மனைவியே மந்திரி: வாழக் கற்றுத் தந்த ஆர்த்தி

By கா.இசக்கி முத்து

ங்களுடையது காதல் திருமணம் என்பதால் முதலில் ஆர்த்தி எனக்குத் தோழி, பிறகுதான் மனைவி. திருமணத்துக்கு முன்புவரை பொறுப்பில்லாமல் இருந்தேன். திருமணத்துக்குப் பின்புதான் பொறுப்பு வந்தது. அதற்குக் காரணம் ஆர்த்திதான். ஸ்காட்லாந்து நாட்டில் சர்வதேச மேலாண்மை படித்தவர். அந்தப் படிப்பு அவருக்குப் பல விதத்தில் பயனுள்ளதாக இருந்தாலும், என்னை நிர்வகிக்கவும் பயன்படுகிறது. காரணம் அது மிகவும் கடினமான வேலை. என் சமூக வலைத்தளம், அலுவலக வேலை உள்ளிட்டவற்றை அவரே நிர்வகித்துவருகிறார். அதனால்தான் படப்பிடிப்பில் எந்தவித டென்ஷனும் இல்லாமல் என்னால் பணிபுரிய முடிகிறது. வீட்டில் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே நான் நிம்மதியாகப் பணிபுரிவேன். அந்த சந்தோஷம் என் வீட்டில் எப்போதும் இருப்பதற்கு என் மனைவிதான் காரணம்.

ஆச்சரியத் தருணம்

என்னால் சென்னையில் அதிகமாகச் சுற்ற முடியாது. அதனால் அடிக்கடி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். எப்போதுமே நான் மனநிம்மதியுடன் இருக்க வேண்டும் என விரும்புவார். எனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சென்னையில் இருக்க மாட்டேன். இந்த ஆண்டுகூட எனது பிறந்த நாளுக்கு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

ஆர்த்திக்குப் பெரிதாக நான் எதுவுமே ஆச்சரியம் அளித்ததில்லை. நகைகள் ஏதாவது வாங்கிக் கொடுப்பேன், அதுவுமே அவரது மனதுக்குப் பிடித்தபடி இருக்குமா என்று தெரியாது. ஆனால், ஆர்த்தி எனக்கு நிறைய ஆச்சரியங்களைக் கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு என் பிறந்தநாளுக்கு எங்கேயும் செல்ல வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். அன்று ஒரு கீ-செயின் கொடுத்தார். “சூப்பரா இருக்கு, தேங்க்ஸ்” என்று சொன்னேன். “கீழே போய்ப் பார்” என்றார். நான் ரொம்ப நாளாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட Harley Davidson பைக் நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன்!

மறக்க முடியாத நாள்

‘எங்கேயும் காதல்’ படத்துக்காக வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது 20 நாட்கள் கழித்துத்தான் ஆர்த்திக்குக் குழந்தை பிறக்கும் என்றார்கள். அதற்குத் தகுந்தபடி திட்டமிட்டு 15 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் முன்னதாகவே பிரசவ வலி வந்துவிட்டது. அவசரமாக டிக்கெட் போட்டு விமானத்தில் பறந்து வருவதற்குள் ஆரவ் பிறந்துவிட்டார். விமானத்தில் இருக்கும்போதே செய்தியும் தெரிந்துவிட்டதால், குழந்தையைக் காண வேண்டும் என்ற ஆவலோடு வந்தேன். அன்று ஆர்த்தியின் முகத்தில் அம்மாவாகிவிட்ட தெய்வீகக் களையைப் பார்த்தேன். அந்த நாளை மறக்கவே முடியாது.

ருசிகர வேளை

எல்லாமே அருமையாகச் சமைப்பார். ‘க்ரெம் ரூலே’ என்ற முதன்மை உணவைச் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடிய பண்டம் ஒன்று இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் அது மிகவும் பிரபலம். பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் க்ரெம் ரூலேவைச் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், ஆர்த்தி செய்துகொடுக்கும் போது உள்ள சுவை வேறு எதிலுமே இருந்ததில்லை. சமையல் நிகழ்ச்சியில் என்ன இருக்கிறது என்று ஆர்வமில்லாமல் இருந்தேன். “எனக்காகப் பார்” என்று ஆர்த்தி சொன்னதால் ஸ்டார் வேர்ல்டு தொலைக்காட்சியில் ‘மாஸ்டர் செஃப்’ சமையல் நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினேன். அதைப் பார்த்தலிருந்து அந்த நிகழ்ச்சியின் ரசிகனாகிவிட்டேன். சமைப்பது எவ்வளவு கடினம் என்று அப்போது புரிந்தது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து நிறையச் சமைத்துக் கொடுப்பார். எங்கள் இருவருக்கும் பிடித்தவர்கள் யாராவது அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினால் மனதுக்கு என்னவோ போல் இருக்கும். அந்த அளவுக்கு அதில் மூழ்கிவிட்டோம்.

கற்றுக் கொண்ட பாடங்கள்

ஆர்த்தி, எளிதாக மற்றவர்களோடு நண்பராகிவிடுவார். ஆனால், நான் அப்படிக் கிடையாது. ‘இவர்களிடம் பேசலாமா, சரியாக இருக்குமா, நம்பிக்கையானவரா’ என்று யோசிப்பேன். எல்லோரையும் இவர் சரியானவரா என்று யோசிக்கத் தொடங்கினால், பாதி வாழ்க்கை அதிலேயே கழிந்துவிடும் என்று சொல்லி மனிதர்களிடம் எளிதாக நெருங்குவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தவர் ஆர்த்தி. அவரது ஆங்கில எழுத்துத் திறன் ரொம்பப் பிடிக்கும். அதில் அவர் நிபுணர். அவர் மூலம்தான் என் ஆங்கில அறிவைச் செழுமைப்படுத்திக்கொண்டேன். வாழ்க்கையை எப்படிக் கையாள வேண்டும் என்றும் அவரிடம் கற்றுக்கொண்டேன்.

நெகிழ்ந்த தருணம்

என் குடும்பத்தையும் அவரது குடும்பத்தையும் அவ்வளவு அழகாகப் பார்த்துக்கொள்வார். யாருக்காவது ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டிக்கொள்வதுடன் ஒன்றுக்குப் பத்து மருத்துவர்களிடம் பேசி என்ன பிரச்சினை என்று கேட்டுத் தெரிந்துகொள்வார். எப்படியாவது மற்றவர்களுக்கு நல்லது செய்துவிட வேண்டும் என்ற முனைப்பிலேயே இருப்பார். அந்த எண்ணத்தால் பலமுறை நெகிழ்ந்திருக்கிறேன். காரில் சென்று கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் சென்றால்கூட, அதில் இருப்பவர்களுக்காகக் கடவுளை வேண்டுவார்.

அனைத்துக் குடும்பங்களிலும் இருப்பதுபோல நாங்கள் இருவரும் சண்டையும் போடுவோம். என்ன சண்டை போட்டாலும் அன்றே அதைச் சரிசெய்துவிட வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு விதியுள்ளது. அதுதான் எங்கள் மகிழ்வான வாழ்க்கையின் முக்கிய விதி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்