யா
னைகளிடமிருந்து மனித இனம் கற்றுக்கொள்ள முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. அது, பெண் தலைமை! மனிதச் சமூகத்தில் ஆணாதிக்கம் வலுத்திருக்க, யானைகளின் சமூகத்தில் பெண்கள்தான் தலைமை வகித்து, தன் இனக்குழுவை வழிநடத்துகின்றன.
உலகில் இன்று ஆசிய, ஆப்பிரிக்க யானைகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆனால், அதிக ஆபத்தில் இருப்பவை ஆப்பிரிக்க யானைகளே. காரணம், ஆசிய யானைகளில் சில ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தம் உண்டு. ஆப்பிரிக்க யானைகளில், இருபால் யானைகளுக்கும் தந்தங்கள் உண்டு. அதிக தந்தம், அதிக ஆபத்து!
தந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகள் அதிக அளவில் கள்ள வேட்டைக்கு ஆளாகின்றன. அதனால் அழிவின் விளிம்புக்குச் செல்கின்றன. அழிவிலிருந்து அவற்றைக் காப்பாற்ற ஒரு பெண் முன்வந்தார். அவர், சிந்தியா மோஸ். யானைகளைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க யானைகளைப் பற்றிய பல ஆராய்ச்சித் தகவல்களையும் அறிவியல் உலகுக்கு வழங்கியவர் இவர்!
இதழியலில் இருந்து இயற்கைக்கு
1940-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி அமெரிக்காவின் ஆஸினிங் எனும் இடத்தில் ஜூலியன் – லில்லியன் மோஸ் தம்பதிக்குப் பிறந்தார் சிந்தியா மோஸ். 1962-ம் ஆண்டு மாசாசூசெட்ஸ் பகுதியில் உள்ள ஸ்மித் கல்லூரியில் தத்துவப் புலத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார்.
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், ‘நியூஸ் வீக்’ எனும் பிரபல இதழில் நிருபராகச் சேர்ந்தார். நாடகம், நிகழ்த்துக் கலைகள் குறித்து அந்தப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். அங்கு அவர் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அவர் இதழாளராகப் பணியிலிருந்தபோது, 1967-ம் ஆண்டு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு தான்சானியா நாட்டில் உள்ள யானை ஆய்வாளர் இயன் டக்ளஸ் ஹாமில்டனைப் பேட்டியெடுக்க வேண்டும் என்பது சிந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. அந்தப் பேட்டி, தன்னையும் ஒரு யானை ஆய்வாளராக மாற்றும் என்று சிந்தியாவே அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்!
யானை ஆய்வில் புதிய உத்தி
இயன் ஹாமில்டனை நேர்காணல் செய்த அடுத்த ஆண்டே அவரிடம் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார் சிந்தியா. தான்சானியாவில் உள்ள லேக் மன்யாரா தேசியப் பூங்காவில் சிந்தியாவின் ஆய்வுப் பணி தொடங்கியது. 1968 முதல் 1971-ம் ஆண்டுவரை இயன் ஹாமில்டனிடம் பணியாற்றிய காலத்தில் யானைகள் தொடர்பாக சிந்தியா நிறைய கற்றுக்கொண்டார்.
மேலோட்டமாகப் பார்த்தால், எல்லா யானைகளும் ஒரே மாதிரி உருவ அமைப்புடன் இருப்பதுபோலத் தெரியும். உண்மையில், ஒவ்வொரு யானையின் உடலமைப்பிலும் ஒரு தனித்துவம் உள்ளது. அதைப் பயன்படுத்தி யானைகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை நம்மால் அறிய முடியும். இப்படி வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால்தான் ஒவ்வொரு யானையையும் ஆய்வு செய்ய முடியும்.
அந்தக் காலத்தில் ஒரு யானைக்கும் இன்னொரு யானைக்குமான வித்தியாசத்தை அறிய யானை ஆய்வாளர்கள் பெரும்பாடுபட்டனர். அதை எளிமையாகச் செய்வதற்கு இயன் டக்ளஸும் சிந்தியாவும் ஒரு உத்தியைப் அறிமுகப்படுத்தினர். அது யானைகளை ஒளிப்படம் எடுப்பது. இந்த உத்தி அறிவியல் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படிப் பல பாடங்களை இயன் ஹாமில்டனிடமிருந்து கற்றுக்கொண்ட சிந்தியா, 1972-ம் ஆண்டு கென்யாவில் உள்ள அம்போசெலி தேசியப் பூங்காவில் அம்போசெலி யானை ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கினார்.
அம்போசெலி யானைகளின் பங்களிப்பு
யானைகள் தொடர்பான தனது ஆய்வுக்கு, அம்போசெலி பகுதியைச் சிந்தியா தேர்வு செய்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. மிக முக்கியமானது, அங்குள்ள மசாய் இன மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஒற்றுமை இருந்தது. அதனால், இங்கு ‘மனித-விலங்கு எதிர்கொள்ளல்’ சம்பவங்கள் குறைவாக இருந்தன. இதனால் யானைகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. அதனால், அந்த யானைகளின் சமூக உறவுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு அந்தப் பகுதி சரியான தளமாக இருந்தது. இங்கு வாழ்ந்த யானைக் குழு ஒன்றை, சுமார் 13 ஆண்டுகள் ஆய்வு செய்தார் சிந்தியா மோஸ். அந்த அனுபவங்களை ‘எலிஃபன்ட் மெமரீஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.
ஆப்பிரிக்க யானைகளைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு அம்போசெலி பகுதி யானைகள் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள ஆண் யானைகளுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் (இது யானைகளின் இனப்பெருக்கக் காலம்) நெற்றிக்கு அருகிலிருந்து ஒரு திரவம் சுரக்கும். ஆசிய யானைகளுக்கும் இவ்வாறு திரவம் சுரக்கும். ஆனால், அந்தத் திரவம் குறித்து ஆசிய யானைகளை ஆராய்ந்தவர்கள் அறிந்திருந்தினர். அந்தத் திரவத்தை ‘மஸ்த்’ என்று அழைத்தனர். ஆனால் இந்தத் தகவல், தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்தில் ஆப்பிரிக்க யானைகளை ஆய்வு செய்தவர்களுக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் ஆய்விதழ் ஒன்றில் ஆசிய யானைகள் தொடர்பாக வெளியான கட்டுரையின் மூலம், ‘மஸ்த்’ குறித்து சிந்தியா அறிந்தார். சிந்தியாவும் அவரது நண்பர் ஜாய்ஸ் என்பவரும் இணைந்து 1980-ம் ஆண்டு ‘நேச்சர்’ எனும் பிரபல ஆய்விதழில் ஆப்பிரிக்க யானைகளுக்கு ஏற்படும் ‘மஸ்த்’ குறித்து முதன்முதலாகக் கட்டுரை வெளியிட்டனர். இது, ஆப்பிரிக்க யானைகளின் ஆய்வில் பெரும் பாய்ச்சலாக அன்று கருதப்பட்டது.
இப்படி ஆய்வுப் பணிகள் ஒருபுறம் இருக்க, யானைகளை அழிவிலிருந்து காப்பாற்றவும் சிந்தியா நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். அவரால்தான் தான்சானியாவில் நடைபெற்றுவந்த ‘கேளிக்கை வேட்டை’ (கேம் ஹண்டிங்) மூலம் யானைகள் கொல்லப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
யானைகளுடனான தனது அனுபவங்களைப் புத்தகமாகவும் ஆவணப் படங்களாகவும் வெளிக்கொண்டுவந்துள்ள சிந்தியா, தனது பணிகளுக்காகச் சர்வதேச அளவில் நிறைய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். தற்போது ‘அம்போசெலி யானைகள் அறக்கட்டளை’ மூலம் தனது பயணத்தைத் தொடர்கிறார் சிந்தியா!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago