வானவில் பெண்கள்: ஓய்வறியாப் போராளி

By எஸ்.சுஜாதா

வல்லமை படைத்த அதிகார மையங்களை எதிர்த்துத் துணிச்சலுடன் போராடிவருபவர் தயாமணி பர்லா. “நான் முன்னேற்றத்துக்கு எதிரி அல்ல. ஆனால், இயற்கையை அழித்துக் கிடைக்கும் முன்னேற்றத்துக்கு எதிரி. இந்தியாவின் இயற்கையைக் கொள்ளையடிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும் அரசு இயந்திரங்களும் காத்திருக்கின்றன. இயற்கையைக் காப்பதும் பழங்குடி மக்களின் இடப்பெயர்வைத் தடுப்பதும்தான் என் நோக்கம். என் போராட்டம் மக்களுக்கான போராட்டம்; இயற்கைக்கான போராட்டம்!” என அழுத்தமாகக் கூறுகிறார் இவர்.

யார் இந்த தயாமணி?

காடுகளும் மலைகளும் அதிகமுள்ள நிலப்பரப்பு ஜார்கண்ட். இங்கே இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமங்கள் அதிகம் கிடைக்கின்றன. அதனால், பல சர்வதேச நிறுவனங்கள் ஜார்கண்டை நோக்கிப் படையெடுத்துவருவதில் ஆச்சரியமில்லை. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைக் கிராமம் ஒன்றில் முண்டா பழங்குடியினத்தில் பிறந்தார் தயாமணி. ஒவ்வொரு குடும்பத்துக்கும் பல ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. நிலத்தில் விவசாயம் செய்தும் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்தும் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தனர். ஒன்பது வயதில் தயாமணி அந்த அநியாயத்தை எதிர்கொண்டார். தொழிலதிபர் ஒருவர் பழங்குடி மக்களை ஏமாற்றி, பத்திரங்களில் கைரேகைகளைப் பெற்றுக்கொண்டார்.

அதில் தயாமணி குடும்பத்துக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலமும் பறிபோனது. படிக்காத பெற்றோரின் அறியாமையால், சொந்த நிலத்தைத் தொலைத்த துயரம் தயாமணியை வாட்டியது. தங்கள் மக்கள் பிறரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்குக் கல்வி ஒன்றே தீர்வு என்று உணர்ந்துகொண்டார். சொந்த நிலத்தில் உழைத்து, கம்பீரமாக வாழ்க்கை நடத்திவந்த குடும்பம், வாழ வழியின்றி நடுத் தெருவில் நின்றது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அப்பா ஒரு நகரத்துக்குக் கூலி வேலைக்குச் சென்றார். அம்மா வேறொரு நகரத்தில் வீட்டு வேலை செய்தார். தயாமணியும் தம்பியும் பிறர் வீடுகளில் வேலை செய்துகொண்டே படித்துவந்தனர்.

15CHLRD_DAYAMANI_துரத்திய துயரம்

அது மிகத் துயரமான காலகட்டம். கொடுக்கும் சம்பளத்தைவிட அதிகமாக வேலை வாங்கினார்கள். மாட்டுத் தொழுவத்தில்தான் தூங்க வேண்டும். வேலைகளை முடித்துவிட்டு, படிப்பைத் தொடர்வது மிகவும் சிரமமாக இருந்தது. படிப்பை விட்டுவிட்டு, முழு நேர வேலைக்குச் சென்றால் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம். தொழுவத்தில் தங்க வேண்டிய நிலையும் ஏற்படாது என்று அவ்வப்போது நினைப்பார் தயாமணி. ஆனால், படிப்பறிவு இல்லாமல் தங்கள் பாரம்பரிய நிலத்தை இழந்த தருணம் அவர் நினைவுக்கு வந்தவுடன் படிப்பை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

15 வயதில் ஒருநாள் இரவு, வீட்டின் உரிமையாளர் தயாமணியைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார். உடனே அந்த வீட்டைவிட்டு வெளியேறினார். சில காலம் ரயில் நிலையத்தில் தங்கி பள்ளிக்குச் சென்றுவந்தார். பிறகு அரசாங்க மாணவர் விடுதியில் தங்குவதற்கு இடம் கிடைத்தது. கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டே எம்.காம்., இதழியல் வரை படித்து முடித்தார்.

பத்திரிகையாளராக

வங்கியிலிருந்து கடன் பெற்று, ‘ஜன் ஹக்’ என்ற பெயரில் சொந்தமாகப் பத்திரிகையை வெளியிட்டார். இதில் பழங்குடி மக்களின் கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கங்கள், பிரச்சினைகள் குறித்து மிக ஆழமான கட்டுரைகள் வெளியாகின. ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பிரச்சினைகள் அலசப்பட்டன, மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன, அவை தொகுக்கப்பட்டு அடர்த்தியான கட்டுரைகளாக வெளிவந்தன.

தயாமணியும் தீவிரமான கட்டுரைகளை எழுதிவந்தார். பழங்குடி மக்களின் துயரத்தை உள்ளது உள்ளபடியே சொன்ன தயாமணியின் எழுத்துகள், பிரபலப் பத்திரிகைகளில் வெளிவந்தால் அதிகமான மக்களிடம் சென்றடையும் என்று நினைத்த நண்பர்கள், ‘பிரபாத் கபர்’ என்ற பிரபல இந்தி தினசரியில் எழுதச் சொன்னார்கள். தயாமணியின் கட்டுரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டது அந்த நாளிதழ். அவர் எழுதிய விஷயங்கள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடைந்தன. தயாமணியும் பிரபலமானார்.

எழுத்திலிருந்து போராட்டத்துக்கு

எழுதுவதுடன் நின்றுவிடாமல் மக்களைத் திரட்டிப் போராட்டங்களிலும் இறங்கினார் தயாமணி. பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகித்தார். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தார். தன்னுடைய கிராமத்தில் ஒரு தேநீர்க் கடையைத் திறந்தார். இது சாதாரணத் தேநீர்க் கடை இல்லை. மக்கள் சந்தித்து, தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய இடம் என்பார் தயாமணி. 1995-ம் ஆண்டு கோயல் கரோ அணை கட்டும் பணி தீவிரமடைந்தது. இந்த அணை கட்டப்பட்டால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 55,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்படும். 27,000 ஹெக்டேர் காடு அழியும். இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டியிருக்கும்.

அணை கட்டுவதை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார் தயாமணி. மக்களை ஒன்றுதிரட்டினார். முதல் போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். மக்கள் ஆதரவு பெருகியது. அடுத்த போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டர். அரசாங்கத்தின் மிரட்டல், கைது போன்றவை வழக்கம்போல் அரங்கேறின. இவற்றையெல்லாம் கண்டு போராட்டக்காரர்கள் பயப்படவில்லை. அடுத்த போராட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

சிறை வாசம்

அரசாங்கமே திகைத்துப்போனது. ஒரு போராட்டத்தின்போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் மூன்று போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் மீதே பொய் வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளினர். இப்படிப் பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார் தயாமணி.

2006-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஏர்சிலர் மிட்டல் என்ற சர்வதேச நிறுவனம், இரும்பு ஆலையைத் தொடங்குவதற்காக 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தைக் கேட்டது. அதைக் கடுமையாக எதிர்த்தனர் தயாமணி தலைமையிலான பழங்குடி மக்கள். தொடர்ச்சியான போராட்டங்களால் இந்தியா முழுவதும் போராட்டம் கவனத்தை ஈர்த்தது. நிலத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைத் தந்துவிடுவதாகக் கூறியது அந்த சர்வதேச நிறுவனம்.

“யாருடைய நிலத்துக்கு யார் இழப்பீடு தருவது? இழப்பீடு தருவதாகச் சொல்பவர் கள் எங்களை இணை உரிமையாளர்களாக ஏற்பார்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் தயாமணி. இந்தப் பேச்சைக் கேட்டு, அதிகாரவர்க்கம் கோபத்தின் எல்லைக்கே சென்றது. தயாமணி சிறையில் அடைக்கப்பட்டார். வெளியில் வந்தால் போராட்டம், மீண்டும் சிறை என்று அவரது வாழ்க்கை ஐந்து ஆண்டுகள் அலைக்கழிந்தது.

இந்தக் காலகட்டத்தில் தயாமணி ‘அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர், இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்’ என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டார். முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கிறார் என்ற தவறான பிம்பத்தை மக்களிடம் உருவாக்கினார்கள். இதற்கு நகர்ப்புற மக்களிடம் கணிசமான ஆதரவும் கிடைத்தது.

அர்த்தமுள்ள வாழ்க்கை!

இப்படிப் போராட்டமும் சிறைவாசமுமாக இருக்கும் வாழ்க்கையில் என்றாவது சலிப்படைந்தீர்களா என்று கேட்டால், இல்லை என்கிறார் தயாமணி. “என்னால் பழங்குடி மக்களின் துயரத்தைச் சிறிதளவாவது போக்க முடிந்திருக்கிறது என்பதையும் இயற்கை வளத்தைக் கட்டிக்காக்க முடிந்திருக்கிறது என்பதையும் இந்த வாழ்க்கைக்கான அர்த்தமாகப் பார்க்கிறேன்” என்கிறார் தயாமணி.

பெரும்பான்மையான மக்கள் இவரது போராட்டத்தைப் பழங்குடி மக்களுக்கான போராட்டமாக மட்டும் கருதி, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

“என் போராட்டத்தைக் குறுக்கிவிடாதீர்கள். இலுப்பை, மா, கரடி, மான், குருவி, அணில், பூச்சி, புழு, மனிதர்கள் என்று எல்லா உயிர்களுக்காகவும்தான் போராடிக்கொண்டிருக்கிறேன்” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தயாமணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்