தனிநபர் அந்தரங்க உரிமை (Right to Privacy) என்பது ஒரு மனிதரின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 ஆகஸ்ட் 24 அன்று தீர்ப்பளித்துள்ளது. இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கும் வேளையில்தான் கேரளாவைச் சேர்ந்த ஹாதியா என்ற 24 வயதுப் பெண்ணின் மதமாற்றமும் திருமணமும் தேசிய விவாதப் பொருளாகியிருக்கின்றன.
ஹாதியாவான அகிலா
கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹாதியா. பிறப்பால் இந்துவான இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அகிலா. சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஹோமியாபதி மருத்துவம் பயின்றுவந்தார். கல்லூரித் தோழிகள் மூலம் இஸ்லாமிய மதக் கருத்துகள் அவருக்கு அறிமுகமாயின. அவற்றின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். தனது பெயரை ஹாதியா என்று மாற்றிக்கொண்டார்.
2016 ஜனவரி 19 அன்று ஹாதியாவின் பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹாதியா, தான் சுயவிருப்பத்தின்படி இஸ்லாமிய மதத்தைத் தழுவியதாகக் கூறினார். இதையடுத்து ஹாதியாவின் பெற்றோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் ஆட்கொணர்வு மனு
2016 ஆகஸ்ட் 17 அன்று மீண்டும் ஒரு ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் ஹாதியாவுடைய தந்தை அசோகன். அந்த மனுவில் தன் மகளை வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்று இஸ்லாமியர் ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுத்து அவரைத் தீவிரவாத அமைப்புகளில் சேர்க்க முயற்சி நடப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து ஹாதியா வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவரைக் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.
‘லவ் ஜிகாத்’- மாயையா, உண்மையா?
இந்த மனு மீதான விசாரணைக்கிடையே ஷெஃபின் ஜஹான் என்பவருடன் ஹாதியாவுக்குத் திருமணம் நடந்தது. விசாரணை நடக்கும்போது, ஹாதியா வுக்குத் திருமணம் நடந்தது குறித்துப் பல சந்தேகங்களை எழுப்பியது கேரள உயர் நீதிமன்றம். 2017 மே 24 அன்று ஹாதியா-ஷெஃபின் திருமணத்தை ரத்து செய்ததோடு ஹாதியா அவருடைய தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கேரளத்தில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்துப் பெண்களைக் காதல் திருமணம் மூலம் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றும் அமைப்புகள் இயங்கிவருகின்றன என்ற அசோகன் உள்ளிட்டோரின் குற்றசாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கேரள உயர் நீதிமன்றம் கருதியதாகவே இந்தத் தீர்ப்பைப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ஷெஃபின் ஜஹான். கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பில் வெளியிடப்பட்ட கருத்துகளைக் கவனத்தில்கொண்டு, கேரளாவில் ‘லவ் ஜிகாத் திட்டம்’ செயல்படுகிறதா என்று விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) உத்தரவிட்டது. கேரள அரசு அப்படியொரு விசாரணைக்கான தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அடுத்ததாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்து அவரை அவருடைய தந்தையின் பாதுகாப்பில் இருக்க உத்தரவிட்டது சட்டரீதியாகச் சரியா என்ற கேள்வியை எழுப்பியது இந்த அமர்வு.
ஆனால், விசாரணை இன்னும் நீடிக்கிறது. அக்டோபர் 31 அன்று நடந்த விசாரணையில், நவம்பர் 27-ல் ஹாதியாவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாதியாவிடம் பேசி அவர் தன் சுயவிருப்பத்தின்படிதான் மதம் மாறியிருக்கிறாரா, வற்புறுத்தப்பட்டு மதம் மாறியிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொண்டு அதன் பிறகு தீர்ப்பு வழங்குவதாகச் சொல்லியிருக்கின்றனர் நீதிபதிகள்.
நசுக்கப்படும் பெண்ணுரிமை
இந்த வழக்கின் மூலம் ஹாதியா என்ற 18 வயதைக் கடந்த பெண்ணின் உரிமைகள் நசுக்கப்பட்டுவருவதாகப் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அதோடு ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்யும் கேரள உயர் நீதிமன்றத்தின் வரலாறு காணாத தீர்ப்பு, சட்ட வல்லுநர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஒருவேளை ஷெஃபின் ஜஹானுக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பது உண்மை என்று வைத்துக்கொண்டாலும்கூட ஒரு தீவிரவாதியையோ குற்றவாளியையோ திருமணம் செய்துகொள்ளச் சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்ததோடு அவர் குறிப்பிட்ட காலத்துக்கு செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது, அவரது விருப்பத்துக்கு மாறாக அவரைப் பெற்றோருடன் தங்கவைக்க உத்தரவிட்டது, அவர் ஊடகங்களில் பேசத் தடை விதித்திருப்பது எனப் பல்வேறு வகைகளில் அவரது தனிநபர் உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் அவர் பல மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கும் பெண்ணியவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கூற்று புறக்கணிக்கத்தக்கதல்ல.
அதிர்ச்சியளிக்கும் கருத்துகள்
‘அமைதி, நீதி மற்றும் ஜனநாயகத்துக்கான குடிமக்கள்’ என்ற அமைப்பு தனிமனித அந்தரங்க உரிமையை அங்கீகரிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி கடந்த வாரம் சென்னையில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. அந்தக் கருத்தரங்கில் பேசிய பெண்ணியச் செயற்பாட்டாளர் வ.கீதா, “ஹாதியா வழக்கில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் கேரள நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தியிருக்கும் மொழி. 24 வயதுப் பெண்ணைச் சுவாதீனமற்ற குழந்தையாக அவர்கள் பாவித்திருக்கிறார்கள்.
அவர் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய வயதைச் சேர்ந்தவர் (Vulnerable age) என்கிறார்கள். ஒருபுறம் 15 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கிறோம். அப்படியென்றால் 24 வயதுப் பெண்ணை எப்படிப் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வயதுக்காரர் என்று சொல்ல முடியும். இன்னொன்று ஒரு பெண்ணுக்கு எது நன்மை என்பதை அவருடைய பெற்றோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்கள். ஹாதியா வழக்கைப் பெண்ணுரிமைக்கு மிகப் பெரிய பங்கம் ஏற்படுத்தும் வழக்காகத்தான் பார்க்க வேண்டும்” என்றார்.
திருமண ரத்துக்கு இடமில்லை
அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனிடம் பேசியபோது “24 வயதான ஒரு பெண்ணுக்கு யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அந்தக் கணவனுக்கோ வேறு யாருக்குமோ தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்தப் பெண்ணின் உரிமையை அதனுடன் தொடர்புபடுத்த முடியாது.
ஒரு பெண், தெரியாமல் ஒரு தீவிரவாதியைத் திருமணம் செய்திருந்தால்கூடத் திருமணத்தை ரத்து செய்யக் கூடாது. மதமாற்றத்தையும் கேள்வியெழுப்ப முடியாது. அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் தனிநபர் அந்தரங்க உரிமைக்கான தீர்ப்பு இதற்கு வலுச்சேர்க்கிறது. எனவே, அதை அடிப்படையாக வைத்து ஹாதியா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று சொன்னார்.
உரிமைகள் மீட்கப்படுமா?
இந்த வழக்கு தன்னிடம் வந்தவுடனேயே ஹாதியாவை நேரில் கூப்பிட்டு உச்ச நீதிமன்றம் விசாரித்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். இப்போது ஒரு வழியாக நவம்பர் 27 அன்று ஹாதியாவின் குரல் உச்ச நீதிமன்றத்தில் ஒலிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தக் குரல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை அவருக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதே மனித உரிமையிலும் பெண்ணுரிமையிலும் அக்கறைகொண்டவர்களின் விருப்பம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago