எ
ன்னை அரவணைப்பதில் தொடங்கி துயரத்தில் இருந்து மீட்பதுவரை யாதுமாகித் தன் வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்துகொள்கிறார் என் மனைவி சத்ய பிரேமா.
திருப்பமும் காதலும்
திருப்பம் கொண்ட சினிமா காட்சியைப் போல நான் மறக்க முடியாத உண்மைச் சம்பவம் ஒன்று உண்டு. பெங்களூருவில் நானும் நண்பன் சுரேந்திரனும் ஒன்றாகப் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அவனுடைய திருமணத்திற்குப் போனபோது சத்ய பிரேமாவை அறிமுகப்படுத்தினான். ஏனென்றால் அவர்கள் இருவரும் நண்பர்கள். வெறும் ‘ஹாய்’ என்பதோடு நிறுத்திக்கொண்டோம். அதற்குப் பிறகு பொறியாளர் வேலையை விட்டுவிட்டு குறும்படம் எடுத்து ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒருமுறை பெங்களூருக்குச் சென்றிருந்தபோது சுரேந்திரனோடு இரவில் பேசிக் கொண்டிருந்தேன். “சத்யா உனக்குச் சரியாக இருப்பாள். அவள் மட்டுமே உனக்கு ஏற்ற பெண்” என்றான். அவளிடமும் போன் செய்து, “நானும் கார்த்தியும் பேசிக்கொண்டிருக்கிறோம். நீயும் அவனும் சரியான இணையாக இருப்பீர்கள்னு தோணுது” என்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்துவிட்டான்.
“என்னடா இப்படி பண்ணிட்ட?” என்று அவனைத் திட்டிவிட்டு சத்யாவுக்கு போன் செய்தேன். “எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அவன் ஏதோ உளறுகிறான். மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றேன். “பரவாயில்லை, விடுங்கள்” என்று அவர் சொல்ல, இப்படித்தான் இருவரும் பேசத் தொடங்கினோம். எங்கள் பேச்சு நீண்ட நாட்கள் தொடர்ந்தது. ஒருநாள் சந்தித்தோம். அன்று மாலையே மீண்டும் சந்திக்க வேண்டும் என்று வரச்சொல்லி என் காதலை வெளிப்படுத்தினேன். அடுத்த இரண்டு நாட்களில் அவரும் என் காதலுக்குச் சம்மதம் தெரிவித்தார்.
புரிதலுடன் தொடக்கம்
முதல் திரைப்படத்துக்காகத் தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் திருமணம் நடந்தது. சினிமாவுக்கு முயற்சி செய்தபோது மனைவியின் வீட்டில் ஒரு சிறு பயம் இருந்தது. “இரண்டு ஆண்டுகள் சினிமா வாய்ப்பு தேடட்டும். கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பொறியாளர் பணிக்குப் போய்விடுவாரா?” என்று மனைவியிடம் கேட்டனர். இதே கேள்வியை அவர் என்னிடம் கேட்டபோது, “இயக்குநராவதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்பேன். பொறியாளர் வேலைக்குச் செல்லும் எண்ணமில்லை” என்றேன்.
என் முடிவைத் தன் பெற்றோரிடம் அவர் எடுத்துச் சொன்னார். அத்துடன், என் உறுதியான முடிவு தனக்குப் பிடித்திருக்கிறது என்றும் சொன்னார். இந்த விஷயத்தில் இனி தலையிடப் போவதில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். ‘உன் வாழ்க்கை, நீயே பாத்துக்கோ' என்று அவரது பெற்றோரும் விட்டுவிட்டனர். அதன்பின், இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்சினையுமே ஏற்படவில்லை. இப்படி எங்கள் பயணம் புரிதலுடன்தான் தொடங்கியது.
காதல் புதையல்
என் மனைவி எனக்கு முதன்முதலில் கொடுத்த பரிசு, ஓர் அழகிய வாழ்த்து அட்டை. அதன்பின் எத்தனையோ பரிசுப் பொருட்களை அவர் கொடுத்திருந்தாலும், அந்த வாழ்த்து அட்டையை மறக்கவே முடியாது. ஏனென்றால், அந்த வாழ்த்து அட்டை முழுவதுமே அவரது காதல் எழுத்துகளால் நிரம்பியிருந்தது. அந்தச் சொற்கள் எனக்கு நானே பத்திரப்படுத்திவைத்திருக்கும் புதையல். அதை என்னால் மறக்கவும் முடியாது; யாராலும் எடுக்கவும் முடியாது.
அவரது அம்மா இறந்த பிறகு, அவ்வப்போது அம்மாவின் நினைவில் ஒரு மாதிரியாக இருப்பார். அப்போதெல்லாம், “என் அம்மா நினைவுகள் உங்களாலும் உங்கள் குடும்பத்தாலும் நிறைகிறது” என்பார். நான் அப்படியே நெகிழ்ந்துவிடுவேன்.
எனது மீட்பர்
எப்போதுமே நேர்மறையாக மட்டுமே சிந்திக்கக் கூடியவர். நானோ நினைத்த மாதிரி நடக்கவில்லை என்றால் மிகவும் கோபப்படுவேன், டென்ஷனாவேன். ஏதாவது தப்பாகிவிடுமோ என்று பயந்துகொண்டே இருப்பேன். ஆனால், எந்தவொரு விஷயம் என்றாலும் ‘கண்டிப்பாக நடக்கும் பார்’ என்று சொல்வார். சொல்வதோடு நிற்காமல் அதைச் செயல்படுத்தியும் காட்டுவார். என் விஷயத்தில் மட்டுமன்றி, வீட்டில் எல்லாக் காரியங்களையும் அவ்வளவு நேர்மறையாக சிந்தித்துச் செய்வார். இந்த மாதிரி ஏன் நம்மால் இருக்க முடியவில்லை என்று பலமுறை யோசிப்பேன். திரையுலக வாழ்வில் கொஞ்சம் பயம் வரும்போதெல்லாம் எனக்குத் தைரியத்தை அளித்திருக்கிறார். என்றும் எனது மீட்பர் அவர்தான்.
‘பீட்சா’ திரைப்படத்துக்கு முன்பாகச் சில தயாரிப்பாளர்கள் படம் பண்ணலாம் என்றனர். அப்போது ஒப்புக்கொண்டேன். ஆனால், படத்துக்கான பணிகள் தொடங்காததால் ஆறு மாதங்கள் சும்மாவே இருந்தேன். அப்போது என் மனைவி மட்டுமே பக்கபலமாக இருந்தார். படச் சிக்கல்களைச் சட்டரீதியாக எதிர்கொண்டு வெளியே வந்தேன். என் வாழ்க்கையின் மிகக் கடினமான சூழல் அதுதான்.
‘ஜிகர்தண்டா’ படம் வெளியான போது என் லேப்டாப்பை திரையரங்கில் தொலைந்துவிட்டேன். நான் எழுதிய கதைகள், படத்தின் எடிட் செய்யப்படாத வீடியோக்கள் என நிறைய பர்சனல் விஷயங்கள் வைத்திருந்தேன். எனக்கு மிகவும் நெருக்கமான லேப்டாப் அது. அது தொலைந்தவுடன் வாழ்க்கையே தொலைந்துவிட்டது போல் உணர்ந்தேன். வாழ்க்கையே வெறுமையானது போல் சுற்றிக்கொண்டிருந்த என்னை முழுமையாக மீட்டவர் சத்யா. அந்த லேப்டாப்பை நண்பர்கள் உதவியோடு ஒரு வாரத்தில் கண்டுபிடித்துவிட்டேன்.
மனைவிக்கு முதலிடம்
என்னை நம்புவார். என்னிடமுள்ள எதிர்மறையான விஷயங்களை ரொம்ப சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார். நன்றாகச் சமைப்பார். அவர் வைக்கும் சாம்பாருக்கு நான் அடிமை. நான் யோசிக்கும் அனைத்துக் கதைகளையும் அவரிடம் விவாதிப்பேன். எந்தக் கதையைச் சொன்னாலும், அதற்குச் சரியான விமர்சனம் அவரிடமிருந்து வரும். கணவர் என்பதற்காக நான் சொல்லும் அனைத்தையும் ‘சூப்பர்’ என்று சொல்ல மாட்டார். சில கதைகளைக் கேட்டுவிட்டு, ‘கேவலமாக இருக்கிறது’ என்றுகூடச் சொல்லியிருக்கிறார். சில காட்சிகளைக் கேட்டு, “இப்படியெல்லாம் செய்யாதே, இது உன் பெயரைக் கெடுக்கும்” என்றெல்லாம் சொல்லி மெருகேற்றுவார்.
இதுவரை நான் செய்த படங்கள் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்படி எழுதினேன், எப்படிப் படமாக்கினேன், என்ன நடந்தது என்பவை அவருக்குத் தெரியும். தனியாகக் கதை எழுதும்போது அவரை மட்டுமே அழைத்துச் செல்வேன். அப்போது ஏற்படும் சந்தேகங்களை எல்லாம் அவரிடம் கேட்டுத்தான் சரிசெய்வேன். படப்பிடிப்புத் தளங்களுக்கு வருவார். ஒரு படத்துக்குக் கதை எழுதுவதில் தொடங்கி திரையரங்கில் பார்த்து ரசிக்கும்வரை கூடவே இருப்பார். அவரை ஒதுக்கிவைத்து நான் எதையும் செய்தது கிடையாது. ஒரு கதையை முழுமையாக முடித்துவிட்டு, எனக்கு நம்பிக்கையான ஐந்து பேரிடம் படிக்கக் கொடுப்பேன். அதில் முதல் ஆள் என் மனைவிதான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago