பெண்களின் பிரச்சினைகள் அனைத்துமே பெரும் பிரச்சினைகள்தான். அவற்றில் இந்தப் பிரச்சினையை எழுதாவிட்டால் அந்தக் கதை முழுமையடையாது. அனைத்துக் குடும்பங்களிலும் இது இருக்கிறது என்று சொல்ல முடியாது; அனைத்து மனங்களும் இப்படித்தானிருக்கின்றன என்றும் சொல்ல முடியாது. எனினும், கிட்டத்தட்ட நீக்கமற நிறைந்திருக்கும் இந்த நோய்க்குப் பெயர் சந்தேகம். இதனால் ஆண்கள் வாழ்க்கையும் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதிக்கப்படுவது உண்டு. ஆனால், யாரும் சந்தேகப்பட்டுவிடக் கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்விலும் பதற்றத்திலும் எப்போதும் சிக்கித் தவிக்கும் பெண் மனதின் சோகத்தை அதனுடன் சமப்படுத்திவிட முடியாது.
சந்தேக வளையத்துக்குள் பெண்
தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு சிறுகதை இதை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் சொல்கிறது (ஆசிரியர் பெயர் நினைவில்லை). ஒரு கிராமத்துச் சிறுமி, தாய் தந்தை வீட்டுக்குள் படுத்திருக்க முதியோர் மற்றும் குழந்தைகளுடன் வெளியில் படுத்திருக்கிறாள். அப்போது வானத்தில் தெரியும் நிலா அவளை ஈர்க்கிறது. அவள் குழந்தைத்தனமாக எழுந்து நடந்து பார்க்கிறாள். அந்த நிலா அவளுடன் சேர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் வெளியே வருகிறார் அவளுடைய அப்பா. அவள் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பார்க்கிறார். பருவ வயது சிந்தனைகளே அவளை அவ்விதம் தூண்டுவதாகக் கருதுகிறார். மகளை அதட்டி ‘இனிமேல் நீ வெளியே படுக்க வேண்டாம்’ என்று வீட்டுக்குள் கூட்டிச் செல்கிறார். அந்தக் குழந்தை வேதனையிலும் அவமானத்திலும் அந்த நிலாவை மறந்துபோகிறது. அடுத்தபடியாக அந்தத் தகப்பன் அந்தப் பெண்ணுக்கு அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்துவைத்து விடுகிறார்.
திருமணமான புதிதில் கணவன் இரவுப் பணிக்கு மாலையில் கிளம்பிச் சென்றுவிடக் கொல்லைப் பக்கம் வந்த அந்தப் பெண் அந்தி நேரத்தில் வானில் நிலாவைப் பார்க்கிறாள். மீண்டும் நிலாவின் மீது ஆசை வருகிறது. அப்படியே கொள்ளை ஆசையுடன் ரசித்துப் பார்க்கிறாள். அந்த வேளையில் எதையோ மறந்து வைத்துவிட்டுப் போன கணவன் அதை எடுப்பதற்கு வீட்டுக்கு வருகிறார். மனைவியைத் தேடி கொல்லைப் பக்கம் வந்து அவள் முகம் கழுவி ஒப்பனையுடன் நின்று யாரையோ நினைத்துச் சிரிப்பதாகப் புரிந்துகொண்டு அவளை அடித்து ‘விளக்கு வைத்த பின்பு வீட்டுக்குள் ஒழுங்காக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்திச் செல்கிறார். அடி தந்த வேதனையும் அவமானமும் தாங்காமல் இனிமேல் நிலாவைப் பற்றி நினைக்கக் கூடாது என்று அந்தப் பெண் உறுதியெடுத்துக் கொள்கிறாள்.
அதன்பின் வரிசையாக மகப்பேறு. ஓய்வுக்கு நேரமில்லை. நிலா நினைப்பும் வரவில்லை. வயதாகிவிட்டது. மீண்டும் வீட்டுக்கு வெளியே படுக்கை. வீட்டுக்குள் மகனும் மருமகளும். இப்போது அந்தப் பாட்டி கண்ணில் மீண்டும் நிலா படுகிறது. எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது நிலாவை ரசிக்கத் தடையிருக்காது என்று அந்தப் பாட்டி நினைக்கிறார். சிறுவயதில் நடந்ததுபோல் எழுந்து நிலாவுடன் நடக்கிறார். அந்த நேரம் மகன் வருகிறான். ‘காலம் போன காலத்தில் போடுற சோத்தைத் தின்னுட்டு உட்கார்ந்திருக்காம இப்படிப் போனா என்ன அர்த்தம்’ என்று கேட்டு கிழவிக்கு அடி கொடுத்து வீட்டுக்குள் தள்ளினான் மகன். உள்ளே வந்து விழுந்த கிழவி அதன்பின் எழுந்திருக்கவேயில்லை என்று முடியும் அந்தக் கதை.
‘பெண் காம வயப்படுபவள். எனவே, அவள் சிறு வயதில் தந்தை, இளவயதில் கணவன், முதுமையில் மகன் காவலில் இருக்க வேண்டியவள்’ என்கிற மனு தர்மம் இன்று சட்டமாக இல்லாவிட்டாலும் எந்த அளவுக்கு நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதற்கான ஓர் உருவகக் கதையாக இதைக் கருதலாம். எனவே, பெண்ணைச் சந்தேக வளையத்துக்குள் இந்தச் சமுதாயம் வைத்திருப்பதில் வியப்பில்லை.
‘நல்ல பெண்’ணின் தகுதிகள்
ஒருதார மணமுறை, கற்புக் கோட்பாடு ஆகியவற்றின் தவிர்க்க இயலாத விளைபொருள் இந்தச் சந்தேகம். பல வீடுகளின் நிம்மதியைக் குலைக்கிறது இந்த மனநோய். பலருக்கு அவர்கள் எங்கே சென்றாலும் அவர்களை வேவு பார்க்கும் கணவன் அல்லது மனைவியின் கண்கள் அவர்கள் பிடரியில் உட்கார்ந்திருப்பதை உணர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதில் போன தலைமுறைப் பெண்ணுக்கு ஆண்களிடம் பழக வேண்டிய தருணங்களே கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்தத் தலைமுறைப் பெண்ணுக்குக் கல்வி மற்றும் வேலை நிமித்தம் ஆண்களிடம் பழகியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பழகவும் வேண்டும், ஆனால் வித்தியாசமாக யாரும் நினைத்து விடாத அளவில் பழக வேண்டும். ‘பார்க்கும் கருவி’களாக மட்டும் செயல்படக் கண்களுக்குப் பயிற்சியளித்து அளவாய்ப் பேசி அடக்கமாக நடந்து இப்படியெல்லாம் இருந்தால்தான் ஒரு பெண் நல்ல மனைவியாக இருக்க முடியும். அது மட்டுமல்ல, பல இடங்களில் பெண்களுக்குப் பதவி உயர்வுக்கான தகுதிகளும் இவைதான். காரணம், ஒரு பெண் நல்ல பெண் என்பதற்கு இவையெல்லாம் தகுதிகள் என்று சமுதாயம் நினைக்கிறது.
உடைக்கப்பட வேண்டிய கோட்பாடு
பொது இடத்தில் ஓர் ஆணோடு உரையாடிக்கொண்டிருப்பது, ஓர் அந்நிய ஆணுடன் (அந்நியம் என்றால் இங்கு குடும்ப உறுப்பினரல்லாதவர் என்று பொருள்) வாகனத்தில் பயணிப்பது போன்ற மிகச் சாதாரண விஷயங்கள்கூட இந்தச் சந்தேகத்துக்குக் காரணமாக அமைகின்றன. பலரின் மண வாழ்க்கையில் இந்தச் சந்தேகம் தீரும்போது வயதாகிவிடுகிறது அல்லது வயதானபடியால் சந்தேகம் நின்றுபோகிறது. உண்மையில் கற்பு என்றால் என்ன என்பதற்கான வரையறைகள் காலந்தோறும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், ‘கற்புள்ள பெண்’ ‘படி தாண்டாப் பத்தினி’ என்கிற உரை ஒரு கற்பனாவாதச் சித்திரத்தை அனைவர் மனதிலும் எழுதிக்கொண்டே இருக்கிறது. இந்தக் கற்புக் கோட்பாட்டை நேரெதிராக மோதி உடைக்காமல் இந்தச் சந்தேகம் என்கிற உளவியல் பிரச்சினையிலிருந்து நமது வாழ்க்கையை விடுவிக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விதான்.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு:oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago