுப் பாடல் குமரிப் பகுதியில் உண்டு. இந்த ஒரு வரிப் பாட்டுக்குப் பின்னால் ஆடைச் சுதந்திரத்துக்கான ஒரு போராட்ட வரலாறே அடங்கியிருக்கிறது. சாணார், ஈழவர், காவேரிநாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற 18 சாதிகளில் உள்ள பெண்கள், மேலாடை அணிவதைத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆதிக்கச் சாதிகள் தடை செய்திருந்தன.
1812-ல் திருவிதாங்கூரில் ஆங்கிலேயப் பிரதிநிதியாகப் பணியாற்றிய கர்னல் மன்ரோ, கிறிஸ்தவராக மாறிய பெண்கள் மற்ற தேசக் கிறிஸ்தவப் பெண்களைப் போலத் தங்கள் மார்பை மறைத்துக்கொள்ள உரிமையளிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். சாணார் உள்ளிட்ட சாதிப் பெண்களின் உடுத்தும் உரிமைக்கு அவர் வித்திட்டார். குப்பாயம் எனப்பட்ட மேல் சட்டையையும் பாதிரிகளின் மனைவிமார்களே கையால் தைத்துக் கொடுத்ததாக வரலாறு சொல்கிறது. இதைத் தொடர்ந்து கிறிஸ்தவத்தில் சேராத பெண்களும் மேலாடை அணிந்தனர். அதை ஆதிக்கச் சாதிகள் வன்முறையை ஏவித் தடுத்தன.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு 1855-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் அடிமை முறையை ஒழித்துச் சட்டம் இயற்றி ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் எல்லோரும் மேலாடை அணிவதை அங்கீகரித்தது.
முதலாளித்துவ வளர்ச்சிக் காலத்தில் பெண்களும் வேலைக்கு வரத் தொடங்கிய நாட்களில் பொதுவெளியில் எந்த மாதிரி உடுத்திவர வேண்டும் என்பதை அன்றைய ஆண் கண்கள் வடிவமைத்தன. ஐரோப்பாவில் அது ஹைஹீல்ஸ் அணிய கட்டாயப்படுத்தியது. இந்தியாவில் பொதுவெளியில் உலவிய முதல் தலைமுறைப் பெண்களின் நடை, உடையைக் கேலி செய்து அவர்களைத் தம் விருப்புக்கேற்பத் திருத்த முயன்றது.
“கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்-
வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா..
தையத்தக்கா தையத்தக்கா உய்யா..”என்று ஈவ் டீஸ் செய்தது.
இவ்வாறு பெண்களின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கென்று நீண்ட வரலாறே இருக்கிறது.
முதன்முதலில் எங்கள் கிராமங்களுக்கு நைட்டி வந்தபோது அதற்கு மேலே ஒரு துண்டு அல்லது துப்பட்டாவைப் போட்டுக்கொண்டுதான் ஆண்களின் கண்களைப் பெண்கள் சமாளித்தார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் ஆணின் கண்கள் பழகிவிட இப்போதெல்லாம் நைட்டி அணிந்துகொண்டு தெருக்களில் நடப்பது இயல்பானதாக ஆகிவிட்டது. ஆகவே ஆண்களின் கண்களைப் பழக்குவது முக்கியமான பிரச்சினையாகப்படுகிறது. அதற்கான கற்பித்தல் முறைகளோடு கூடிய பயிற்சி நிறுவனங்களைக் கட்டமைக்க வேண்டும்போல. மற்றபடி பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் பாலியல் தூண்டலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நான்கு வயதுப் பெண் குழந்தையைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிற நாட்டில் ஆடையில் என்னதான் இருக்கிறது?
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago