முகம் நூறு: அன்பைப் பரப்ப ஒரு சாகசப் பயணம்

By எஸ்.விஜயகுமார்

சுற்றுலாவுக்குச் செல்வதென்றால்கூடத் தனியாகச் செல்லப் பலரும் விரும்ப மாட்டார்கள். பெண்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பேச்சுத் துணைக்காகவாவது சிலரை உடன் அழைத்துச் செல்வார்கள். அறிமுகம் இல்லாத இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் பாதுகாப்பு கருதியாவது ஒருவரைத் துணைக்கு அழைப்பார்கள்.

ஆனால், சென்னையைச் சேர்ந்த ராதிகா இவற்றிலிருந்து மாறுபடுகிறார். மக்களிடம் அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பரப்பும் நோக்கத்தோடு இந்தியாவின் 29 மாநிலங்களுக்கும் ஐந்து யூனியன் பிரதேசங்களுக்கும் தன் இருசக்கர வாகனத்தில் தனியாகப் பயணித்திருக்கிறார்! 26 வயதாகும் இவர், தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார்.

திட்டமிட்ட பயணம்

“ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் இருந்து, சில உடைகள், செல்போன், பைக், கையில் சில ஆயிரம் ரூபாய், நிறைய தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் கிளம்பினேன். தனியாகத்தான் பயணம் என்று முடிவெடுத்ததால் சிலவற்றை மட்டும் திட்டமிட்டுக்கொண்டேன். அதிக எடை கொண்ட பைக்கைப் பல ஆயிரம் கி.மீ. தூரம் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பதால் அதற்கேற்ப உடற்பயிற்சி செய்து என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்” என்கிறார் ராதிகா.

17smgp_bike rider rathika_09

தற்காப்புக்கு பாக்ஸிங் பயிற்சி, பைக்கில் கூடுதலாக ஆக்ஸிலேட்டர் வயர், கிளட்ச் வயர், பைக் மெக்கானிசம் குறித்த சிறு பயிற்சி போன்றவையும் இவரது பயணத்துக்கான முன் தயாரிப்புப் பட்டியலில் அடங்கும்.

ராதிகாவுடைய அப்பா ஜனார்த்தனன், அம்மா சரஸ்வதி இருவரும் மத்திய அரசுப் பணியில் இருக்கின்றனர். அவர்களுடைய நண்பர்கள் மூலமாக, தான் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் தங்கு வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டார்.

எதுவும் சிக்கல் இல்லை

“தினமும் காலை ஆறு மணிக்கு மேல் கிளம்பி மாலை ஆறு மணிக்குள் சுமார் 400 கி.மீ. வரை பயணம் செய்வேன். உடல்நலனைக் கருதி எண்ணெய்ப் பண்டங்களைத் தவிர்த்து சாதம், பருப்பு ஆகியவற்றையே சாப்பிடுவேன். பைக்கைத் தொடர்ந்து ஓட்டிச்செல்வதால் ஏற்படும் உடல் வலியைப் போக்கிக்கொள்ள யோகா பயிற்சி உதவியது” என்று பயண நாட்களில் தான் அன்றாடம் கடைப்பிடித்தவற்றை ராதிகா விவரிக்கிறார்.

பயணத்தின்போது எந்த மாநிலத்திலும் எந்தப் பிரச்சினையயும் சந்திக்கவில்லை என்கிறார். பைக்கை அவ்வப்போது சர்வீஸ் செய்து பயன்படுத்தியதால் வாகனப் பழுது குறித்த சிக்கலும் இல்லை. பயணத்தின்போது பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசுவது, மக்களைச் சந்திப்பது போன்றவை மூலம் அவர்களிடம் அன்பு, அமைதி, மகிழ்ச்சியுடன் இருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

மறக்க முடியாத சந்திப்புகள்

காஷ்மீரில் உள்ள மிகவும் உயரமான காந்த்வாலே என்ற இடம்வரை சென்றிருக்கிறார். இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், லாலு பிரசாத், டெல்லியில் போராடிவரும் அய்யாக்கண்ணு உள்ளிட்ட தமிழக விவசாயிகள் எனப் பல தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை மலர்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.

“சிக்கிம் மாநிலத்தில் ஒழுங்கான சாலைகள், சாலை விதிகளை மீறாத மக்கள், இயற்கை அழகு என அங்கு மேற்கொண்ட பயணம் அற்புதமாக இருந்தது. இந்தி தெரிந்திருந்ததால் பெரிய அளவில் மொழிப் பிரச்சினை ஏற்படவில்லை. இருந்தாலும் மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டபோதும் சைகை மூலமாக மக்களிடம் பேச முடிந்தது” என்கிறார் ராதிகா

17smgp_bike rider rathika_14right

இதுவரை 26,500 கி.மீ. தூரத்தைக் கடந்துவிட்டார். புதுச்சேரி சென்றுவிட்டு சென்னையில் நவம்பர் 19-ம் தேதி (இன்று) பயணத்தை நிறைவுசெய்கிறார். வழிநெடுக மக்களிடமும் மாணவர்களிடமும் பேசியதில் எதிர்காலம் குறித்த கனவுகள் ஏதுமின்றிப் பலரும் இருந்ததைக் காண முடிந்ததாகச் சொல்கிறார். எதிர்காலத் தூண்கள் என்பதால் மாணவர்களிடம் அவர்களது கனவுகள் குறித்து அதிகமாகப் பேசியதாகவும் குறிப்பிடுகிறார்.

ஒளிப்படப் பதிவு

கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தை உலுக்கிவந்த டெங்கு காய்ச்சல் பயணத்தின்போது இவருக்கும் ஏற்பட்டுள்ளது. “ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் சென்றிருந்தபோது டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பத்து நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர்தான் பயணத்தைத் தொடர முடிந்தது. பெற்றோரின் ஊக்கம் இந்தப் பயணத்தின் வெற்றிக்கு முதல் காரணம். பயணத்தின் இடையிடையே எங்கு இருக்கிறேன், பயணம் எப்படி இருக்கிறது என போட்டோக்களுடன் தகவல்களைப் பதிவுசெய்துவிடுவேன்” என்கிறார்.

முக்கிய தருணங்கள், இயற்கைக் காட்சிகள், பல்வேறு மக்களின் கலாச்சாரங்கள் என விதவிதமான ஒளிப்படங்களை எடுப்பதும் இவரது பயணத்தின் மற்றொரு நோக்கமாக இருந்தள்ளது. அடிப்படையில் சுயேச்சை ஒளிப்படக் கலைஞர் என்பதால் பயணம் நெடுகிலும் இவர் எடுத்த படங்களை சென்னையில் கண்காட்சியாக வைக்கத் திட்டமிட்டுள்ளார் இந்த ‘பைக் இளவரசி’.

படங்கள்: எஸ். குருபிரசாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்