ப
ஞ்சுக்கும் இந்தியாவுக்கும் சமீபகால வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, பெரும் தீயாகப் பரவி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை நைந்துபோகச் செய்தது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதற்கு பி.டி. பருத்தி எனும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி மிக முக்கியக் காரணமாக இருந்தது. அதேபோன்று, தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் இந்தப் பருத்தியால் தற்கொலைகள் தொடர்கின்றன.
பூச்சிக்கொல்லியைக் குடித்து இறந்துபோன மராத்திய விவசாயியோ பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும்போது அதைச் சுவாசித்ததால் இறந்துபோன தமிழக விவசாயியோ… அந்த மரணங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை நிலையை அறிய களத்தில் முதல் ஆளாக இருப்பார் கவிதா குருகந்தி. பி.டி. பருத்திக்குத் தடைகோர எழுந்த முதன்மையான குரல் அவருடையது. பருத்திக்கு மட்டுமல்ல; விவசாயத்தில் மரபணு மாற்றம் எனும் கருத்துக்கே எதிர் ஒலி. அது இன்று பல பாமர விவசாயிகளிடமும் எதிரொலிக்கிறது!
குரலற்றவர்களின் தொடர்பாளர்
1970 நவம்பர் 22 அன்று ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் கவிதா குருகந்தி பிறந்தார். கடந்த மூன்று தலைமுறைகளாக விவசாயத்தைத் திரும்பிப் பார்க்காதது இவரது குடும்பம். இருந்தும் இவருக்கு எப்படி விவசாயம், விவசாயிகள் சார்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது?
அந்தத் திறப்பைப் படிப்பே அவருக்குத் தந்தது. ஹைதராபாத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சித் தொடர்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்தபோது, ‘டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி’ எனும் அமைப்பில் சேர்ந்து, இன்றைய தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் பகுதியில் சமூக ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
“அங்கு வறுமையில் வாடிய தலித் பெண்களைப் பார்த்தேன். அவர்களுடன் பழகினேன். அவர்களது கஷ்ட நஷ்டங்களை நேரடியாக உணர்ந்தேன். சிறுதானியங்கள் குறித்தும் பாரம்பரிய நாட்டு விதைகள் குறித்தும் அவர்களுக்கிருந்த அறிவைப் பார்த்து வியந்தேன். அந்த அனுபவம் என்னை அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் நலனுக்காகப் பணியாற்றத் தூண்டியது. கல்லூரி காலத்துக்குப் பிறகு அங்கு ஆறு ஆண்டுகள் தங்கிப் பணியாற்றினேன். நான் விவசாயத் துறைக்குள் இப்படித்தான் வந்தேன்” என்கிறார் கவிதா.
1990-களில் மத்திய அரசால் ‘மாற்றுப் பொது விநியோக முறை’ திட்டம் கொண்டுவரப்பட்டது. வழக்கமான அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றுக்குப் பதிலாகச் சிறுதானியங்கள் மட்டுமே வழங்கும் திட்டம் அது. அந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதற்குக் காரணமாக இருந்த முக்கியமான நபர்களில் கவிதாவும் ஒருவர். அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது மிக முக்கியப் பொறுப்பில் இருந்தார் கவிதா.
“1996-ம் ஆண்டு ரோம் நகரத்தில் உணவு மற்றும் விவசாயம் தொடர்பான உச்சி மாநாட்டில் இந்தத் திட்டம் குறித்து அதிக அளவு பேசப்பட்டது” என்கிறார் அவர்.
வளங்குன்றா வேளாண்மைக்காக
தனிமனிதராக, விவசாயிகளின் நலனுக்காகப் பணியாற்றிவந்த கவிதாவின் வாழ்க்கையில் 2010-ம் ஆண்டில் முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. அந்த ஆண்டுதான் ‘வளங்குன்றா மற்றும் முழுமையான வேளாண்மைக்கான கூட்டமைப்’பை அவர் தொடங்கினார்.
“உணவு, உழவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி அந்த ஆண்டு அக்டோபரில் ‘கிஸான் ஸ்வராஜ் யாத்ரா’ பேரணியை முன்னெடுத்தோம். காந்தி ஜெயந்தி அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து அந்தப் பேரணி தொடங்கியது. சுமார் 71 நாட்கள், 20 மாநிலங்கள், 20 ஆயிரம் கிலோமீட்டர் என நீண்ட இந்தப் பயணம் டிசம்பர் 11அன்று ராஜ்கோட்டில் நிறைவடைந்தது. அந்தப் பேரணியின் முடிவில் தோன்றியதுதான் இந்தக் கூட்டமைப்பு” என்கிறார் கவிதா.
தற்போது இந்தக் கூட்டமைப்பில் நாடு முழுவதிலுமுள்ள சுமார் 400 விவசாயச் சங்கங்கள் இணைந்திருக்கின்றன.
மரபார்ந்த அறிவுக்கு முதலிடம்
“நவீனம் என்ற பெயரில் இன்று விவசாயத்தில் பல தவறுகள் நிகழ்ந்துவிட்டன. அந்த நவீனம் நமக்குப் பெரும்பாலான நேரத்தில் உதவாமல் போயிருக்கிறது. விவசாயிகளிடமுள்ள மரபார்ந்த அறிவை நாம் மதிப்பதே இல்லை. அதிகாரிகள் வகுக்கும் கொள்கைகளுக்குத்தான் அரசு முன்னுரிமை தருகிறது. அதை நாம் மாற்ற வேண்டும்” என்று சொல்லும் கவிதா, இயற்கை வேளாண்மை பற்றி மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வூட்டிவருகிறார்.
பி.டி. பருத்திக்கு எதிராக இவர் போராடியதால் பல அரசு அதிகாரிகளின் எதிர்ப்பைச் சந்தித்தார். ஆனால், தனது கள ஆய்வுகளாலும், ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ போன்ற இதழ்களில் தனது எழுத்தாலும், பி.டி. பருத்தி தொடர்பாக அவர் வெளிக்கொண்டு வந்த உண்மைகள் எதிரிகளின் வாயை அடைத்தன.
“பி.டி. பருத்தியால் ரசாயனப் பயன்பாடு அதிகரித்ததே தவிர, குறையவில்லை. சில பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே, சந்தையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. அவை பல நேரம் அரசாங்கத்தின் மீதே வழக்குத் தொடுக்கும் சக்தி படைத்தவை” என்று சொல்லும் கவிதா, அவற்றை எதிர்ப்பதற்கான வழியையும் சொல்கிறார்.
“இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்களுக்கு இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவை. வடஇந்தியாவில் மிக அதிக அளவில் தேவை. தென்னிந்தியாவில் நல்லதொரு புரட்சியே நடந்திருக்கிறது. தமிழகம் போன்ற மாநிலங்களில் நகரங்களில் உள்ள மக்கள் சிறந்த வேளாண் முறைகள் குறித்து அதிகம் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்கிறார்.
பெண், விவசாயி இல்லையா?
“விவசாயி என்ற சொல்லைக் கேட்டதும் உங்கள் மனதில் விரியும் உருவம், ஓர் ஆணின் உருவம்தானே? அப்படியென்றால் ஒரு பெண், விவசாயியாக இருக்க முடியாதா?” என்று கேட்கிறார் கவிதா. அந்தக் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கிறது. இன்றுவரையிலும் நமது அரசுகள், ஆண்களை விவசாயிகள் என்றும் பெண்களை விவசாயக் கூலிகள் என்றுமே அடையாளப்படுத்துகிறது. அதற்கேற்றபடிதான் பல கிராமங்களில் வழங்கப்படும் கூலியிலும் வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
விவசாயத்தில் பெண்களின் பங்கு பெருமளவில் வெளியே தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது. விவசாயத்தில் உள்ள ஆணாதிக்கத்தை உடைக்கவும் நிலத்தின் மீது பெண்களுக்கு உள்ள உரிமையைப் பெற்றுத் தரவும் 2014-ம் ஆண்டில் ‘மகிளா கிஸான் அதிகார் மஞ்ச்’ (சுருக்கமாக ‘மகம்’) என்ற அமைப்பு, கவிதாவின் முயற்சியால் தொடங்கப்பட்டது.
“உருது மொழியில் ‘மகம்’ என்றால் இலக்கு என்று அர்த்தம். விவசாயத்தில் பெண்களின் உரிமையை வென்றெடுப்பதே எங்களின் இலக்கு. பெண்களை அங்கீகரிப்பதன் மூலம் மிகப் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்!” என்கிறார் கவிதா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago