நோ
பல் பரிசு பெற்ற முதல் பெண், இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் எனப் பல்வேறு புகழுக்குச் சொந்தக்காரர் மேரி கியூரி. கடந்த நவம்பர் 7, இவரது 150-வது பிறந்தநாள்.
போராட்டம் நிறைந்த வாழ்க்கை
1867-ல் ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போலந்து நாட்டின் வார்சா நகரில் பிறந்தார் மேரி. ஆசிரியர்களான பெற்றோர் போலந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். பெற்றோரின் முன்னோர்கள், போலந்து சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் சொத்துகளை இழந்தவர்கள். இதனால் ரஷ்ய அதிகாரிகளின் பலவிதமான ஒடுக்குமுறைகளை இவரது குடும்பத்தினர் எதிர்கொண்டனர். ரஷ்ய அதிகாரிகளுக்குத் தெரியாமல் ரகசியமாகத் தன் தாய்மொழியான போலிஷ் மொழியைக் கற்றார் மேரி. போலந்து விடுதலைக்கான மாணவர் போராட்ட இயக்கங்களிலும் பங்கேற்றார்.
சிறுவயதிலேயே தாயைக் காசநோய்க்குப் பறிகொடுத்த இவர் கணிதம் மற்றும் இயற்பியல் பேராசிரியராக இருந்த தன் தந்தையின் வழியில் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றார். கணிதம், இயற்பியல் இரண்டும் இவரது விருப்பப் பாடங்கள். குடும்பத்தின் வறுமை காரணமாகப் பள்ளியில் படித்தபோதே வீட்டு வேலைகள் செய்து சம்பாதித்தார். பள்ளிக் கல்வியில் தங்கப் பதக்கம் பெற்றபோதும் பெண் என்பதற்காகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டன. போலந்து விடுதலையை ஆதரித்தவர்களால் தலைமறைவாக நடத்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் (Flying University) உயர்கல்வி கற்றார்.
சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு 1891-ல் பிரான்ஸுக்குச் சென்றார். அங்கே பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றைப் படித்தார். மாலை நேரம் ஆசிரியராக வேலை பார்த்ததால் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினார். கடுங்குளிரில் அவதிப்பட்டார். பசியால் சில நேரம் மயங்கிவிழுந்துவிடுவார்.
MARIE_CURIE Marie Curie மேரி கியூரி கனவுகளைப் பகிர்ந்துகொண்ட கணவர்
பாரிஸில் இருந்த அறிவியல் ஆசிரியர் பியரி கியூரியுடன் இணைந்து அவரது எளிமையான ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சிகளை மேரி தொடங்கினார். அறிவியல் மீதான காதல் இருவரையும் இணைத்தது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கதிரியக்கத் தன்மை கொண்ட பொலோனியம், ரேடியம் என்ற இரண்டு புதிய தனிமங்களை இவர்கள் 1898-ல் கண்டுபிடித்தனர். இந்தத் தனிமம் மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டறிவது உள்ளிட்ட பல முன்னேற்றங்களுக்குப் பயன்பட்டது.
1903-ல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார் மேரி. அதே ஆண்டு அவருக்கும் பியரிக்கும் பேராசிரியர் ஹென்றி பெக்யுரல் (Henry Becquerel) என்பவருக்கும் அவர்களது கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. முதலில் நோபல் பரிசுக் குழுவினர் பியரிக்கும் ஹென்றிக்கும்தான் பரிசுகொடுக்க உத்தேசித்திருந்தனர். ஆனால், அந்தக் குழுவைச் சேர்ந்த பெண் கணித அறிஞர் ஒருவர் இந்தத் தகவலை முன்கூட்டியே பியரிக்குத் தெரிவிக்க, அவர் தன் மனைவிக்கும் பரிசு தரவில்லை என்றால் பரிசைப் பெற மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதையடுத்துதான் மேரிக்கும் நோபல் பரிசு வழங்க ஒப்புக்கொண்டனர்.
நோபல் பரிசை வாங்க ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்குச் செல்ல இந்தத் தம்பதி மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில் அவர்கள் ஆராய்ச்சிகளில் மூழ்கியிருந்தனர்.
1906-ல் சாலை விபத்தில் பியரி உயிரிழந்தார். கணவர் இறந்த பின்னும் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார் மேரி. ரேடியம், பொலோனியம் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக 1911-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை மேரி பெற்றார்.
உலகப் போரில் உயிர்களைக் காத்தவர்
1914-ல் தொடங்கிய முதல் உலகப் போரில் பல ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றியவர் மேரி கியூரி. போர்க் களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்க உதவியாகக் கதிரியக்க மையம் தேவைப்படுவதைக் கண்டறிந்தார். முதலில் வாகனங்களில் நகரும் கதிரியக்க மையங்களை உருவாக்கினார். சில வாகனங்களை இவரே ஓட்டினார். போரின் முதல் ஆண்டில் பிரான்ஸ் மருத்துவமனைகளில் 200 கதிரியக்க மையங்களை உருவாக்கினார். கதிரியக்கச் சிகிச்சைக்கு உதவப் பல பெண்களுக்குப் பயிற்சியளித்தார். இதற்கெல்லாம் பிரான்ஸ் அரசு அவருக்கு எந்தவிதமான அங்கீகாரமும் அளிக்கவில்லை.
மக்கள் விஞ்ஞானி
ஆராய்ச்சிக்காகத் தொடர்ந்து கதிர்வீச்சுக்கு உள்ளானதால் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1934 ஜூலை 4 அன்று உயிரிழந்தார். ஆனால், கதிரியக்கம் சார்ந்த அவரது கண்டுபிடிப்புகள்தாம் இன்று புற்றுநோய் சிகிச்சைக்குப் பெரிதும் உதவுகின்றன.
ரேடியம், மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அதற்குக் காப்புரிமை பெற மறுத்துவிட்டார். வேதியியல் நோபல் பரிசுத் தொகையை ஏழை மாணவர்களுக்கான ஆய்வகம் கட்டுவதற்காகக் கொடுத்துவிட்டார். இறுதிவரை எளிமையாக வாழ்ந்தார். கிடைத்த பணப் பரிசுகள் அனைத்தையும் ஆராய்ச்சிக்கும் மக்கள் பயன்பாட்டுக்குமே கொடுத்தார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago