எசப்பாட்டு 9: எல்லா இடமும் ஆண்களுக்கல்ல!

By ச.தமிழ்ச்செல்வன்

ஸ்

பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட் மாநகரத்தின் மாநகரப் போக்குவரத்துக் கழகம் கடந்த ஜூலை மாதம் ஒரு தடையாணை பிறப்பித்தது. “பொதுப் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயணிக்கும் ஆண்கள் தங்கள் கால்களை அகலமாக விரித்து வைத்து உட்காரக் கூடாது. கால்களை ஒடுக்கி ஒரு இருக்கைக்குள் தங்கள் உடலை வைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே அந்த ஆணை. ஏற்கெனவே அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் ஆண்கள் இப்படி உட்கார்வதற்கு எதிராக விழிப்புணர்வு இயக்கம் (2013-14-களில்) நடத்தப்பட்டு அதை மீறி காலை அகல விரித்து உட்காரும் ஆண்கள் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

இடப் பிரச்சினை மட்டுமல்ல

ஆங்கிலத்தில் இதை Manspreading என்று சொல்கிறார்கள். இது பிறருக்கான இடத்தை அடைக்கும் பிரச்சினையாக மட்டும் அங்கே பார்க்கப்படவில்லை. இடத்தை ஆக்கிரமிக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் இது பார்க்கப்பட்டது. ஒட்டுமொத்தச் சமூகத்திலும் பொது வெளியிலும் இடத்தை அடைத்துக்கொண்டுதான் ஆண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அது பற்றி அவர்களுக்கு எந்தத் தன்னுணர்வும் குற்ற உணர்வும் இருப்பதில்லை. அதன் தொடர்ச்சியாகவே பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் இப்படிக் காலை அகட்டி உட்கார்கிறார்கள் என்று பெண்ணிய இயக்கங்கள் பிரச்சார இயக்கத்தை நடத்தின.

காலை அகட்டி உட்கார்வது பிறரை (சக பயணிகளை) மதிக்காத, விட்டேத்தியான, ஆதிக்க மனநிலையாகவும் முன்னிறுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாகப் பெண்ணியவாதிகள் முன்னெடுத்த விழிப்புணர்வு இயக்கங்களின் காரணமாகச் சில நாடுகளில் இப்படிச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில் இப்படிக் கால்களை அகட்டி உட்கார்வது அநாகரிகமான செயல் என்கிற அளவுக்குப் பொதுப்புத்தியில் ஏறிவிட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்களை அகட்டி உட்காரும் கெட்ட பழக்கம் உள்ளவர் என்று ஹிலாரி கிளிண்டனும் பாரக் ஒபாமாவும் குற்றம்சாட்டியது ஊடகங்களில் சில காலம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது.

பெண்ணுக்கும் குறைவான இடம்தான்

இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்றும் பெண்ணியவாதிகள் கிளப்பிவிட்ட வேண்டாத வாதம் இது என்றும் ஆண் உரிமைப் போராளிகள் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆண்களின் உடல்வாகு, ஆணுறுப்பின் அமைப்பு ஆகியவற்றால் இப்படி அகலமாக உட்கார்ந்தால்தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதுடன், இது சாதாரண உடலியல் பிரச்சினை என்கின்றனர் அவர்கள். பெண்கள் யாரும் இப்படிக் கால்களை அகட்டி உட்கார்வதே இல்லையா என்றும் எதிர்க்கேள்வி போடுகின்றனர்.

ஆனால், தந்தைவழிச் சமூகமாக மாறிவிட்ட நம் உலகம் ‘உனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், விதிக்கப்பட்ட முறையில் நீ அமர வேண்டும்’ என்றே பெண்களை வளர்க்கிறது. பொதுவெளியில் மிகக் குறைவான இடத்தை எடுத்துக்கொள்பவர்களாகவே பெண்கள் வளர்க்கப்படுகின்றனர். கால்களை அகட்டி உட்கார்வது பாலியல் வக்கிரப் பார்வைக்குத் தீனி போடும் என்கிற கோணத்தில் அவர்கள் மனநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

மாத விலக்குக் காலத்தில் வேண்டுமானால் பெண்கள் கால்களை விரித்து உட்காரும் தேவை ஏற்படலாம். மற்ற நேரம் பொதுவெளிகளில் பெண்கள் தங்கள் கால்களையும் உடம்பையும் ஒடுக்கி உட்கார்வதுதான் வழக்கமாக இருக்கிறது.

தமிழகத்தில் பேருந்துகளின் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும் லட்சணத்தில் ஆண்களும்கூடக் கால்களை ஒடுக்கி உட்கார்ந்தால்தான் இடைஞ்சலின்றிப் பயணிக்க முடியும் என்பது வேறு கதை. ஆண்கள் ஒடுங்கி உட்கார்ந்து பயணிக்கிறார்கள் என்பதும் உண்மை. அதனால் உடலியல் பிரச்சினை ஏதும் அவர்களுக்கு வரவில்லையே.

தொன்றுதொட்டுத் தொடரும் ஆக்கிரமிப்பு

பொதுவெளிகளை ஆண்கள் ஆக்கிரமிப்பது நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு தொடர் நிகழ்வு. நாம் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் தாய்வழிச் சமூகமாக இருந்தோம். வேட்டையாடிக் கொண்டுவந்த கால்நடைகளில் சுட்டுத் தின்றது போக எஞ்சி இருந்தவற்றை மேய்க்கத் தொடங்கினோம். கால்நடைகளே சொத்துடைமையின் தொடக்கம். மாடு என்பதற்குச் செல்வம் என்றொரு பொருள். ‘மாடல்ல மற்றயவை’ என்று முடியும் குறள் அதனால்தான் வந்தது. அந்தச் செல்வத்தின் உடைமையாளராக ஆரம்பத்தில் பெண்ணே இருந்தாள். அவளிடமிருந்து பிரிந்து செல்லும் ஆணுக்கு நாலு மாடுகளைக் கொடுத்து, “போய்ப் பொழைச்சிக்கோ ” என்று பெண் அனுப்பினாள். அப்படியே போகப்போக ஆண்களின் கையில் கால்நடைகள் பெரும் சொத்தாகச் சேர, கால்நடைகள், மேய்ச்சல் கருவிகள், மேய்ச்சல் நிலங்கள் எனச் சொத்து பொதுவெளியில் உருவாகி அது ஆணின் கைக்குப் போய்ச் சேர்ந்தது என்பது ஏங்கல்ஸ், மார்கன் போன்றோரின் வாக்கு.

ஆணின் இட ஆக்கிரமிப்பு அப்போது தொடங்கி நடக்கிறது. மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமித்த ஆண், பின்னர் விளைநிலமாக ஆனபோது அதற்கான நில ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபடத் தொடங்கினான். இனக் குழுக்களில் வாழ்ந்த பெண்கள் அன்று நடப்பிலிருந்த, வரைமுறையற்ற பாலியல் தொல்லைகளுக்கு அஞ்சி ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒருதார மணமுறைக்குள் வந்து மாட்டிக்கொண்டனர். பெண்ணின் பாலுறவுச் சுதந்திரம் ஒருதார மணமுறையில் கட்டுக்குள் வந்துவிட்டபடியால் தனக்கான வாரிசுரிமையை ஆணும் எளிதாக நிலைநாட்டிக்கொள்ள முடியும் நிலை சாதகமாக அமைந்தது. பெண் கற்பு தமக்குப் பெருமை சேர்ப்பதை அறிந்த ஆண்கள் அதை மேலும் மேலும் இறுக்கமாக்கிவிட்டனர்.

இந்தப் போக்கின் ஒரு பகுதியாக பெண்ணுக்கான இடம் வீட்டிலும் பொதுவெளியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சுட்டிக்காட்டப்பட்டது.

வீட்டுக்குள்ளும் தொடரும் ஆக்கிரமிப்பு

வீடுகளில் பெண்கள் அதிகம் புழங்கும் இடமாக இருக்கும் அடுப்பங்கரை எப்போதும் மிகச் சிறியதாக இருப்பதும் ஆண்களும் புழங்கும் அறைகள் பெரிதாக இருப்பதும் தற்செயலானதில்லை. மேய்ச்சல் நிலமெங்கும் சுற்றித் திரிந்த ஆண், விளைச்சல் நிலங்களையெல்லாம் ஆக்கிரமித்த ஆண், வீட்டுக்குள்ளும் அதிக இடத்தைத் தனதாக்கிக் கொண்டான்.

நெருப்பை அணையாமல் காப்பதற்காக அடுப்பறைகள் சிறியதாகக் கட்டப்பட்டன என்று ஆணுரிமைவாதிகள் அறிவியல் பேச முயலலாம். ஆனால், மின் அடுப்புகளும் கேஸ் அடுப்புகளும் வளர்ந்துவிட்ட காலத்தில் அந்த வாதம் நிற்காது. இங்கே வீடு கட்டும் கலை நுட்பத்துக்குள்ளும் ஆணாதிக்க மனோபாவம் இருப்பதை அடையாளம் காண முடியும்.

கால்களை அகட்டி அகட்டி பொதுவெளிகளை நாம் ஆக்கிரமித்தது போதும். பெண்ணுக்குரிய இடத்தை இந்த நூற்றாண்டிலாவது திருப்பித் தந்துவிட வேண்டும் என்கிற நியாய உணர்வுக்கு ஆண்மனம் திரும்ப வேண்டும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு:tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்