முகங்கள்: 2017-ன் பெண்கள்

By எல்.ரேணுகா தேவி

ஒவ்வொரு நாளும் நம்பிக்கையையும் கனவையும்  சுமந்தபடி தொடங்குகிறது பெண்களின் வாழ்க்கை. சிறியதாகத் தொடங்கும் மாற்றம் பல பெண்கள் மத்தியில் நம்பிக்கை விதையைத் தூவுகிறது. அந்த வகையில் 2017-ம் ஆண்டில் மாற்றத்தை முன்னெடுத்து மக்கள் மனதுக்கு உத்வேகம் அளித்தவர்கள் யார் யார்?

முதல் நூலுக்கே விருது

தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மா, ‘லட்சுமி எனும் பயணி’ என்ற தன் முதல் நூலுக்காக ‘ஸ்பாரோ’ விருதைப் பெற்றார். மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (Sound and Picture Archives for Research On Women) அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி எழுத்தாளர்களைக் கவுரவிக்கிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, எழுத்தாளர்கள் மத்தியில் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. சிறந்த சுயசரிதை நூலுக்கான விருதைப்  பெற்றுள்ளார் லட்சுமி அம்மா.

தன்னம்பிக்கை தரும் பயணம்

நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் செப்டம்பர் மாதம் பதவியேற்றார். இதன் மூலம் சுதந்திர  இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்திய கடல் படையைச் சேர்ந்த பெண் கடல் படை அதிகாரிகள் ஆறு பேர் ஐ.என்.எஸ்.வி. தாரிணி என்ற கப்பல் மூலமாக உலகைச் சுற்றிவர கடந்த செப்டம்பர் மாதம்  புறப்பட்டனர். லெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான இந்தக் குழுவில் லெப்டினென்ட் கமாண்டர்கள் பிரதிபா ஜம்வால், பி. சுவாதி, லெப்டினென்ட்கள் எஸ்.விஜய தேவி, பி. ஐஸ்வர்யா, பாயல் குப்தா ஆகியோர் பயணித்துவருகிறார்கள். இந்த கப்பல் 2018 ஏப்ரல் மாதம் கோவாவை வந்தடையும்.

இஸ்ரோ பெண்கள்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி உலக சாதனையை படைத்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO). டி.கே. அனுராதா, என். வளர்மதி, நந்தினி ஹரிநாத், ரித்து கிரிதால், மவுமிதா தத்தா, மினால் சம்பத், கீர்த்தி பவுஜ்தார், டெஸ்ஸி தாமஸ் உள்ளிட்ட எட்டுப் பெண் விஞ்ஞானிகள் இந்தச் சாதனையில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

நீதியை வென்றெடுத்த பெண்கள்

மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு கிராமத்தின் அரசுப் பள்ளியில் மாணவிகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உறுப்பினர்களும் அந்தக் கிராம மக்களும் காட்டிய உறுதியே நீதி கிடைக்கக் காரணம். எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சாமல் இந்த வழக்கு சரியான திசையில் நகர மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாயும் வழக்கறிஞர் நிர்மலாராணியும் பெரும் பங்காற்றினார்கள்.

முதல் திருநங்கை கவுரவ டாக்டர்

திருநங்கைகளின் உரிமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர் திருநங்கை அகாய் பத்மாஷலி. இவரது  தொடர்ச்சியான போராட்டங்களை  அங்கீகரிக்கும் விதமாக அமைதி மற்றும் கல்விக்கான இந்திய மெய்நிகர் பல்கலைக்கழகம்  (Indian Virtual University for Peace and Education) அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற  பெருமையை அகாய் பத்மாஷலி  பெற்றுள்ளார்.

மகுடம் சூடிய மித்தாலி

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியினர் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுகிறார்கள் என்பதே இந்த ஆண்டுதான் பலருக்குத்  தெரிந்திருக் கிறது. இதற்கு முக்கியக் காரணம் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.  சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்த கிரிக்கெட் வீராங்கனைகளின்  பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற உலகப் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிச்சுற்றுவரை சென்று இரண்டாம் இடம் பிடிக்க ஒரு வீராங்கனையாகவும் அணித் தலைவராகவும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

 வெற்றிப் பாதையில் வெள்ளி மங்கை 

பேட்மிண்டன் விளையாட்டு என்றாலே அவர் மட்டும்தான் என்கிற அளவுக்குச் சாதனைகளைப் படைத்துவருகிறார் பி.வி. சிந்து. 2016 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து கடந்த வருடத்தில் எண்ணற்ற போட்டிகள், ஏராளமான பரிசுகள் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் சிந்து. 2017-ல் ஐந்துக்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சிந்துவின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக்கப்பட உள்ளது.

manushijpg

 உலக அழகி

இந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியப் பெண்ணான மனுஷி சில்லர், உலக அழகியாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனாவில் நடைபெற்ற போட்டியில் உலகம்  முழுவதிலுமிருந்து 118 பேர் கலந்துகொண்டனர். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்தியர் ஒருவர் உலக அழகியாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர், மருத்துவ மாணவி.

ஊழலை எதிர்த்த அதிகாரி

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.என்.சசிகலா. அவர் சிறைக்குள் சொகுசு ஏற்பாடு செய்துகொள்வதற்காக கர்நாடக உள்துறைச் செயலர், ஊழல் தடுப்புத் துறை இயக்குநர், காவல்துறை ஐ.ஜி. ஆர்.கே. தத்தா ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாகப் புகார் அறிக்கை அனுப்பினார் சிறைத் துறை டி.ஐ.ஜி. ரூபா மெளட்கில். இவர் தனது சிறப்பாக பணியாற்றிமைக்காக ஜனாதிபதிப் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பதக்க மழையில் வீராங்கனைகள்

 உலக அளவில் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். அதேபோல் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகளான ஜோதி குலியா, அன்குசிட்டா போரா, நீத்து, சாக்ஷி சௌத்ரி, சசி சோப்ரா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்தனர். இந்த ஆண்டு இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகளின் காட்டில் பதக்க மழை பொழிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்