மாயவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் என் மனைவி சித்ரபாரதி. பெரியவர்கள் பார்த்து செய்துவைத்த திருமணம் எங்களுடையது. திருமணமான மறுநாளே ‘காக்க காக்க’ பட விழாவுக்காகச் சென்னையில் இருக்க வேண்டிய நிலை. சென்னைக்கு வந்தவுடன் திருமணம் நிச்சயம் ஆன அவசரத்தில் வாங்கிய ஃபிளாட்டின் சாவியை எடுத்துக் கொடுத்தேன். “எதுவுமே இல்லாத இந்த வீட்டை, சந்தோஷம் நிறைந்த இடமாக மாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது” என்றேன். அன்றிலிருந்து இன்றுவரை வீட்டை மகிழ்ச்சியால் நிரப்பிவருகிறார் என் பேராசிரியர்.
ஆரோக்கியமான புரிதல்
எனக்கான விஷயங்கள் அனைத்தையுமே அவர்தான் கவனித்துக்கொள்கிறார். பர்ஸில் குறைந்தபட்சம் 3,000 ரூபாய் பணம், இரண்டு கார்டுகள் இருக்கலாம் என்று முடிவெடுத்ததே அவர்தான். வங்கிக் கணக்கு, வீட்டுச் செலவு அனைத்தையுமே அவர்தான் கவனிப்பார். அவரிடம் சம்பளக் காசோலையை மட்டுமே கொடுப்பேன். அதை எங்கு முதலீடு செய்யலாம் என்பது உள்ளிட்ட அனைத்தையும் அவரே சரியாகப் பார்த்துக்கொள்வார். வீட்டைப் பற்றிய கவலை இல்லாமல் நான் ஒளிப்பதிவில் கவனம் செலுத்த சித்ரபாரதியே காரணம்.
நான் படப்பிடிப்பில் இருந்தால் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத் தொலைபேசியில்கூட அழைக்க மாட்டார். அதனால் படப்பிடிப்பு இடைவெளியில் நானே பேசிவிடுவேன். என் ஆரோக்கியத்தில் அவர் சமரசம் செய்துகொண்டதே இல்லை. சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் வீட்டிலிருந்து சாப்பாடு கொடுத்து அனுப்பிவிடுவார். வெளியூருக்குச் சென்றால், நான் தங்கியிருக்கும் ஹோட்டலின் செஃப்பிடம் பேசி, என் மெனுவைச் சொல்லுவார்.
நிதியமைச்சர்
என் மனைவி சினிமாவை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார். நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதை வைத்து சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவது எப்படி என்று தெரிந்துவைத்துள்ளார். அந்தக் குணம்தான் சினிமாவில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். என் கஷ்டங்கள் அனைத்தையுமே அவரிடம் சொல்வேன். நான் பெரிய மலையாக நினைத்து கலங்கியவற்றுக்குக்கூட அவர் மிகச் சாதாரணமாகத் தீர்வைச் சொல்லி வழிகாட்டுவார். ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி தாமதமாகிறது என்றால்கூட, “பரவாயில்லை, ஒரு படத்தை முடிக்காமல் அடுத்ததை ஒப்புக்கொள்ளாதீர்கள்” என்பார். நான் செய்கிற வேலையில் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். எனக்கு அவர் கொடுத்த மிகப் பெரிய பரிசு குழந்தைகள் சம்யுக்தாவும் சித்தார்த்தும்தான். நான் யாருடனும் அதிகமாகப் பேசமாட்டேன். ஆனால், குழந்தைகள் பிறந்த பிறகு மற்றவர்களிடம் ஓரளவு இயல்பாகப் பேசுகிறேன். இந்த மாற்றத்துக்கும் என் மனைவியே காரணம்.
நான் மாணவன்
ஒரு மாணவனாக சித்ரபாரதியிடம் நிறைய கற்றுவருகிறேன். எதையுமே அவர் நிதானமாக அணுகுவார். சில படங்கள் ஒளிப்பதிவுக்கு நமக்கு வரும் என நினைத்திருப்பேன். அவை எனக்குக் கிடைக்காதபோது வருத்தமாக இருக்கும். அப்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்தி தைரியமூட்டுவார். எப்போதுமே ரொம்ப பாசிட்டிவாகப் பேச வேண்டும் என்பதை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். “நிறைய ஒளிப்பதிவு செய்துவிட்டீர்கள், கதை எழுதி இயக்குங்களேன்” என்று சொல்லியிருக்கிறார். மனைவி சொன்னால் சரியாதானே இருக்கும், படம் இயக்கலாமா என்று யோசித்துவருகிறேன்.
மறக்க முடியாத தருணம்
சித்ரபாரதி ஒருமுறை ஊருக்குச் சென்றிருந்தார். நான் சென்னையில் இருந்தேன். திடீரென்று எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவருக்குத் தெரிந்தவுடன் மருத்துவரிடம் பேசி என்ன பிரச்சினை என்றெல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப அமைதியாக மருத்துவமனை வந்தார். அவரது நிதானமான அணுகுமுறையைப் பார்த்து, “நீங்கதான் பயப்படுகிறீர்கள், அவங்க எப்படிப் பயப்படாமல் இருக்காங்க பாருங்கள்” என்று மருத்துவமனையில் உள்ளவர்கள் சொன்னார்கள். பயத்தை வெளியே காட்டாமல், என்னை அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக்கொண்டார். அந்தப் பொறுமையும் துணிவும்தான் சித்ரபாரதி!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago