பெண்ணாக உணரும் தருணம் எது?

By அ.ராமசாமி

1997-ல் ஒரு பொங்கல் மலரில் அச்சாகி இருந்த வாகனம் என்னும் தலைப்பிட்ட சிறுகதை எனக்கு மறந்து போகாமல் இருக்க வலுவான ஒரு காரணம் உண்டு. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியராக நான் வந்தபோது, டாக்டர் வசந்திதேவி துணைவேந்தராக இருந்தார். ஒருவர் பெண்ணாக இருப்பதாலேயே பெண்ணியவாதியாக ஆக முடியாது;

தன்னைப் பெண்ணியவாதியாகக் கருதிக் கொள்ள வேண்டும்; செயல்பட வேண்டும்; செயல்படுத்த வேண்டும்; தன்னோடு உள்ளவர்களைச் செயல்படச் செய்ய வேண்டும் எனக் கருதுபவர் அவர். அவரது மேற்பார்வையில் பல்கலைக்கழகத்தில் முன் வைக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் பெண்களை எவ்வாறு வளர்த்தெடுக்கும் என்ற நோக்கத்தில் பார்க்கப்பட்டே முன்னெடுக்கப்பட்டது. ஆண்களை வெறுத்து ஒதுக்கிவிட்டுப் பெண் முன்னேற்றம், பெண் உரிமை என்பன சாத்தியம் இல்லை என்பதில் உறுதியாக இருந்தவர் அவர்.

வகுப்பறைக்கும் வெளியே கற்க வேண்டியவை உள்ளன என்பதை உணர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நாட்டுநலப் பணித் திட்டத்தில் பெரும்பாலும் மாணாக்கர்களை பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று புள்ளிவிவரங்கள் சேகரித்தல், தெருக்களைச் சுத்தம் செய்தல், சாலை போடுதல், மரம் நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். பெருநகரக் கல்லூரிகளாக இருந்தால் போக்குவரத்துக்கு உதவுதல், மருத்துவமனைப் பணிகளுக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர். உடல் உழைப்பு சார்ந்த தொழில்களையும் மக்களையும் விட்டு விலகிவிடுவதாகக் கல்வி ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு பண்டித நேரு திட்டமிட்டுத் தந்த திட்டம் அது.

பெண்கள் சைக்கிள் திட்டம்

மூன்று நாள் முகாம், பத்து நாள் முகாம் எனத் திட்டமிட்டுக்கொண்டு நடத்தப்படும் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்களில் மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு உண்டு என்பதைத் தாண்டி மாணாக்கர்கள் கற்றுக் கொள்வது என்பது அதிகம் இருக்காது. அதிலும் திருநெல்வேலி போன்ற கிராமப்புறக் கல்லூரிகளில் பயில்பவர்கள் உடல் உழைப்பையும் சேர்த்தே செய்பவர்கள்தான்.

பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வரும் மாணாக்கர்களில் பாதிப் பேர் விவசாய வேலைகளில் ஈடுபடுகிறவர்களாகவே இருக்கின்றனர். பெண்களும்கூட தங்கள் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளையும் விவசாய வேலைகளையும் செய்துவிட்டு வருவதையே இன்றும் காண்கிறேன். கல்வியின் காரணமாக அதிகமும் அந்நியமாகாத நிலை, இன்னும் இங்கு தொடரவே செய்கிறது.

நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் பெண்களுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி முகாம் ஒன்றை நடத்த வேண்டும் என டாக்டர் வசந்திதேவி எங்களை அழைத்துச் சொன்னார். உடனடியாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பால் கேனைக் கட்டிக்கொண்டு சைக்கிள் விடும் பெண், கணவனைப் பின்னால் உட்கார வைத்து மண் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் பெண், இரு பக்கமும் தண்ணீர்ப் பானைகளைக் கட்டித் தொங்கவிட்டுச் செல்லும் பெண் எனப் புகைப்படங்கள் பெரிய அளவில் புளோ-அப் செய்யப்பட்டு அந்தப் பயிலரங்கில் நிறுத்தப்பட்டன.

மூன்று நாளில் ஏறத்தாழ 100 மாணவிகளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுத் தரப்பட்டது. ஒவ்வொரு பெண்கள் கல்லூரியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப் பட்டது. கற்றுக்கொண்ட ஒவ்வொரு பெண்ணும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு பத்துப் பேருக்குச் சைக்கிள் விடக் கற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது நடந்தது 1998-ல்.

வாகனக் கதை

தனது குடும்ப வெளியில் மட்டுமல்லாது இந்தச் சமூக வெளியும் பெண்கள் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டியவர்கள் என்பதாகவே கருதுகிறது. அவள் ஒரு குழந்தையாக இருக்கும்போது கூட, ஆண்பிள்ளைக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கித் தரும் உறவினர்கள் பெண் பிள்ளைக்கு அதை வாங்கித்தர வேண்டும் என நினைப்பது இல்லை என்ற மனநிலையிலிருந்து சைக்கிள் ஓட்டுவது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது, குதிரைச் சவாரி செய்வது, கடலுக்குள் படகில் போவது எனப் பெண்களின் விருப்பங்கள் எதுவும் சாத்தியப்படாமல், இவற்றில் எல்லாம் ஆணின் துணையுடன் பயணம் செய்யும் சாத்தியங்கள் மட்டுமே வாய்க்கின்றன என்பதைச் சொல்கின்றது அம்பையின் கதை.

திட்டமிட்டுத் திட்டமிட்டு வாகனத்தைச் சொந்தமாக்கிட முயன்ற எல்லா முயற்சிகளுக்குப் பின்னால் எந்தத் திட்டமும் இல்லாமல் ஒரு வாகனம் அவள் வசமாகிறது. கணினியின் மௌஸ் என்னும் மூஞ்சூறு வாகனம் அது. மூஞ்சூறு வாகனம் அவளின் கை வழியாக கற்பனைச் சாலைகளில் தூர தேச நாடுகளுக்குள்ளும் பயணம் செய்கிறது. சினிமா, காதல், புரட்சி எல்லாம் நிரம்பிய பாரிஸ் நகருக்குள்ளும் சென்று வருகிறாள் அந்தப் பெண் என்பதாக முடிகிறது அந்தக் கதை.

கதையும் நிஜமும்

அம்பையின் வாகனம் கதையைத் துணைவேந்தர் வசந்திதேவியும் வாசித்திருப்பாரோ என்று நானே கேட்டுக் கொண்டு, ‘இல்லை ; வாசித்திருக்க மாட்டார்’ என்றும் சொல்லிக் கொண்டேன். காரணம் அம்பையின் கதை வாகனம் ஓட்டும் ஆசையை நினைப்பாகவே நிறுத்திக் கொண்டு, செயலைக் கைவிட்டு விடும் தன்மை கொண்டது.

கடைசியில் கணினியின் மூஞ்சூறு வாகனத்தில் பயணம் செய்து, அது தரும் இன்பத்தில் திருப்திப்பட்டுக் கொள்ளும் பாத்திரத்தைப் படைத்திருக்கிறது. ஆனால் வசந்திதேவியின் எண்ணங்கள் இந்த சமூகத்தில் பெண்கள் வாகனங்களைக் கையாளும் சாத்தியங்களை உருவாக்கித் தர வேண்டும் என்பதின் வெளிப்பாடு.

ஆம். ஒரு பதினைந்து ஆண்டுகளில் வாகனமோட்டும் பெண்களின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் அபரிமிதமானது. சென்னையின் ஒரு முச்சந்தியில் அல்லது நாற்சந்தியில் அவசர நேரம் எனச் சொல்லப்படும் காலை எட்டரைக்கும் பத்துக்கும் இடையிலோ, மாலை ஐந்து மணிக்குப் பிறகோ நின்று வேடிக்கை பார்த்தால் போதும். பெண்கள் வாகனங்களைக் கையாளும் லாகவம் புரியவரும்.

குறிப்பாக இரண்டு சக்கர மோட்டார்களில் பயணிக்கும் பெண்களின் வேகமும், அநாயசமான நோக்கும் இலக்கை எட்டிவிடத்துடிக்கும் மனநிலையும் புரியவரும். மஞ்சள் விளக்கு எரிந்து பச்சை விளக்கு வருவதற்கு முன்பாக உள் நுழைந்து பக்கத்தில் நிற்கும் ஆணைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறும் வேகத்துடன் அவள் பயணம் செய்கிறாள். இவள் அம்பையின் கதையில் வரும் பாக்கியத்தின் செயல்வடிவம் மட்டும் அல்ல; சிந்தனையின் கருத்துருவமும்கூட.

சென்னை நகரச் சாலைகளில் சைக்கிளில் பயணம் செய்யும் பெண்கள் குறைவாக இருக்க இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டிச் செல்லும் மொத்தக் கூட்டத்தில் 33 சதவீதம் பெண்கள் இருப்பது உறுதி. ஆனால் ஆண்கள் நிரம்பிய அரசும், பாராளுமன்றமும் அந்த 33 சதவீத இடத்தைத் தருவதற்கு இன்னமும் தயங்கிக் கொண்டிருக்கின்றன.

பெண்ணாய் உணர்வது

ஒரு நல்ல சிறுகதைக்கான ஆரம்பம், முடிவு, குறைந்த கால அளவு, குறைவான பாத்திரங்கள் என எதுவும் இல்லாத கதை. ஆனால், ஒரு பெண்ணின் வாகனம் ஓட்டும் விருப்பம் என்ற ஒற்றை மையம் தாவித்தாவிப் பல பருவங்களுக்கும் செல்கிறது என்ற அளவில் அந்தக் கதையைச் சிறுகதை இலக்கணத்திற்குள் அடக்கிவிட முடியும்.

பெண்ணின் இருப்பு, பெண் விருப்பத்திற்குத் தடை, பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை மறுக்கும் சமூகப் போக்கு, ஆணை முதன்மைப்படுத்தும் அன்றாட நிகழ்வுகள் , ஆண்களே தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு பெண்களை விலக்கி வைக்கும் ஆணவ நிலை, அப்படியான சூழலில் தன் நிலையை உணர்த்தும் பெண்களின் மனோபாவம் எனப் பெண்களின் வெளிக்கும் மனநிலைக்கும் முக்கியம் தரும் அம்பை, அதிகமும் சிறுகதை இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை.

என்றாலும் பெண்ணியம் பேசவும் பெண்ணாக நின்று எழுதவும் ஒரு நூறு பேருக்கு மேல் தமிழில் திரண்டுள்ளனர். அவர்களோடு தோழமை கொண்டு உறவாடவும் உரையாடவும் ஆண்களும் தயாராகவே உள்ளனர். (பெண்கள் என்ன எழுதிக் கிழித்துவிட்டார்கள் எனக் கேட்கும் கூட்டத்தை விட்டுவிடுங்கள்) அம்பையின் கதைகளை வாசியுங்கள்.. பெண்ணாய் உணர்வது எப்படி எனப் பாடம் சொல்லித் தரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்