பெண்கள் 360: சந்திரயானுக்குப் பின்னால் பெண்கள்

By செய்திப்பிரிவு

சந்திரயான் - 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலவின் தென்துருவப் பகுதியை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்துள்ளது. திட்டமிட்டபடி இந்தப் பாதையில் சந்திரயான் இறங்கும்போது ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளித் துறையில் இந்தியாவும் இடம்பிடிக்கும் வரலாறு உருவாகும். சந்திரயான் - 3 திட்டத்தின் வரலாற்று வெற்றியில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களில் ஒருவர் ரிது கரிதால். இந்தியாவின் ‘ராக்கெட் பெண்’ என அழைக்கப்படும் இவர், இந்தியாவின் சாதனைத் திட்டமான மங்கள்யானில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர், சர்வதேச அறிவியல் ஆய்விதழ்கள் பலவற்றில் விண்வெளி ஆய்வு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட கட்டுரைகளைச் சமர்பித்துள்ளார். இந்தத் திட்டத்தில் மூத்த விஞ்ஞானியாகச் செயல்பட்டுள்ளார்.

முன்னுதாரண நடவடிக்கை

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி அரசு, விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தலுக்கு முன்னுதாரண நடவடிக்கையை எடுத்துள்ளது. 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கூடைப்பந்து அணியின் பயிற்சியாளரான அமது பாம்பா மீது வீராங்கனைகள் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல், வல்லுறவு போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சர்வதேசக் கூடைப்பந்து சம்மேளனம் இதைத் தொடர்ந்து அமது பாம்பாவுக்கு வாழ்நாள் தடையை விதித்துள்ளது.

சமப் பரிசு!

ஆண், பெண் இரு அணிகளுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் எனச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இது மகளிர் கிரிக்கெட்டில் முக்கியமான நகர்வு. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, மகளிர் கிரிக்கெட் மீது கூடுதல் வெளிச்சம் விழ உதவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE