க
ருத்து வேறுபாடுகளுடன் தொடங்கிய திருமண பந்தம், ஈகோவை நொறுக்கியதால் இதமான வாழ்க்கையைத் தந்திருக்கிறது. என்னைச் செதுக்குவதில் என் மனைவி காயத்ரி தேவியின் மந்திரச் சொற்களுக்கு முக்கியப் பங்குண்டு.
வயது வதந்தி
எனக்குச் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் இருந்தது. அதுவும் பெற்றோர் நிச்சயித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விரும்பினேன். என் நண்பரின் தோழி காயத்ரி தேவி. முதலில் நான்தான் அவரிடம் பேசினேன். அவர் சம்மதிக்கவில்லை. எனக்கு 47 வயது என ‘விக்கிபீடியா’வில் போட்டிருந்ததைப் பார்த்துவிட்டு வயதானவரைத் திருமணம் செய்யப் போகிறோமா என்று அவர் பதிலே சொல்லவில்லை. ஜாதகம் கொடுத்த பிறகு அதிலிருந்த பிறந்த தேதியை வைத்துதான் என் உண்மையான வயதை உறுதிப்படுத்தினார். இருவருமே வீட்டில் பேசி, இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டோம்.
05CHLRD_CINEMAஆச்சரியப் பரிசுகள்
திருமணத்துக்குப் பிறகு வந்த அவரது பிறந்தநாளின்போது அவருடைய அம்மா வீட்டில் இருந்தார். அவரது ஊருக்குச் செல்லும் வழியில் சாய்பாபா மோதிரம் வாங்கினேன். இரவு 11:30 மணிக்கு அவருக்கு போன் செய்து, “தூங்கப் போறேன்மா... காலையில் பேசுகிறேன்” என்று சொன்னேன். முதல் பிறந்தநாள், பார்க்க வருவார் என்று நினைத்தால் தூங்கப் போகிறேன் என்கிறாரே என்ற வருத்தம் அவரது பேச்சில் தெரிந்தது.
அவரது வீட்டுக்கு முன்பாக வண்டியை நிறுத்திவிட்டு, சரியாக 12 மணிக்கு வெடி வெடித்து, கேக் வெட்டி, மோதிரம் அணிவித்துப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன். மோதிரம் அணிவித்தபோது, அவர் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியை எப்போதும் மறக்கவே முடியாது. இந்தப் பரிசைத் தாண்டி முதல் குழந்தை காதம்பரிதான் எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.
நொறுங்கிய ஈகோ
நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றபோது பலரும் “மாட்டிக்கொண்டாய்” என்று பயமுறுத்தினர். திருமணமான நான்கு மாதங்களிலேயே எங்களுக்குள் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு வந்தபோது அவர்கள் சொன்னது உண்மைதானோ என்று தோன்றியது.
பிரச்சினைகளும் சிறு சிறு சண்டைகளும் வந்தன. சண்டையை மறக்க என் ஈகோ தடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த ஈகோவும் உடைந்தது. நாங்கள் இருந்த வீட்டைக் காலிசெய்யும் சூழல் வந்தது. அப்பா, அம்மா, அண்ணன் குடும்பம், தம்பி, நான், என் மனைவி என ஒட்டுமொத்தமாக அபார்ட்மென்ட்டில் குடியேறினோம். அங்கு இட நெருக்கடி. அந்தச் சமயத்தில் தனி வீடு பார்த்துச் செல்ல முடியாத அளவுக்குக் கடும் பொருளாதார நெருக்கடி. அப்போது இரவில் நாங்கள் இருவரும் என் அலுவலகத்திலேயே தங்கிவிடுவோம்.
காயத்ரியின் இந்த அணுகுமுறையால் என் ஈகோ நொறுங்கியது. திருமணமான இரண்டு ஆண்டுகளில் பெரிதாக அவருக்கு எதையும் செய்ததில்லை. ஆனாலும், அவரது அன்பில் எந்தக் குறையும் இல்லை. ஒருமுறை இருவரும் மொரீஷியஸ் சென்றோம். என் வாழ்க்கை முறை, அவரது வாழ்க்கை முறை என இரண்டையுமே புரிந்துகொண்டோம். அந்தச் சுற்றுலாவை மறக்க முடியாது. ஏனென்றால், ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொள்ள அது உதவியது.
வெற்றித் துணை
‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தின் வெற்றியில் என் மனைவியின் பங்கும் உள்ளது. நண்பரின் படம் என்பதால் நான் சம்பளம் வாங்கவில்லை. தேவைகள் பல இருந்தபோதும் என் மனைவி ஆட்சேபிக்கவில்லை. பொருளாதாரத்தைத் தாண்டி ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ ஆகிய மூன்று படங்களுமே என் மீதான ரசிகர்களின் பார்வையை மாற்றியிருக்கின்றன. இந்தப் படங்கள் உருவாகும்போதெல்லாம் மனக் கசப்பின்றி ஒத்துழைத்தது என் மனைவிதான். இந்தப் புரிதல் எல்லாம் எங்கள் அலுவலகத்தில் ஒன்றாக இருந்த ஆறு மாதங்களில் ஏற்பட்டவை.
என்னிடமிருந்த காரை விற்றுவிட்டு, பைக்கில் சுற்றத் தொடங்கியபோது உறுதுணையாக இருந்தார். வீட்டில் இடமில்லை, அலுவலகத்தில் தூங்கலாம் என்று சொன்னவுடன் என்னை நம்பிவந்தார். இப்படி வேறு யாராவது இருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. நாயகனாக நடித்துக்கொண்டிருப்பவரின் மனைவி இப்படிச் செய்திருப்பார் என்று யாருமே நம்ப மாட்டார்கள். நண்பர்கள் சொன்னதுபோல் திருமணம் என்பது பயமில்லை, சந்தோஷம் என்பது அப்போதுதான் விளங்கியது. என் எண்ணமும் அவரது எண்ணமும் ஒன்றிணைய, வெற்றியடைந்தோம். ‘விதார்த் நல்ல படங்களில் நடிப்பார்’ என்று நான் பெயரெடுக்கக் காரணம் என் மனைவி.
பலமும் ஊக்கமும்
நான் நடிகைகளுடன் எப்படிப் பழகுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். என்னோடு பல படப்பிடிப்புகளுக்கு வந்திருக்கிறார். என் வாழ்க்கையில் அம்மா, மனைவி, குழந்தை எனப் பெண்கள் மிக முக்கியமானவர்கள். எனக்கான இடத்தை எட்டுவதற்கு, எனது சிந்தனைகளைக் கூர்தீட்டி ஒருமுகப்படுத்துவதற்கு அவர் பக்கபலமாக இருந்துவருகிறார். வித்தியாசமான படங்களில் நடிக்க என்னை ஊக்குவிப்பவரும் அவர்தான்.
மனைவியின் மந்திரச் சொற்கள்
எதிர்காலத்தில் இப்படியெல்லாம் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளைத் திணிக்க மாட்டார். நடக்கும் விஷயங்களை எப்படி நல்லவிதமாகக் கையாள்வது என்று வழிகாட்டியுள்ளார். நடிகன் என்றாலே ‘ உங்களுடன் துறைக்கு வந்தவர் எப்படியிருக்கிறார்’ என்ற ஓப்பீடு வரும். ஆனால், ‘உங்களுக்கென்று ஓர் இடம், அடையாளமிருக்கிறது’ என்று சொல்லி யாருடனும் என்னை ஒப்பிடமாட்டார். “யாராவது உங்களை ஓப்பிட ஆரம்பித்தால் கேட்காதீர்கள், மற்ற நடிகர்களைப் பற்றிக் குறை பேசும் இடத்திலேயே இருக்க வேண்டாம்” என்று அறிவுறுத்துவார்.
“உங்களுடைய படங்களின் குறைகளை யாராவது சொன்னால் அதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்” என்பார். “பாராட்டு தேவைதான், ஆனால் அதில் மயங்கிவிடக் கூடாது” என்று அடிக்கடி சொல்வார். எங்கள் தேவைகளைச் சுருக்கியவரும் அவர்தான். கார், பைக் என்பதைத் தாண்டி, ‘நடந்துபோனால் உடம்புக்கு ரொம்ப நல்லது அல்லவா’ என்று அனைத்தையும் நேர்மறை சிந்தனையோடு அணுகுபவர் என் மனைவி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago