லதா தீதி (அக்கா) என்று பலராலும் செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார்.
லதா மங்கேஷ்கர் என்னும் இந்த இசைக்குயில், 1942-ல் தன் கானத்தை இசைக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தெவிட்டாத தன் தேன் குரலால் ரசிகர்களைத் தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருமையும் லதா மங்கேஷ்கருக்கு உண்டு. எப்போதும் நிற்காத நதியாக, உட்காராத காற்றாகப் பாடலையே தன் சுவாசமாகக் கொண்டு இயங்கிவருகிறார். சுமார் 980க்கும் அதிகமான இந்திப் படங்களில் பாடி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த வயதிலும் இன்னிசை வழங்கிவருகிறார். இவர், ஆஷா போஸ்லே, ஹ்ருதயநாத் மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர், மற்றும் மீனா மங்கேஷ்கர் ஆகியோரின் தமக்கை.
இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பரரத் ரத்னா விருது பெற்ற மகாராஷ்டிராவின் முதல் பெண்மணி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்தியாவில் பாரத் ரத்னா விருது பெற்ற இரண்டாவது பாடகி இவர். முதலில் விருது பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி.
கண்கலங்கிய நேரு
1962-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முன்னிலையில் லதா மங்கேஷ்கர், திரைப்படம் எதிலும் வராத தேசபக்திப் பாடலைப் பாடினார். இந்தியா- சீனா போரின் விளைவாக மனமொடிந்து துயரத்தில் ஆழ்ந்திருந்த நேருவின் கண்களில் கண்ணீர் கோத்து நின்றது.
“பிரதீப் எழுதி ஸி. ராமச்சந்த்ரா இசை அமைத்த, ‘யே மேரே வதன்கே லோகோ’ என்ற அந்தப் பாடல்தான் நேருவைக் கண்கலங்க வைத்தது” என்கிறார் லதா மங்கேஷ்கர். இந்தப் பாடலை அன்று முதல் தனது எல்லா இசை நிகழ்ச்சிகளின் முடிவிலும் தவறாமல் பாடி அனைவரையும் அழவைத்து வருகிறார்.
மராட்டி மொழி பேசும் கோமந்தக் மராட்டா குடும்பத்தில் பிறந்த லதா, மத்திய பிரதேசம் இந்தூரில் பிறந்தார். அவர் தந்தை பண்டித் தீனாநாத் மங்கேஷ்கர், ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதத்தில் பெரிய மேதை. ஒரு நாடக நடிகராகவும் அவர் விளங்கினார். தான் நடித்த ‘லத்திக்கா’ என்ற நாடகத்தின் பெயரைத் தழுவி லதா என்ற பெயரைத் தனது மூத்த மகளுக்குச் சூட்டினார்.
இசைப் பயணம்
லதாவுக்கு 13 வயதானபோது அவருடைய தந்தை இறந்துவிட்டார். அப்போது குடும்பத்தின் நிதி நிலைமை சற்று மோசமானதை அடுத்து, குடும்ப நிதி வசதிக்காக, ‘மெஹல்’ என்ற படத்தில் பின்னணி பாடினார் லதா. கிஷோர் குமாரை அறிமுகப்படுத்திய கேம்சந்த் பிரகாஷ் இசை அமைத்த ‘ஆயேகா ஆனேவாலா’ என்ற பாடல்தான், லதாவைப் புகழின் உச்சாணிக்கே இட்டுச் சென்றது.
லதா திரைப்படத் துறையில் பிரவேசித்தபோது, ஷம்ஷாத் பேகம், நூர்ஜஹான் போன்ற பின்னணிப் பாடகிகள், கொடிகட்டிப் பறந்தனர். நூர்ஜஹானின் பாணியில் லதா பாடியதாகக் கூறப்பட்டது. ஆனால், விரைவிலேயே லதாஜி, தனக்கே உரிய பாணியில் உருது மொழிக் கவிஞர்களின் பாடல்களைப் பாடத் தொடங்கிவிட்டார். குரலால் மயக்கும் இவர், நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால், ஓரிரு மராட்டிப் படங்களில் நடித்த பின்னர் அதை விட்டுவிட்டார்.
1974-ம் ஆண்டு, லண்டனில் உள்ள ராயல் ஆல்பெர்ட் ஹாலில் இனிய இசைமழை பொழிந்த முதல் இந்தியப் பெண் லதா மங்கேஷ்கர். அந்தக் காலத்தின் பிரபல கதாநாயகியாக இருந்த இந்தி நடிகையும் திலீப் குமாரின் மனைவியுமான சாயிரா பானுவின் குரல்தான், திரைப்படங்களில் தனது குரலுடன் மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது என்கிறார் லதா.
மதுமதி என்ற படத்தில், சலீல் சௌத்ரி இசையமைத்த ‘ஆஜாரே பர்தேசி’ என்ற பாடல்தான் லதாவுக்கு மிகவும் பிடித்த பாடல். ஓ.பீ. நய்யர் நீங்கலாக மற்ற எல்லா இந்தி இசையமைப்பாளர்களின் இசையிலும் லதா பாடியிருக்கிறார்.
1999-ல், ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தபோது, லதாவின் உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால், ஒரு கூட்டத்தில்கூட அவரால் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. டெல்லியில் ஒரு எம்.பி. என்ற வகையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டையோ அல்லது எம்.பி.க்கான சம்பளத்தையோ அவர் ஏற்கவில்லை.
இசைக்குள் இருக்கும் கருணை
லதாவுக்கு வைரத்தின்மீது அசாத்திய மோகம். அவர் அணிவது பெரும்பாலும் வைர நகைகளே. ‘அடோரா’ என்ற இந்திய ஏற்றுமதி கம்பெனி ஒன்றுக்கு இவர் வடிவமைத்தும் தந்திருக்கிறார். ‘ஸ்வராஞ்சலி’ என்ற இந்த வைரத் திரட்டிலிருந்த ஐந்து வைரக்கற்கள் ஏலத்துக்கு விடப்பட்டன. அதன் மூலம் கிடைத்த ஒரு லட்சத்து ஐயாயிரம் பவுண்ட் ஸ்டர்லிங் (1 பவுண்ட் ஸ்டர்லிங் - 102 ரூபாய்) பணத்தை 2005-ம் ஆண்டு காஷ்மீர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைப்பு நிதிக்குக் கொடுத்துவிட்டார்.
லதா ஃபவுண்டேஷனின் பல உதவித் திட்டங்களுக்காக லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் தரும காரியங்களுக்காக ஏராளமாகவும் தாராளமாகவும் நிதி திரட்டிவருகின்றார்கள்.
நீளும் விருது பட்டியல்
84 வயதாகும் இந்த இசைக்குயிலின் இயற்பெயர் ஹேமா. திருமணம் செய்துகொள்ளாமல், இசைக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் இவர். பாரத ரத்னா தவிர, பத்மபூஷன், பத்மவிபூஷன், தாதாசாஹேப் ஃபால்கே, மகாராஷ்டிரா பூஷன் விருது, என்.ஆர். நேஷனல் விருது, நியூயார்கிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டம் என்று பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இவருடைய கிரிக்கெட் ஆர்வமும் எல்லை கடந்தது. லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இவருக்காகவே ஒரு நிரந்தர கேலரி ஒதுக்கப்பட்டுள்ளதே அதை நிரூபிக்கும்.
மீரா பஜன்கள், பகவத் கீதை ஸ்லோகங்கள் , கபீரின் தோஹாஸ், சூர்தாஸின் கவிதைகள் போன்ற பல விதமான பாடல்களைப் பாடியிருந்தும், சூஃபி பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைக்காமலேயே நழுவிவருகிறதே என்று ஆதங்கப்பட்ட லதாவின் கனவு அண்மையில் நனவாயிற்று. லதாவின் சகோதரர் மகன் பைஜ்நாத், இரண்டு சூஃபீ பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்தபின் எச்.எம்.வீ. நிறுவனத்தார் வெளியிட்ட ‘யா ரப்பா’ என்ற ஆல்பத்தில், லதா இரண்டு சூஃபி பாடல்களைப் பாடியுள்ளார்.
திரையிசையில் சாதனை புரிந்த இவர், இன்றைய திரைப்படத் துறைக்குத் தன்னைப் பொருத்தமற்றவராகக் கருதுவதாகக் கூறுகிறார். “சினிமா இப்போது நிறைய மாறிவிட்டது. சினிமா சிறப்பாக இல்லை என்று கூறமாட்டேன். அதில் இப்போது பொருந்தக்கூடியவளாக நான் இல்லை” என்கிறார். 25 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில், 20 இந்திய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ள இந்த இசைக்குயில், தொடர்ந்து தன் குரலைக் காற்றில் பறக்கவிட்டபடியே இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago