களம் புதிது: வாழ்வை உயர்த்திய காளான்

By ரெ.ஜாய்சன்

 

னலெட்சுமியின் பெற்றோர் உப்பளத்தில் கூலி வேலை செய்பவர்கள். இதனால் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. குடும்ப வறுமையைச் சமாளிக்கப் பெற்றோருடன் உப்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே பணிபுரிந்துவந்த செந்தூர் செல்வத்தைக் காதலித்து, 18 வயதில் திருமணம் செய்துகொண்டார். சரியான வேலையில்லாததால் குடும்பத்தை நடத்தவே தனம் சிரமப்பட்டார். ஆனால், இன்று சுயதொழில் மூலம் பல பெண்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

காளானைக் கண்டுகொண்ட கதை

தனத்தின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் காளான். ஆரம்பத்தில் குடும்பத்தின் வருமானத்தை உயர்த்தக் காளான் வளர்த்த தனலெட்சுமி, தற்போது சிறந்த காளான் வளர்ப்புப் பயிற்சியாளராக மாறியிருக்கிறார். இவர் தயாரிக்கும் காளான் சூப் பொடி, தூத்துக்குடி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் பிரபலம். இந்தப் பகுதியில் தனலெட்சுமி என்று கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை. ‘காளான்’ தனம் என்றால்தான் தெரிகிறது. தூத்துக்குடியில் விடாது மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில் தனது அலுவலகத்தில் மகளிர் குழுவினருக்குக் காளான் வளர்ப்புப் பயிற்சியளித்துக்கொண்டிருந்த தனலெட்சுமியைச் சந்தித்தோம். தனது வாழ்க்கைப் பயணம் மாறியதை மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டித் தீர்த்தார்.

மகளிர் சுயஉதவிக் குழுவில் இருந்ததால் குழுவினரோடு இணைந்து காமராஜ் கல்லூரியில் இரண்டு மாதம் காளான் வளர்ப்புப் பயிற்சி பெற்றார். இவருடன் 300 பெண்கள் பயிற்சி பெற்றனர். ஆனால், தனம் மட்டுமே அந்தப் பயிற்சிக்கு செயல்வடிவம் கொடுத்தார்.

நான்கு பெண்கள் இணைந்து 2006-ம் ஆண்டு ரூ. 5,000 முதலீட்டில் சிறிய அளவில் சிப்பிக் காளான் வளர்ப்புத் தொழிலைத் தொடங்கியிருக்கிறார்கள். முதல் வாரத்திலேயே போட்ட முதலீட்டைத் திருப்பிவிட்டார்களாம். ஓரளவு லாபமும் கிடைக்க, தொழிலை விரிவுபடுத்தி 2007-ல் பெரிய காளான் பண்ணையைத் தொடங்கியிருக்கிறார் தனம்.

கைகொடுத்த சூப் பொடி

காளான் ஒரே நாளில் கெட்டுவிடும். இதனால் அதிக அளவில் உற்பத்தியான காளானை விற்பதில் ஏற்பட்ட சிக்கலைச் சமாளிக்க புது திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார். “காளான்களை உலரவைத்துப் பட்டை, கிராம்பு, பொரிகடலை, பால் மாவு சேர்த்து அரைத்து காளான் சூப் பொடி தயாரித்து விற்பனைசெய்தேன். இந்தப் பொடி ஆறு மாதம்வரை கெடாது. எட்டு கிலோ காளானில் ஒரு கிலோ சூப் பொடி தயாரிக்கலாம். 50 கிராம் பொடியை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் போட்டு சூப் தயாரிக்கலாம். இந்த சூப் பொடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் காளான் சூப் பொடி தயாரிக்கும் தொழிலை இன்றுவரை தொடர்ந்துவருகிறேன்.” என்கிறார்.

“மாதம் 25 கிலோ காளான் சூப் பொடி தயார் செய்கிறேன். ஒரு கிலோ சூப் பொடி தயார் செய்ய ரூ. 300 செலவாகும். அதை ரூ. 500 முதல் ரூ. 600வரை விற்பனை செய்கிறேன்” என்கிறார் தனம்.

அதிகரிக்கும் வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பல்பொருள் அங்காடிகளிலும் மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிகளிலும் தாங்கள் தயாரிக்கும் காளான் சூப் பொடி விற்கப்படுவதாகச் சொல்கிறார் தனம். இதுதவிர பலர் வீட்டுக்கே வந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு வரவேற்பு இருக்கிறது. சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும்கூட இவரது காளான் சூப் பொடியை வாங்கி அனுப்பும் வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறார்.

“காளான் வளர்ப்பில் அத்தனை தொழில்நுட்பங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்துவிட்டேன்” என்று சொல்லும் தனம் காளான் விதைகளைத் தானே உற்பத்தி செய்துகொள்ளும் அளவுக்கு இந்தத் தொழிலில் முன்னேறியிருக்கிறார். காளான் வளர்ப்புத் தொழிலுக்காக 2008-ம் ஆண்டின் சி.ஐ.ஐ. சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது, 2009-ம் ஆண்டில் சிறந்த காளான் வளர்ப்பவருக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.

150 தொழில்முனைவோர்

தொழிலில் வெற்றிபெற்ற தனம் அதை மற்றவர்களுக்குக் கற்றுத் தருகிறார். “காளான் வளர்ப்பு தொடர்பாகக் கல்லூரி மாணவ மாணவியருக்கும் மகளிர் குழுவினருக்கும் தொடர்ந்து பயிற்சியளித்துவருகிறேன். இதுவரை என்னிடம் 3,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் பலர் காளான் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்குத் தேவையான காளான் விதைகளை நானே உற்பத்திசெய்து கொடுக்கிறேன். மேலும், அவர்களிடம் இருந்து காளான்களையும் வாங்கிக்கொள்கிறேன். தனி நபர்கள் பயிற்சிபெற விரும்பினாலும் பயிற்சியளிக்கிறேன்” என்கிறார்.

மேலும், பெண்களின் முன்னேற்றத்துக்காக துளசி சமூக அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். தற்போது இந்தத் தொண்டு நிறுவனத்தின் கீழ் 225 மகளிர் குழுக்கள் இயங்குகின்றன. இந்தக் குழு உறுப்பினர்களுக்குக் காளான் வளர்ப்பு, தையல், அழகுக்கலை போன்ற சுயதொழில் பயிற்சிகளை அளிக்கிறார்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற 150 பெண்கள் தற்போது சொந்தமாகத் தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறியுள்ளதாகச் சொல்கிறார் தனம்.

நிறைவேறிய கனவு

தனத்துக்கு மறுக்கப்பட்ட கல்வியும் வசதியான குடும்பச் சூழலும் அவருடைய குழந்தைகளுக்குக் கிடைத்துள்ளன. “என் குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். மகள் நிஷாந்தினி பொறியியல் பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். மகன் ஹரிகரன் 11-ம் வகுப்பு படிக்கிறான். எனது ஆசைகள் நிறைவேறிவிட்டன” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் தனம்.

காளான் தொழிலால் பொருளாதாரா வளர்ச்சியும் சமூக அந்தஸ்தும் மட்டுமல்ல, குடும்ப உறவுகள் மத்தியிலும் பெரும் மதிப்பு கிடைத்திருக்கிறது. “நான் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டேன். கெட்ட பெயரை வாங்கித் தந்துவிட்டாளே என்று அப்போது என் அம்மா வேதனைப்பட்டார். ஆனால், நான் விருது வாங்கியபோது என்னால் பெருமைப்படுவதாகச் சொன்னார். என்னை முதலில் ஏற்றுக்கொள்ள என் கணவரின் குடும்பத்தினர் தயக்கம் காட்டினார்கள். ஆனால், இப்போது நான் அவர்கள் ஊருக்கு வரமாட்டேனா என என் கணவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். குடும்பத்தில் நான் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்” என்கிறார்.

தனத்தின் எதிர்காலத் திட்டங்களும் காளானைச் சார்ந்தே அமைந்துள்ளன. “காளான்தான் எனது வாழ்க்கையை உயர்த்தியுள்ளது. தொடர்ந்து காளான் தொழிலை மட்டுமே செய்யத் திட்டமிட்டுள்ளேன். காளான் ரஸ்க், காளான் மருந்து போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். சிறந்த காளான் ஏற்றுமதியாளராக வேண்டும் என்பதே எனது விருப்பம். அது நிச்சயம் நிறைவேறும் என நம்புகிறேன்” என உறுதியுடன் முடிக்கிறார் தனலெட்சுமி.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

34 mins ago

சிறப்புப் பக்கம்

56 mins ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்