இந்தியாவில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இயற்கை சார்ந்த படைப்புகள் குறைவு. அதுவும் குழந்தைகளை மையப்படுத்தி, குழந்தைகளுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் மிகவும் குறைவு. அதில் தனிமுத்திரை பதித்துவருபவர் ஸாய் விட்டேகர்.
இவர் ‘காளி அண்ட் தி ராட் ஸ்நேக்’ (தமிழில்: காளியும் சாரைப்பாம்பும்), ‘கோப்ரா இன் மை கிச்சன்’, ‘மேஜிக் ஐலேண்ட்ஸ், ‘அந்தமான்ஸ் பாய்’, ‘அப் தி காட்’ உள்ளிட்ட 15 புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் ‘அப் தி காட்’ எனும் நாவலைத் தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகளை மையப்படுத்தி, குழந்தைகளுக்காக எழுதப்பட்ட சூழலியல் புத்தகங்கள். ‘அந்தமான்ஸ் பாய்’ எனும் புத்தகம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்குப் பாடமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
வடநெம்மேலியில் உள்ள சென்னை முதலைப் பண்ணையில் அவரைச் சந்தித்து உரையாடினோம்.
வீடே பள்ளி
1954 ஏப்ரல் 21 அன்று மும்பையில் சஃபர் ரஷீத் ஃபத்தேஅலி - லயீக் ஃபத்தே அலி தம்பதிக்குப் பிறந்தவர் ஸாய்.
இவரது குடும்பமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிவந்தது. அப்பா, பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (பி.என்.ஹெச்.எஸ்) கவுரவச் செயலராக இருந்தவர். இந்தியாவில் காட்டுயிர்களுக்கான பன்னாட்டு நிதியம் (WWF India) அமைப்பின் இந்தியக் கிளையை உருவாக்கியவர். இவருடைய அம்மா, தோட்ட வடிவமைப்பாளராகவும் (லேண்ட்ஸ்கேப் டிசைனர்) எழுத்தாளராகவும் இருந்தார்.
‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று போற்றப்படும் சாலிம் அலி இவருடைய பெரியப்பா. பிரபலப் பறவையியலாளர் ஹுமாயூன் அப்துல் அலியும் இவரது உறவினர்தான். ஜார்ஜ் ஷேலர், சர் பீட்டர் ஸ்காட் போன்ற பிரபல உயிரியலாளர்கள் இவரது வீட்டுக்கு அவ்வப்போது வருவது வழக்கம்.
“அப்போது எங்கள் வீட்டில் இயற்கை குறித்தும் காட்டுயிர்கள் குறித்தும் நிறைய விவாதிக்கப்படும். வீட்டுச் சூழல் இப்படி இருந்தபோதும், நான் இயற்கை குறித்துப் படிக்காமல் ஆங்கில இலக்கியமே படித்தேன்” என்கிறார் ஸாய்.
‘பறவை நோக்கர்களை முட்டாளாக்குவது எப்படி?’ (ஹவ் டு ஃபூல் தி பேர்டு வாட்சர்ஸ்) என்ற தலைப்பில் இவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை சுவாரசியமானது. பறவைகள் குறித்து ஒன்றும் தெரியாத ஒருவர், இதர பறவை நோக்கர்கள் முன்பு எப்படித் தன்னை ஒரு பெரிய பறவை நோக்கராக வெளிப்படுத்திக்கொள்கிறார் என்பதுதான் அந்தக் கட்டுரையின் சாரம். அவருடைய தந்தை அன்று நடத்திவந்த ‘நியூஸ்லெட்டர் ஃபார் பேர்டு வாட்சர்ஸ்’ இதழில் இது வெளியானது.
பணிகளுக்காகத் தொடரும் நட்பு
இப்படிப் போய்க்கொண்டிருந்த ஸாயின் வாழ்க்கையில், 1972-ம் ஆண்டு ஒரு திருப்பம் ஏற்பட்டது. ‘இந்தியாவின் பாம்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் ரோமுலஸ் விட்டேகரைச் சந்தித்தார்.
“என் தந்தை நடத்திவந்த இதழில் ரோமுலஸ் விட்டேகர் அவ்வப்போது கட்டுரைகள் எழுதிவந்தார். அவரது கட்டுரைகளை நான் ‘எடிட்’ செய்து, என் தந்தைக்குக் கொடுப்பது வழக்கம். அப்போது கட்டுரையில் ஏதேனும் சந்தேகம் வந்தால், ரோமுலஸைத் தொடர்புகொண்டு கேட்பேன். இப்படித்தான் எங்களுக்குள் அறிமுகம் நிகழ்ந்தது.
பின்னர், பி.என்.ஹெச்.எஸ். உடன் இணைந்து டபிள்யூ.டபிள்யூ.எஃப், காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பான ஒரு கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டோம். அந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ள ரோமுலஸ் விட்டேகரை அழைத்தோம். அவரும் வந்தார். அப்போதுதான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். இருவருக்கும் பிடித்திருந்தது. 1974-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டோம்” என்கிறார் ஸாய்.
ரோமுலஸ், சென்னை பாம்புப் பண்ணையை அப்போதுதான் தொடங்கியிருந்தார். அதுவரையில், ‘பறவை மனிதர்கள்’ சூழ வாழ்ந்துவந்த ஸாய், அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பாம்புகள் சூழ வாழ்ந்தார். இடையில் சென்னை முதலைப் பண்ணையும் தொடங்கப்பட்டது. ரோமுலஸ் விட்டேகரின் மகத்தான சாதனைகளில் ஸாய் விட்டேகரின் பங்கும் நிறைய இருக்கிறது.
“அந்த 20 ஆண்டுகளும் அற்புதமானவை. பாம்புப் பண்ணையையும் முதலைப் பண்ணையையும் பராமரிப்பதில் அவ்வப்போது எங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதைச் சமாளிக்க நான் சில காலம் கொடைக்கானலில் உள்ள சர்வதேசப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினேன். 1994-ல் நானும் ரோமுலஸ் விட்டேகரும் விவாகரத்துப் பெற்றோம். நாங்கள் இருவரும் இணைந்து நிறைய பணிகளைத் தொடங்கியிருந்தோம். அவற்றைப் பாதியில் விட்டுச்செல்லக் கூடாது என்பதற்காக இன்றுவரையிலும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்துவருகிறோம்” எனும் ஸாய்க்கு, நிகில், சமீர் என இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே காட்டுயிர்ப் பாதுகாப்புத்துறை நிபுணர்கள்.
பாம்புக் கடியிலிருந்து மீட்பு
1986-ம் ஆண்டு தான் தொடங்கிய ‘இருளர் பெண்கள் நலச் சங்கம்’தான் தன் மனதுக்கு நெருக்கமான திட்டம் என்கிறார்.
“அந்தச் நேரத்தில் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, தரிசு நிலங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசிவந்தார். இருளர் பெண்களின் மேம்பாடுதான் எனது முக்கியக் குறிக்கோளாக இருந்தது. எனவே, செங்கல்பட்டில் உள்ள தண்டரை கிராமத்தில் அந்தச் சங்கத்தைத் தொடங்கினேன். அங்கிருந்த தரிசு நிலங்களில் மண்ணுக்கேற்ற மரங்கள், தாவரங்கள், மூலிகைகள் ஆகியவற்றை வளர்க்கச் செய்தோம்.
இருளர் பெண்கள், பாம்புக் கடிக்கான மூலிகை மருந்தைத் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். எனவே, மூலிகைச் செடிகளை அதிகமாக வளர்த்து, அதன் மூலமாக அவர்களது பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்ய நினைத்தோம். அவர்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ் போன்றவற்றை வாங்கவும் வழிசெய்தோம். நான் சில காலம் அந்தச் சங்கத்தின் இயக்குநராக இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சங்கத்தின் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் நான் விலகிவிட்டேன். தற்போது இருளர் பெண்களே அந்தச் சங்கத்தை நிர்வகிக்கிறார்கள்” என்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலிலிருந்து சென்னை திரும்பியவர், இப்போது சென்னை முதலைப் பண்ணையை நிர்வகித்துவருகிறார். தற்போது 15 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, பாம்புக் கடியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள ஜார்கண்ட், ஒடிசா, பிகார், மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களில் பாம்புக் கடி, அதற்கான சிகிச்சை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
படம்: ந. வினோத் குமார்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago