தி
ண்டுக்கல்லில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆர். ரூபாதேவி கால்பந்து விளையாட்டில் சிறுவயது முதலே கொண்ட ஆர்வம் காரணமாக இன்று சர்வதேசக் கால்பந்துப் போட்டி நடுவராக உயர்ந்து நிற்கிறார்.
திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலில் கால்பந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். அதுவே தன் வாழ்க்கையாக மாறப் போவதை அப்போது அவர் நினைத்திருக்கவில்லை. “அப்போதெல்லாம் மாலையில் வகுப்பு முடிந்ததும் கால்பந்து விளையாடும் ஆர்வம் ஏற்பட்டது. எனது ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர் ஜெசின்ஜெஸ்டின் என்னைத் தினமும் கால்பந்து விளையாட ஊக்குவித்துப் பயிற்சியளித்தார். எனது முதல் பயிற்சியாளர் அவர்தான். பத்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் சப்-ஜூனியர், ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டிகளில் விளையாடினேன்.” என்கிறார் ரூபாதேவி
கவனம் ஈர்த்த தனித்துவம்
அதுவரை அணியில் தானும் ஒருத்தி என்று நினைத்துவந்தவர் விளையாட்டில் தன் தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்கிற எண்ணம் வந்தவுடன் கடும் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார். “கல்லூரிப் படிப்பு, பட்டயப் படிப்பு என எனது கல்வியை ஒருபக்கம் தொடர்ந்தாலும், காலை, மாலை நேரம் மைதானத்தில் இருக்கத் தவறியதில்லை. காரணம் எனது முழுக் கவனமும் கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது” என்கிறார்.
17MAPTR-ROOPADEVI-01(MAGALIR THIRUVILA) சர்வதேச கால்பந்து நடுவர் ‘ஃபிஃபா’ சான்றிதழுடன் ஆர்.ரூபாதேவி.இவரது அர்ப்பணிப்பைத் தெரிந்துகொண்ட திண்டுக்கல் மாவட்டக் கால்பந்து கழகத் தலைவர் ஜி.சுந்தரராஜன், செயலாளர் எஸ்.சண்முகம் ஆகியோர் இவரை ஊக்கப்படுத்தியதுடன் பயிற்சிக்குத் தேவைப்பட்ட பொருளாதார உதவிகளையும் செய்துள்ளனர். அத்துடன் தமிழ்நாடு கால்பந்துக் கழகம் தனக்கு முழு ஆதரவளித்தததைய்யும் அவர்களது ஊக்கமும் உதவியுமே தன்னை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறார் ரூபாதேவி.
கிடைத்தது நடுவர் பணி
தமிழக அணிக்காக சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என அனைத்துப் பிரிவுக் கால்பந்துப் போட்டிகளிலும் ரூபா விளையாடியுள்ளார். இடையில் சில ஆண்டுகள் போட்டிகள் அதிகம் நடைபெறாததால், இவரது கவனம் நடுவர் பணி மீது திரும்பியது.
“2007-ம் வருடம் முதன்முறையாகக் கால்பந்து நடுவருக்கான தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். அப்போது மத்திய அரசு ‘புராஜெக்ட் பியூச்சர் ரெஃப்ரி’ என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் மூலம் கால்பந்து நடுவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதற்குத் தேர்வு செய்யப்பட்டு புதுடெல்லி, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ஆகிய இடங்களுக்குப் பயிற்சி பெறச் சென்றேன். இதைத் தொடர்ந்து தேசிய அளவிலான மகளிர் கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றேன்” என்று தான் நடுவரான கதையை விவரிக்கிறார் ருபாதேவி
ஒலிம்பிக் கனவு
தொடர்ந்து இந்திய கால்பந்துக் கழகத்தின் பரிந்துரையின் பேரில் மலேசியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் நடைபெற்ற தெற்காசியக் கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றிருக்கிறார் ரூபாதேவி. “எனது செயல்பாட்டைப் பார்த்த ஆசிய கால்பந்துக் கழகம் பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் நடுவராகப் பங்கேற்க வாய்ப்பளித்தது. இந்திய, ஆசிய அளவிலான போட்டிகளில் எனது பங்களிப்பைப் பார்த்த இந்திய, ஆசிய கால்பந்துக் கழகங்கள் என்னை சர்வதேச நடுவராக ‘ஃபிஃபா’ கால்பந்து அமைப்புக்குப் பரிந்துரை செய்தன. அதற்கான தேர்விலும் தேர்ச்சிபெற்றேன். எனது செயல்பாடு, தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு என்னை சர்வதேச கால்பந்து நடுவராக ‘ஃபிஃபா’ அறிவித்தது” என்கிறார்.
மாநில அளவில், தேசிய அளவில், ஆசிய அளவில், சர்வதேச அளவில் படிப்படியாக உயர்ந்த இவருக்கு ஒலிம்பிக், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே லட்சியம். தீரா ஆர்வம், கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கும் ரூபாதேவி எப்படிப்பட்ட இலக்கையும் அடைந்துவிடுவார் என்பதை உறுதியாக நம்பலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago