வான் மண் பெண் 31: சுரங்கத்துக்கு எதிராக ‘நெசவு!’

By ந.வினோத் குமார்

ருவர் தனக்காக மாட மாளிகைகள் கட்ட இன்னொருவரின் வீட்டிலிருந்து செங்கல்லை உருவுவதைப் போல இருந்தது, இந்தோனேசியாவில் உள்ள மோலோ பூர்வகுடிகளுக்கு. தாங்கள் லாபம் ஈட்டுவதற்காக அந்தப் பூர்வகுடிகளின் வாழ்வாதாரமான காடுகளிலும் மலைகளிலும் கை வைத்தன பளிங்குக் கற்களைத் தோண்டி எடுக்கும் சுரங்க நிறுவனங்கள்.

அந்த நிறுவனங்களால் தங்கள் பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை அறிந்த அலேட்டா பவுன் எனும் பெண்மணி, அந்த நிறுவனங்களுக்கு எதிராகப் போராடினார். அந்தப் பகுதியில் அப்படிப் போராடிய முதல் பெண் அவர்தான். போராட்டத்தின் தொடக்கத்தில் அலேட்டா பவுனாக அறியப்பட்ட அவர், அந்தச் சுரங்க நிறுவனங்கள் துரத்தியடிக்கப்பட்ட பின் ‘மாமா’ அலேட்டாவாக மாறினார். ‘மாமா’ என்றால் இந்தோனேசிய மொழியில் தாய் என்று அர்த்தம். இன்று மோலோ பூர்வகுடிகளுக்கு அவர்தான் தாய்.

12chnvk_aleta1.jpgதாவரங்களுக்கும் ஆன்மா உண்டு

1966 மார்ச் 16 அன்று, இந்தோனேசியாவின் லேலோபட்டன் பகுதியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் அலேட்டா பவுன். சிறு வயதிலேயே தாயை இழந்த அவரை அங்கிருந்த பெண்களும் பெரியவர்களும் வளர்த்தனர். இயற்கைதான் தங்களின் தெய்வம் என்றும் வாழ்வாதாரம் என்றும் அலேட்டாவுக்குப் போதிக்கப்பட்டது.

தாவரங்களுக்கும் ஆன்மா உண்டு, எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குச் சிறு வயதிலேயே பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது. இயற்கையை உயிருள்ள ஜீவனாகப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ, பிற்காலத்தில் மேடைகளில் இந்த வரிகளை அவர் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்: “நிலம் எங்களின் தசை. நீர் எங்களின் குருதி. பாறைகள் எங்களின் எலும்புகள். காடுகள் எங்கள் நரம்புகள்!”

நிறுவனங்களுடன் கைகோத்த அரசு

இந்தோனேசியாவில் உள்ள தைமூர் தீவு, வளமான காடுகளையும் கனிம வளங்கள் நிறைந்த மலைகளையும் கொண்டது. எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், பளிங்குக் கற்கள் என அங்கு வளம் கொட்டிக் கிடக்கிறது. மேலும், இது முக்கியமான நீர்ப்பிடிப்புப் பகுதியும்கூட. இங்கு 13 நதிகள் பாய்கின்றன. 1980-களில் பளிங்குக் கற்களை வெட்டி எடுப்பதற்கான சுரங்கங்கள் தோண்டுவதற்கு, உள்ளூர் மக்களான மோலோ பூர்வகுடிகளின் கருத்தைக் கேட்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தது அந்நாட்டு அரசு.

சுமார் 15-க்கும் மேற்பட்ட சுரங்க நிறுவனங்கள் அங்கு வந்தன. சுரங்கத்தைத் தோண்டி நதிகளை மாசுபடுத்தியதுடன் காடுகளைக் கட்டாந்தரையாக்கின. அந்தப் பகுதி மக்களின் அடையாளங்களையும் அவை அழிக்கத் தொடங்கின. மோலோ பூர்வகுடிகள் புனிதமாகக் கருதுகிற புகிட் நவுசூசு மலையில் 1996-ம் ஆண்டு சுரங்கம் தோண்டுவதற்காக மேலும் இரண்டு நிறுவனங்கள் வந்தன. பொறுத்தது போதும் என அலேட்டா பொங்கி எழுந்தது அப்போதுதான்!

12chnvk_aleta3.jpg ‘மாமா’ அலேட்டாrightநெசவின் மூலம் எதிர்ப்பு

அலேட்டா, போராட்டத்தைத் தொடங்கியவுடன் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் நால்வர்தான். சுரங்கத்தின் மத்தியப் பகுதியில் அமர்ந்துகொண்டு அவர்கள் நெசவு செய்தபடி தங்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

நெசவு, மோலோ மக்களின் பாரம்பரியத் தொழில்களுள் ஒன்று. தங்களின் பாரம்பரிய உடைகளை நெசவு செய்து, அதிலிருந்து வருமானம் பெறுகிறார்கள். அந்த உடைகளுக்கான சாயங்களை அங்குள்ள காடுகளிலிருந்து இயற்கையாகப் பெறுகிறார்கள்.

“சுரங்க நிறுவனங்களால் காடுகளிலிருந்து இயற்கைச் சாயங்களைப் பெற முடியாமல் நமது பாரம்பரியத் தொழில் அழியும் என்று சொல்லி போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட வேண்டியிருந்தது. நாங்கள் சுரங்கத்தின் நடுவே நெசவு செய்தோம். நிறுவனங்களிடம் நாங்கள் பேசவே இல்லை” என்கிறார் அலேட்டா. நாட்கள் செல்லச் செல்ல போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. சுரங்க நிறுவனங்கள் மெல்லப் பின்வாங்கத் தொடங்கின. அந்தப் பகுதியில் செயல்பட்டுவந்த அனைத்துச் சுரங்க நிறுவனங்களும் 2007-ம் ஆண்டு வெளியேறின. இந்தப் போராட்டம் முழுவதையும் பெண்கள் முன்நின்று நடத்தினார்கள் என்பது சூழலியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வு.

இந்தோனேசிய அவதாரம்

அலேட்டா மேற்கொண்ட போராட்ட வடிவம் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அவர் தனிமனிதராக எதிர்கொண்ட சவால்கள் ஆபத்தானவை. பலமுறை அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. அதிலிருந்து தப்பிக்க அவர் தம் குழந்தைகளுடன் காடு, மலை என்று ஓட வேண்டியிருந்தது. அப்படி ஒருமுறை தப்பிக்க முயன்றபோது அவரது காலில் கத்தி வீசப்பட்டது. அப்போது ஏற்பட்ட காயத்தின் தழும்பு அவரது போராட்டத்துக்குச் சாட்சியாக இருக்கிறது.

“நம்மால் உருவாக்க முடிவதைத்தான் விற்பனை செய்ய வேண்டும். நம்மால் உருவாக்க முடியாதவற்றை நாம் விற்பனை செய்யக் கூடாது. மலைகள், காடுகள், நதிகள் போன்றவற்றை நம்மால் உருவாக்க முடியாது. எனவே, அவற்றை விற்கக் கூடாது” என்ற இயற்கைசார் பொருளாதாரச் சிந்தனையைத் தனது மக்களிடையே பரப்பிவரும் ‘மாமா’ அலேட்டாவுக்கு, சுற்றுச்சூழல் போராளிகளுக்கு வழங்கப்படும் ‘கோல்ட்மேன் என்விரான்மெண்டல் பிரைஸ்’ விருது 2013-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ‘இந்தோனேசியாவின் அவதாரம்’ என்று போற்றப்படும் அலேட்டா, இன்றும் மலைகளையும் காடுகளையும் பாதுகாக்கச் சளைக்காமல் போராடிவருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்