பெண்ணும் ஆணும் ஒண்ணு 30: புது உலகைப் படைத்திடக் கிளம்புவோம்

By ஓவியா

 

ருவறை தொடங்கி பெண்ணின் ஒவ்வொரு பருவத்திலும் அவள் இந்தச் சமுதாயத்தில் என்னவாக இருந்துவருகிறாள் என்பதில் சில முக்கியமான புள்ளிகளை இந்தத் தொடர் தொட்டுக் காட்டி வந்திருக்கிறது. முதுமை என்று எடுத்துக்கொண்டால் இருபாலரைப் பற்றியுமே பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்தச் சமுதாயம் மேலும் மேலும் பணத்துக்கு முக்கியத்துவமளித்துக்கொண்டே போகிறது. அதன் விளைவு உற்பத்தி வட்டத்துக்கு வெளியே தள்ளப்பட்டுவிடும் முதியோர் புறக்கணிக்கப்பட்டுவிடுகிறார்கள். சொத்து, சமுதாயச் செல்வாக்கு, மற்ற மனிதர்களின் உறவு இவ்வாறு பல்வேறு காரணிகளின் கூட்டு இணைப்பில்தான் முதியோரின் வாழ்க்கைத் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

பெண்ணின் இறுதி ஆதாரம்

இந்த அனைத்துக் காரணிகளுக்குமே தன் கணவரைச் சார்ந்திருக்கும் பெண்ணின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கணவன், மகன் - இந்த இரண்டு ஆண்களின் உறவுத் தன்மையே ஒரு பெண்ணின் முதுமைப் பருவத்தைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால், பிறவி வேலைக்காரியான பெண்ணுக்கு என்றென்றைக்குமான ஆதரவு அவளது உழைப்புதான். சாகும்வரை அவளுக்கென்று ஏதோ ஒரு வேலை அடுப்படியில் இருப்பதால், அதுவே அவளின் இறுதி ஆதாரமாகத் திகழ்கிறது. முதுமையில் பணம் எதுவும் சேர்த்து வைக்காத ஓர் ஆணின் வாழ்க்கையைவிட, இந்த ஒரு வகையில் மட்டும் பெண்ணின் வாழ்க்கை சற்று மேம்பட்டதாக இருக்கிறது என்று கூறலாம்.

புதிதாக நுழையும் பணிகள்

பணியிடத்தில் பெண்களுக்கான பிரச்சினைகள், தொழில்முனைவில் பெண்கள், அவர்களது பின்னணிகள் போன்றவையெல்லாம் இன்னும் ஆழமான பரிணாமத்தோடு பேசப்பட வேண்டியவை. பல்வேறு துறைகளில் பெண்களின் நுழைவு என்பது புது வரவாகவே நிகழ்ந்திருக்கிறது, நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பல்வேறு காரணிகள் பணியாற்றுகின்றன. உதாரணமாக, ஒரு காலத்தில் நகைத் தொழிலில் பெண்களே இல்லாமலிருந்தார்கள். ஆனால், பெரு இயந்திரங்களின் உதவியுடன் பெருக்கப்பட்ட உற்பத்தி வடிவத்தில் இன்று பெண்களே அடிப்படைத் தொழிலாளிகளாக அந்தத் துறையில் முன்னணியில் இருக்கிறார்கள்.

தொழில்முனைவின் தடைக்கற்கள்

பெண்களைத் தொழில்முனைவோர்களாக வங்கிகள் இன்னும் பெரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. சிறுதொழில்களில் பெண்கள் குழுக்களுக்கு ஆதரவு கிடைக்கிறது. பெரும் தொழிலதிபர்களாகப் பெண்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. சமுதாயத் தடைக்கற்கள் குறித்தும் ஏற்கெனவே நிறைய குறிப்பிட்டிருக்கிறோம். தனிப் பெண்களின் தொழில்முனைவுக்கான நிதியுதவிகள் பெரும்பாலும் வங்கிகளால் ஊக்குவிக்கப்படுவதில்லை. இது பற்றி வெளிப்படையான புள்ளிவிவரங்களும் இல்லை. இதற்கான அடிப்படையான காரணம் படித்த, தொழில்நுட்ப அறிவு பெற்ற பெண்கள் அரசியல் துறைகளில் கவனத்தைக் குவிப்பது இல்லை. அதிலிருந்து விலகியே நிற்கிறார்கள்.

இங்கு அனைத்து காரியங்களும் செல்வாக்குச் செலுத்தும் லாபியிங் (lobbying) முறையிலேயே நடைபெறுகின்றன. ஆனால், பெண்ணோ எந்தச் சமுதாயச் செல்வாக்கும் அற்றவளாக இருக்கிறாள். ஆண்கள் பின்புலமின்றி அவர்களால் எந்த லாபியிங்கும் செய்ய முடியாது. எந்தத் துறையிலும் பெண் தொழிலாளியாக வர முடிகிறதே தவிர, முதலாளியாகவோ அதன் தரகராகவோ வருவதென்பது மிகக் கடினம். அவ்வாறு வருகிற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள பெண்கள்,மேல்தட்டிலிருந்து மட்டுமே வர முடிவதற்கும் இதுவே காரணம். நமது நாட்டின் பொருளாதார அமைப்புடன் பெருமளவு ஒட்டியுள்ள சாதிய அடுக்கில், கீழேயிருந்து ஏன் பெண் தொழில்முனைவோர் உருவாக முடியவில்லை என்னும் கேள்விகளை எழுப்பிப் பார்க்க வேண்டும்.

கனவாகவே நீடிக்கும் வாழ்க்கை

மிகக் குறுகிய எண்ணிக்கையில் சில புதிய வாழ்க்கை வடிவங்கள் தோன்றி நிலவிவருகின்றன. லிவிங் டுகெதர் என்றழைக்கப்படும் திருமணமின்றி பெண்ணும் ஆணும் இணைந்து வாழ்தல் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களுக்குள் இணைந்து வாழ்தல் போன்ற வடிவங்கள் அவை. அண்மைக்காலச் சட்டங்களும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இந்த வாழ்க்கை வடிவங்களை அங்கீகரித்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் பெரிய அளவில் இந்த முயற்சிகள் வளர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து மிகக் குறுகிய எண்ணிக்கையிலேயே இது போன்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தாலி, சடங்குகளற்ற திருமண வாழ்க்கையாகவே பெரும்பாலோர் அந்த முறையில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையின் அன்றாட நடைமுறை கணவன் - மனைவி வாழ்க்கையையே ஒத்ததாக இருப்பதால் மக்களிடம் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேநேரம், நெருங்கிப் பழகும் தோழர்களுக்கு இடையிலான வாழ்க்கையில் பெண்கள் ஆளுமையுடன் இருக்க வாய்ப்பிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், திருமணத்தைப் புறக்கணித்து இணைந்து வாழ்தல் என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் முற்றிலும் புரட்சிகரமான வாழ்க்கையாகும். இன்று அது ஒரு கனவு.

இன்னும் பிறக்காத மொழி

பாலியல் சிறுபான்மையினர், தன்பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பேசுவது முழுமையான புரிதலைத் தந்துவிடாது. இன்னும் பிறக்காத மொழியாக இவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஆனால், இவர்களது பிரச்சினைகளுக்கும் பிறர் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கும் ஆழமான தொடர்புகள் இருக்கின்றன. அந்தக் கண்டடைதலே மிகவும் முக்கியம். ஆண்மை என்றும் பெண்மை என்றும் கற்பிக்கப்பட்டிருக்கும் பண்புத் தொகுதிகள் இயற்கையால் தீர்மானிக்கப்பட்டவை அல்ல. கடந்து சென்றிருக்கும் மனித இன வரலாற்றால் தீர்மானிக்கப்பட்டவை. இவற்றை மறுநிர்மாணம், மறுவரையறை செய்வது இவர்கள் எல்லோருடைய பங்களிப்போடும்தான் சாத்தியப்படும்.

தொடர்ந்து மறுக்கப்படும் பங்கு

அரசியலில், பொதுவாழ்வில் பெண்கள் பங்கு என்று பார்க்கும்போது கிடப்பில் போடப்பட்டிருக்கும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நினைவுக்கு வரும். நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு பத்து சதவீதத்தைக்கூடத் தாண்டவில்லை. இடஒதுக்கீடு என்பது நமது அரசியலில் ஏற்கெனவே ஏற்கப்பட்டிருக்கும்போது பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பதில் என்ன தடை? சாதிரீதியாக உள் ஒதுக்கீடு கேட்டால்கூட, அதைக் கொடுப்பதில் என்ன பிரச்சினை?? இல்லை பிற்படுத்தப்பட்டோருக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு சாதிரீதியாக இடஒதுக்கீடு கேட்கப்பட்டபோது பெண்களுக்கென உள்ஒதுக்கீடு கேட்கவில்லை. அதனால் இப்போது இந்த உள்ஒதுக்கீட்டைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு பெண்களுக்கான மசோதா வரட்டும் என்று சொல்வதில்தான் என்ன பிரச்சினை? உள்ஒதுக்கீட்டோடு பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வரும்வரை போராடுவோம் என்றுகூட யாரும் அறிவிக்கவில்லையே? இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில், உண்மையில் அரசியல் ஆண்களிடம் இருக்கிறது, அவர்களிடம் மட்டுமே இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.

எத்தனை காலம் இப்படியே?

திட்டமிடும் இடத்திலிருப்பவர்களின் சிந்தனையில் பெண்ணுக்கான இடமில்லை என்பதை இந்தத் தொடர் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறது. திட்டமிடும் இடத்தில் பெண்கள் வராமல், இங்கு பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பது திண்ணம். பெண்களின் ஒதுக்கீட்டுக்காக ஆண்கள் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி கேட்பதற்கு முன், பெண்களான நாம் எந்த அளவுக்கு வீதிக்கு வந்து அதற்காகப் போராடியிருக்கிறோம் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தியாகமே திணிக்கப்பட்ட குணமாய்

அடிமை உழைப்பே வாழ்வாய்

ஆணின் ஒட்டுண்ணி உயிராய்

இனியும் எத்தனை காலம் பெண்ணே….???

- என்று பெண்கள் சமுதாயத்திடம் கேட்கிறோம்.

26CHLRD_OVIYA.IMG0

ஒவ்வொரு பெண்ணும் தனி மனுஷியாய் இந்தச் சமுதாயத்தின் அடிப்படை அலகாய் வாழும் உரிமை வேண்டும். அந்த உலகைப் படைத்திடக் கிளம்பிட வேண்டும். விவாதங்கள் தொடரட்டும் விடுதலையின் பாதையில்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர்,

பெண்ணியச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்