வீ
ட்டுக்குள் இயங்குகிறது அந்த அமைப்பு. “இங்க வேலை செய்யறவங்க எல்லோருமே ஒரு குடும்பம் மாதிரிதான்” என்று புன்னகையுடன் ஊழியர்களை அறிமுகப்படுத்துகிறார் ஜெய்ஸ்ரீ வெங்கடேசன். அது சென்னையில் உள்ள கேர் எர்த் டிரஸ்ட் அலுவலகம்
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், நீலகிரி மாவட்ட மோயார் ஆறு, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் எனப் பலதரப்பட்ட களங்களில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்ட முக்கியமான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ஜெய்ஸ்ரீ வெங்கடேசன்.
பால்யத்தை வடிவமைத்த நதிக்கரை
1965 ஜூன் 25 அன்று மாயூர் நரசிம்மன் - இந்திரா தம்பதிக்கு முதல் மகளாக, திருப்பதியில் பிறந்தார் ஜெய்ஸ்ரீ. மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த அவரின் பால்யத்தைக் கோதாவரி நதிக்கரை வளமாக வடிவமைத்தது.
நதி, பழுப்பு நிறமாக மாறுவது வெள்ளம் வருவதற்கான அறிகுறிகளில் ஒன்று. ஜெய்ஸ்ரீ தன் குழந்தைப் பருவத்தில், கோதாவரி நதி பழுப்பு நிறமாக மாறுவதைப் பலமுறை பார்த்திருக்கிறார். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மக்கள் அந்த வெள்ளத்துக்குப் பயந்து இன்னொரு பக்கம் ஓடுவது அவரின் குழந்தை மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“கோதாவரி நதிக்கரை ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த ஓவியப் பள்ளி வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் பள்ளியில் ஓவியம் கற்றேன். அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் மலைகள், காடுகள், கடல் ஆகியவை அடங்கிய நிலக்காட்சிகளையே தொடக்கத்தில் ஓவியமாக வரையக் கற்றுத்தந்தார்.
தவிர என் தாத்தா, அப்பா, உறவினர்கள் எனப் பலரும் விலங்குகள் மீது மிகுந்த கரிசனம் கொண்டவர்களாக இருந்தனர். நிறைய வளர்ப்புப் பிராணிகள் வைத்திருந்தனர். அந்தப் பிராணிகள் குறித்து ஆழ்ந்த அறிவையும் அவர்கள் கொண்டிருந்தது அன்றைய காலத்துக்குப் பெரிய விஷயம். பிற்காலத்தில் நான் சுற்றுச்சூழல் தளத்துக்குள் வருவதற்கு இவைகூட காரணமாக இருந்திருக்கலாம்” என்கிறார் ஜெய்ஸ்ரீ.
கொல்லிமலை ஆய்வு
சிறு வயதிலிருந்தே ஆய்வுக்கூடம் சார்ந்த பணிகளில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லும் ஜெய்ஸ்ரீ, கல்லூரியில் ஊட்டச்சத்துத் துறையில், இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றார். இரண்டிலுமே தங்கப் பதக்கம்!
தொடர்ந்து அந்தத் துறையில் முனைவர் பட்ட ஆய்வுக்காக அவர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் ஆய்வாளர் ரஞ்சித் டேனியல்ஸ் என்பவரைச் சந்தித்தார். அவர் தந்த ஊக்கத்தால், முனைவர் பட்டத்துக்கு முன்பாகவே அறந்தாங்கி, கொல்லிமலை, கோவளம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய ஐந்து பகுதிகளில் உள்ள மக்களின் ஊட்டச்சத்து குறித்துச் சிறு ஆய்வை மேற்கொண்டார். அதில் சமூக, பொருளாதாரக் காரணங்களைவிட சூழலியல் காரணமே, அந்த மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதற்கான பின்னணி என்பதை அறிந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே அவர் கொல்லிமலையில் மக்களின் ஊட்டச்சத்துக்கும் அங்கிருக்கும் உயிரினப் பன்மைக்குமான தொடர்பு குறித்து ஆய்வு நடத்தி முனைவர் பட்டம் பெற்றார். கொல்லிமலையை அடிப்படையாக வைத்து முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் இவர். அந்த ஆய்வு அவரை அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் ஆய்வு நிறுவனத்தில் முது முனைவர் (போஸ்ட் டாக்டோரல்) பட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அப்போது, முதுமலையில் உள்ள சூழலியல் குறித்து அவர் ஆய்வு செய்தார். அங்குள்ள உயிரினங்களுக்கும் அங்கு தென்படும் 72 வகைத் தாவர இனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு செய்தார்.
பள்ளிக்கரணை நாட்கள்
இயற்கை, சுற்றுச்சூழல் என்று செயல்பட்டுவந்த அவர், ரஞ்சித் டேனியல்ஸுடன் இணைந்து 2000-ம் ஆண்டில் ‘கேர் எர்த் ட்ரஸ்ட்’ எனும் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த அமைப்பு செயல்படத் தொடங்கிய பிறகு கிடைத்த இரண்டாவது பணி, பள்ளிக்கரணையை ஆய்வு செய்தல்.
இந்தப் பொறுப்பை அன்றைய தமிழக அரசாங்கம் இவர்களிடம் ஒப்படைத்தது. அப்போது தமிழகம் முழுக்க உள்ள முக்கியமான 52 நீர்நிலைகளை இந்த அமைப்பு பட்டியலிட்டது. அதில் உடனடியாகப் பாதுகாக்க வேண்டிய பகுதியாகப் பள்ளிக்கரணை குறிப்பிடப்பட்டிருந்தது.
“அன்று எங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்த தொகை ரூ. 32,500தான். ஸ்பீடோமீட்டர், காம்பஸ், பைனாகுலர் சகிதமாக மொபட்டில் சுற்றி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சுமார் 90 சதவீத பரப்பளவை மதிப்பீடு செய்தோம். அப்போது வெறும் 4 ஹெக்டேர் தவிர, இதர நிலமெல்லாம் அரசு வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இந்தச் சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து முயன்றோம். அதன் பலனாக இப்போது சுமார் 680 ஹெக்டேர் அளவு நிலம் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’யாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 300 ஹெக்டேர் நிலம் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்கிறார் ஜெய்ஸ்ரீ.
05chnvk_jayshree2.jpg ஜெய்ஸ்ரீ right2015-ம் ஆண்டில் ஏற்பட்டதைப் போல வெள்ளம் ஏற்பட்டால், பஞ்சு போல வெள்ள நீரை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் தன்மையைக் கொண்டவை இத்தகைய சதுப்பு நிலங்கள். ஆனால், சென்னை மக்கள் இதை உணராமல் இருப்பது வேதனை.
“இத்தகைய சதுப்பு நிலங்கள் மக்களுக்கு நேரடியான பலன் எதையும் தராது. எனவே, அவற்றின் மதிப்பை உணராமல் இருக்கிறார்கள்” என்கிறார் அவர்.
பள்ளிக்கரணையைப் பாதுகாக்கும் செயல்பாடுகளுக்காக இவரின் அமைப்புக்குக் கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசின் இந்திரா காந்தி பர்யாவரன் விருது வழங்கப்பட்டது.
சூழலியல் பெண்ணியத்தின் தேவை
“முன்பெல்லாம், விருப்பப்பட்ட பாடப் பிரிவுகள் கிடைக்கவில்லையென்றால், சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களைப் பெண்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், இன்று அப்படியல்ல. அந்தப் பாடப் பிரிவுகளுக்காகப் போட்டிபோடுகின்றனர். ஆணாதிக்கம் மிகுந்திருக்கும் இந்தத் துறையில் ஆண்களைவிடச் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு உண்டு. அந்தக் கட்டாயம்தான் அவர்களைச் சாதிக்கவும் தூண்டுகிறது.
இயற்கையைப் பொறுத்தவரையில் பெண்களுக்கென்று தனித்துவமிக்க பார்வை உள்ளது. அந்தப் பார்வைக்கு இடம் கொடுக்காத வரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது. ஆம், பெண்களால்தான் இயற்கை முழுமையடைகிறது!” என்கிறார் ஜெய்ஸ்ரீ.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago