எளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை

By வி.சாரதா

வேணியும் ராஜியும் தோழிகள். இருவருக்குமே ஐம்பதைத் தொடும் வயது. ராஜிக்கு திடீரென மார்பகத்தில் வலி. உடனே அதைத் தன் வீட்டினரிடம் தெரிவிக்கிறார். மருத்துவரைச் சந்தித்தபோது ராஜிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. உடனே அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். இரண்டு மார்பகங்களும் அகற்றப்பட்ட நிலையில், தன்னம்பிக்கையுடன் வலம் வருகிறார்.

வேணிக்கும் அதேபோல மார்பகத்தில் வலி ஏற்படுகிறது. ‘இதை எப்படி அடுத்தவரிடம் சொல்வது?’ என்ற தயக்கமே அவரைத் தடுக்கிறது. மீண்டும் வலி அதிகரித்தபோதும் மருத்துவரிடம் செல்லக் கூச்சப்பட்டு அமைதியாக இருந்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத போது மருத்துவரைச் சந்திக்கிறார். அவருக்கு மார்பகப் புற்றுநோய் இரண்டாம் கட்டத்தில்

இருப்பதால் உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர். மார்பகத்தை அகற்றுவதில் வேணிக்கு உடன்பாடு இல்லை. அதனால் சிகிச்சையைத் தள்ளிப்போடுகிறார். முடிவில் நோயின் தீவிரம் அதிகமாகி, அவர் சிகிச்சை பெற்றுத் திரும்ப நீண்ட நாட்களானது. வேணி மட்டுமல்ல, பல பெண்களிடமும் இதுபோன்ற மனத்தடை காணப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு வாழ்வில் எந்த இழப்பும் இல்லை என்ற தெளிவுதான் இதில் முக்கியம்.

வேணி, ராஜி இருவரும் ஒரே சிகிச்சையைத்தான் மேற்கொண்டார்கள். ஆனால் ராஜியின் தெளிவும் உறுதியும் அவரை மிக விரைவிலேயே இயல்பு நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. அதுதான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் தேவை.

நான் புற்றுநோயை வென்றவள்

நீரஜா மாலிக், அப்படியொரு தன்னம்பிக்கைப் பெண்மணி. தன்னைத் தாக்கிய நோயை மன உறுதியுடன் எதிர்கொண்டார். அதில் இருந்து மீண்டும் வந்தார். “நான் புற்றுநோயில் இருந்து தப்பித்தவள் அல்ல, அதை வென்றவள்” என்று உறுதியுடன் சொல்லும் நீரஜா மாலிக், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோய் கவுன்சலிங் குழுவில் இருக்கிறார்.

கண்ணில் கலக்கமில்லாத நீரஜா, “சிரிப்பும், கடவுளும்தான் என்னை இந்த நோயிலிருந்து காப்பாற்றின. எந்தவொரு விஷயத்திலும் ஒரு நன்மை இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறேன். இந்த நோயை எதிர்கொள்ள எனது குடும்பம் உறுதுணையாக இருந்தது” என்கிறவர், புற்றுநோய் கவுன்சிலிங் குழு தொடங்கியதைப் பற்றிச் சொல்கிறார்.

“எனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டபோது என் அம்மாவும், அக்காவும் எனக்குப் பெரும் துணையாக இருந்தனர்.அவர்கள் கொடுத்த அந்த வலிமைதான் எனக்கு ஊக்கமளித்தது. அவர்களை பார்த்துதான் அப்போலோ புற்றுநோய் உதவிக் குழுவை ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியது. நீ குணமாகி விடுவாய் என்று யாரோ ஒருவர் சொல்வதைவிட, புற்றுநோயை வென்றவர் சொல்லும்போது, அது மிகவும் நம்பிக்கை அளிக்கும். ‘என்னால் முடிந்தால் உன்னாலும் முடியும்’ இதுவே தாரக மந்திரம்” என்கிறார்.

புற்றுநோய் சிகிச்சை முடிந்த பிறகு இரண்டாவது முறையும் நீரஜாவைப் புற்றுநோய் தாக்கியது. “அது வரை நான் கவுன்சலிங் கொடுத்த புற்றுநோயாளிகள், நான் எப்படிப் புற்றுநோயை வென்றேன் என்பதைக் கேட்டு மட்டுமே அறிந்திருந்தார்கள். ஆனால் இப்போது நேரிலேயே பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அவர்களுக்குத் தன்னம்பிக்கை தருவதற்கு இதுவும் ஒரு வாய்ப்புதானே” என்று எதையுமே நம்பிக்கையோடு அணுகுகிறார். இதே நம்பிக்கையும் விழிப்புணர்வும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பரவும்போது புற்றுநோயை வெல்வது எளிது.

மார்பகப் புற்றுநோயைப் பற்றிய போதிய விழிப்புணர்வு பெண்களிடையேயும், மருத்துவர்களிடையேயும் இல்லாததே இழப்புகளுக்குக் காரணம். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இறப்புகளைத் தடுக்க முடியும்.

எது புற்றுநோய்?

புற்றுநோய் என்பது பிறழ் அணுக்களின் (abnormal cells) கட்டுக்கு அடங்காத வளர்ச்சி. இந்த அணுக்கள் ரத்தத்தில் கலந்து பல இடங்களுக்குச் செல்லும்போது உடலுறுப்புகளின் இயல்பான செயல்களை அது தடுக்கிறது. இந்த பிறழ் அணுக்கள் மார்பகத்தில் உருவானால் அதை மார்பகப் புற்றுநோய் என்கிறோம். இந்த அணுக்களிலிருந்து புதிய பிறழ் அணுக்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். இவை கட்டியாக மாறும்.

உயிருக்கு ஆபத்தா?

மார்பகம், உயிர் வாழ்வதற்கான முக்கிய உறுப்பு அல்ல என்பதால் மார்பகத்தில் உள்ள புற்றுநோயால் உயிருக்குப் பாதிப்பு ஏற்படாது. ஆனால் அந்த அணுக்கள் ரத்தத்தில் கலந்து நுரையீரல், கல்லீரல் போன்ற வேறு உறுப்புகளுக்குச் சென்று தங்கி, பிறழ் அணுக்களைப் பெருக்கினால் அது ஆபத்து.

ஏன் வருகிறது?

மார்பகப் புற்றுநோய் வருவதற்குக் குறிப்பிட்ட காரணம் கிடையாது. சீக்கிரமே பூப்படைந்தவர்கள், மாதவிடாய் சுழற்சி 50 வயதுக்கு மேல் தொடர்தல், முதல் பிரசவம் 30 வயது வரை ஏற்படாமல் இருத்தல், எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியோருக்குப் புற்றுநோய் வரலாம் என்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு வந்தே தீரும் என்பதில்லை.

அறிகுறிகள்

வலியில்லாத, வலியுடன் கூடிய மார்பகக் கட்டி, மார்பகம் தடித்துப் போதல், மார்புக் காம்பிலிருந்து ரத்தம் அல்லது திரவம் கசிதல், மார்புக் காம்பு உள்ளிழுத்துக்கொள்ளுதல், அக்குள் பாகத்தில் வீக்கம் ஆகியவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

மார்பகத்தை நீக்க வேண்டுமா?

மார்பகத்தில் உள்ள கட்டியை நீக்குவதன் மூலம், அது வேறு இடங்களுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும். இதை நீக்குவதற்கு ரேடியேஷன், கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. எல்லா நேரத்திலும் மார்பகங்களை நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்டியின் அளவைப் பொருத்து மார்பகத்தின் ஒரு பகுதியை மட்டும் அகற்றி, மார்பகத்தின் உருவம் மாறாமலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

40 வயதுக்கு மேல்

இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுள் 89% பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். எனவே 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் ஓராண்டுக்கு ஒரு முறை மேமோகிராம் பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

சென்னை மார்பக மையத்தின் மருத்துவர் செல்வி ராதாகிருஷ்ணன் மார்பகப் புற்றுநோய் குறித்த விளக்கக் கையேட்டை எழுதியுள்ளார். அவர், “மார்பகத்தில் ஏதேனும் சிறு மாற்றம் தெரிந்தால்கூட அதை மருத்துவரிடம் சென்று சரி பார்த்துக் கொள்வது நல்லது. சில பெண்கள் அது பால் கட்டியாக இருக்கும் என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். இது தவறு” என்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்