நிகழ்வு: தொண்டுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்

By எல்.ரேணுகா தேவி

சு

வாமி விவேகானந்தரின் முதல் பெண் சீடர், இந்தியப் பெண்களின் மேம்பாட்டுக்கு வித்திட்டவர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவரான சகோதரி நிவேதிதாவின் 150-வது பிறந்தநாள் வரும் அக்டோபர் 28-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அயர்லாந்து நாட்டில் பிறந்த சகோதரி நிவேதிதாவின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபல். சிறுவயது முதல் ஓவியம், இசை உள்ளிட்ட கலைகளில் ஆர்வமுடையவராக இருந்தர். சுமார் பத்து ஆண்டுகள் அயர்லாந்து நாட்டில் ஆசிரியராகப் பணியாற்றினார். விவேகானந்தரின் சொற்பொழிவால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்கத் தொடங்கினார். பின்னர் விவேகானந்தரைத் தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டார்.

1898-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அவரை சுவாமி விவேகானந்தர் நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு நிவேதிதா என்று பெயர் சூட்டினார். நிவேதிதா என்றால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் என்று பொருள். அன்றிலிருந்து அவர் ‘சகோதரி நிவேதிதா’ என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பெண் முன்னேற்றத்துக்கான தொண்டு

விவேகானந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியப் பெண்களின் கல்வி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பணிகளுக்கு நிவேதிதா தன்னை ஒப்படைத்தார். கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) உள்ள ஒரு வீட்டில் பெண்களுக்கு எழுத படிக்கவும், தையல், மண் பொம்மை செய்தல், ஓவியம் வரைதல் போன்ற சுயதொழில்களையும் கற்றுக்கொடுத்தார்.

பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டார். அவரின் செயலைப் பாராட்டும் விதமாக சுவாமி விவேகானந்தர் பிளேக் நோய் நிவாரணக் குழுவின் தலைவராக அவரை நியமித்தார். தான் எழுதிய புத்தகங்கள் மூலம் கிடைக்கும் ராயல்டி தொகையை இந்தியப் பெண்களின் மேம்பாட்டுக்காவும் சமூக சேவைக்காகவும் பயன்படுத்தினார்.

பாரதியாரை மாற்றியவர்

ஒருமுறை பாரதியார் நிவேதிதாவைச் சந்திக்க வந்தபோது “உங்களுடைய மனைவியை அழைத்து வரவில்லையா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், “எங்கள் வீட்டுப் பெண்களை வெளியே அழைத்து வருவது கிடையாது, அவர்களுக்கு அரசியல் எல்லாம் தெரியாது” என பதிலளித்துள்ளார். இதைக் கேட்ட நிவேதிதா, “ஆண்களின் அடக்குமுறையில் இருந்து பெண்களுக்கு விடுதலை பெற்றுத்தர முடியாத உங்களால் எப்படி ஒரு நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும்?” என்று பாரதியாரின் தவறை சுட்டிக் காட்டினார். நிவேதிதாவின் பேச்சுக்குப் பிறகு பாரதியார் பெண்ணடிமைக் கருத்துகளை எதிர்த்து எழுதத் தொடங்கினார்.

விவேகானந்தருக்குப் பின்

விவேகானந்தர் மறைந்த பின்பும் இந்தியாவிலேயே தங்கி தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டார். இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட நிவேதிதா, அமெரிக்காவில் ராமகிருஷ்ண தொண்டர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். ராமகிருஷ்ணர் பெண்கள் பள்ளிக்கான திட்டம் என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தான் நடத்திவந்த பள்ளியில் ‘வந்தே மாதரம்’ பாடலைக் காலை வணக்கப் பாடலாகப் பாட வைத்தார்.

தன் இறுதிக்காலம்வரை பெண்கள் முன்னேற்றத்துக்காவும் இந்திய விடுதலைக்காகவும் குரல் கொடுத்து வந்த சகோதரி நிவேதிதா தன்னுடைய 44-ம் வயதில் 1911-ம் ஆண்டில் மறைந்தார். சகோதரி நிவேதிதாவின் 150- வது பிறந்த நாள் விழா சென்னையிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. மேலும் அன்றைய நாளில் தொழுநோய் விழிப்புணர்வு சிகிச்சை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்