பெண்கள் 360: பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள்

By செய்திப்பிரிவு

வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 11 மகளிர் தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில் மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம். தேவைப்படுவோர் www.tnwwhcl.in என்கிற இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்படும் பெண்கள்

பெண்களுக்கு எதிரான உலகளாவிய குற்றங்களில் முதன்மையானது ஆள் கடத்தல். பாலியல் தொழில், உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகப் பெண்கள் கடத்தப்படுகின்றனர். இந்தியாவில் 2019-2021க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும் 2,51,430 சிறுமிகளும் காணாமல் போனதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயிருக்கின்றனர். சட்டம் ஒழுங்கை வலுப்படுத்திப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது மாநில அரசுகளின் கடமை என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநர்களுக்கு இட ஒதுக்கீடு

கேரள அரசு செவிலியர் படிப்பில் திருநர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. திருநகர் சமூகத்துக்குச் சமூக ஆதரவு தரும் பொருட்டு பல திட்டங்களை கேரள அரசு எடுத்துவருகிறது. சில வாரங்களுக்கு முன்பு திருநர் சமூகத்துக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் ‘ப்ரைட் புராஜெக்ட்’ என்கிற திட்டத்தை கேரள அரசு அறிவித்தது. இப்போது அளிக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்கீடு மற்ற துறைகளிலும் விரிவாக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE