‘ம
ன…மன… மென்டல் மனதில்’ என்று தமிழ் ரசிகர்களை மகிழ்வித்த குரலுக்குச் சொந்தக்காரர். ‘அரசியே’ பாடலில் ஒலிக்கும் ‘மெய்நிகர்’ குரலும் இவருடையதுதான். தெலுங்கு, கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளில் ஒலிக்கும் ஜோனிடாவின் பாட்டு உலகம் பெரிது. உருக்கம், அதிரடி என அவரின் குரல் குக்கூ ரகம் என்றால், படபட பேச்சு ஹைக்கூ ரகம்!
ஜோனிடா காந்தி, டொரன்டோவின் பாட்டுக் குயில். டெல்லியில் பிறந்தவர். குழந்தையாக இருந்தபோதே அவரின் குடும்பம் கனடாவுக்குக் குடியேறியது. இந்தியாவின் பண்பாட்டுப் பெருமைகளுடனும் கனடாவின் கலாச்சாரத்தோடும் வளர்ந்தார். அவர் யூடியூபில் பாடிப் பதிந்த பாடல்கள், அவருக்கான அடையாளமாக மாறின. இந்திப் பாடல்களையும் புகழ்பெற்ற ஆங்கிலப் பாடல்களையும் பாடுவதில் அவரின் தந்தைக்கு இருந்த ஆர்வம் ஜோனிடாவுக்கு மடை மாறியது.
பாடுவதிலும் ‘ஹிப்ஹாப்’ உள்ளிட்ட நடனங்களிலும் சிறந்து விளங்கினார் ஜோனிடா. ஆனால், எல்லோரும் நினைத்ததுபோல் அவரது நாட்டம் நடனத்தின் மீது திரும்பாமல் பாட்டின் மீது திரும்பியது.
நான்கு வயதிலேயே பாடகியாக மேடைகளில் தோன்றத் தொடங்கிய ஜோனிடா, படிப்பிலும் ஈடுபாட்டோடு இருந்தார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பாட்டுப் போட்டிகள் பலவற்றில் வெஸ்டர்ன் அன்டாரியோ சார்பில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றார். புகழ்பெற்ற யார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த போட்டியும் இதில் அடங்கும். 2011-ல் வெஸ்டர்ன் அன்டாரியோ பல்கலைக்கழகத்தின் சார்பாக ‘ஆசியாவின் முக’மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனு நிகம், மைக்கேல் ஜாக்ஸனுக்கான அஞ்சலியாக நடத்திய போட்டியிலும், டொரன்டோவில் கைலாஷ் கெர் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்றார்.
குரலே கருவி
மேற்கத்திய இசை, ஜாஸ், ராக், ப்ளூஸ் எனப் பலவிதமான இசைப் பாணிகளிலும் அவரின் ஆர்வம் அதிகரித்தது. ஒவ்வொரு இசைப் பாணியிலும் இருக்கும் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளத் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டார். ஒவ்வொரு பாணி இசையையும் அதற்குரிய ஸ்தாயியில் நேர்த்தியாக வெளிப்படுத்தும் ஒரு இசைக் கருவியைப் போல் தனது குரலைச் செம்மையாக்கிக்கொண்டார் ஜோனிடா. ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, வங்காளம், தமிழ், ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு எனப் பல மொழிகளில் பாடும் திறமையை வளர்த்துக்கொண்டார். இந்தியாவில் சில காலம் இருந்தபோது கர்னாடக இசைப் பயிற்சியையும் எடுத்துக்கொண்டார். ‘இதயத்தின் மொழி இசைதான்’ எனத் தத்துவார்த்தமாக தன்னுடைய இணையதளத்தில் பொறித்துவைத்திருக்கிறார் ஜோனிடா.
யூடியூப் ராணி
புகழ்பெற்ற பியானோ கலைஞர் ஆகாஷ், புல்லாங்குழல் கலைஞர் சஹில் கானுடன் இணைந்து இவர் பாடிய பாடலை யூடியூபில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு, கேட்டு ரசித்துள்ளனர். இந்தப் பாடலே அவரை பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களிடம் கொண்டு சேர்த்தது.
ஷாருக் கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இசையமைப்பாளர் விஷால் தத்லானி, பின்னணி பாடும் முதல் வாய்ப்பை ஜோனிடாவுக்கு வழங்கினார். முதல் வாய்ப்பே எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் என்பதில் ஜோனிடாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம். அதன் பிறகு இரண்டு வங்க மொழித் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு ஜோனிடாவுக்கு வந்தது.
தொடரும் பயணம்
2015-ல் வட அமெரிக்காவில் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்திய மேடை நிகழ்ச்சிகளில் ஐந்து மொழிகளில் பல்வேறு இசைப் பாணிகளில் அமைந்த பாடல்களைப் பாடி அசத்தினார். மிச்சிகன் பில்ஹார்மனிக் சிம்பொனியிலும் பாடியிருக்கிறார் ஜோனிடா.
உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களிடம் ஜோனிடாவைக் கொண்டு சேர்த்த புகழுக்கு உரியவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ‘ஹைவே’ இந்திப் படத்தில் ‘கஹான் ஹூன்’ பாடல், இசை ரசிகர்கள் அனைவரையும் மொழியைக் கடந்து கேட்கவைத்தது. கிழக்கு, மேற்கு இசைப் பாணியை ஒருங்கே கொண்டிருக்கும் அந்தப் பாடல் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பல பாலிவுட் படங்களிலும் தனிப்பட்ட ஆல்பங்களிலும் இடம்பெறும் பாடகியாக இருந்துவருகிறார் ஜோனிடா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago