புதிய ராகங்கள்: பாட்டு டாக்டர்

By வா.ரவிக்குமார்

 

ங்காளி பாதி, பஞ்சாபி பாதி சேர்த்து செய்த கலவை நிகிடா காந்தி. படிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் குடும்பம். மகளை மருத்துவராக்க வேண்டும் என்கிற பெற்றவர்களின் கனவை நனவாக்குவதற்காகச் சென்னை வந்தார். முன்னதாக கொல்கத்தாவிலேயே இந்துஸ்தானி, ஒடிஸி நடனம் போன்றவற்றை முறையாகக் கற்றிருக்கிறார். ரவீந்திர சங்கீதத்திலும் இயல்பாக அவருக்கு ஈடுபாடு இருந்தது. ஆனாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். இசைப் பள்ளியில் படித்தபோதுதான் இசையின் மீதான தனது காதல் வலுப்பட்டது என்கிறார் நிகிடா காந்தி.

பாடகியாக்கிய சென்னை

மேற்கத்திய இசையின் பாலபாடத்தையும் அதன் நுட்பங்களையும் படிக்கப் படிக்க இசையின் எல்லா வடிவங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். இசையை மனதிருப்திக்காக மட்டுமே வைத்திருந்த அவரை ஒரு முழு நேர இசைக் கலைஞராக்கியது அவர் படித்த இசைப் பள்ளி.

“எங்கள் இசைப் பள்ளியில் அடிக்கடி சேர்ந்திசை நிகழ்ச்சிகள் நடக்கும். அப்படி நடந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியை ஏ.ஆர். ரஹ்மான் பார்த்தார். சேர்ந்திசையில் பாடினாலும் உச்சஸ்தாயியில் என்னுடைய குரல் ஒலிக்கும் அளவு அவருக்குப் பிடித்திருக்கலாம். தனியாக வாய்ஸ் டெஸ்ட் எடுத்த பிறகுதான், ‘ஐ’ படத்தில் ‘லேடியோ’ பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்தார். அது பல்வேறு பொருட்களை விளம்பரப்படுத்தும் பாடலாகத் திரையில் ஒலிக்கும். உச்சஸ்தாயியில் சில இடங்களிலும் ரகசியம் பேசுவதுபோல் சில இடங்களிலும் பலவிதமான ஏற்ற இறக்கங்களுடன் அந்தப் பாடல் இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிகல் இசையமைப்பில் அந்தப் பாடல் வெளிவந்த உடன் என்னுடைய கிராஃபே மாறிவிட்டது. அவரின் ஒவ்வொரு வாய்ப்புமே ஏதாவது ஒரு புதிய விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுக்கும்” என்கிறார் நிகிடா காந்தி.

பாட்டுக்குப் பாட்டு

‘ஓ காதல் கண்மணி’ படத்தில் வரும் ‘தீரா உலா’ இவருக்குப் பிடித்த பாடல். “அந்தப் பாட்டில் வரும் ஒரு வரிதான் காற்று வெளியிடை. மணி சாரின் அடுத்த படத்தின் தலைப்பே அதுதான் என்பதை எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தேன்” என்று குழந்தையின் உற்சாகத்தோடு பேசும் நிகிடா, அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள் ‘சாரட்டு வண்டியில்’ பாடலில் அவர் பாடியிருக்கும் ‘ஏ.. பூங்கொடி… வந்து தேன் குடி… அவன் கைகளில் உடையட்டும் கண்ணே கண்ணாடி…!’

nikhita2சவாலே சமாளி

ஒரு பக்கம் பல் மருத்துவம் படித்துக்கொண்டே இன்னொரு பக்கம் ஜாஸ், ப்ளூஸ் எனப் பல்வேறு இசை பாணிகளைத் தெரிந்துகொள்வதில் தன் ஆர்வத்தை அதிகரித்துக்கொண்டார். இதன் விளைவாக பல ஆல்பங்களிலும், தனி மேடை நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்குப் பல இடங்களிலிருந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன.

“இறுதியாண்டில் ரொம்பவும் திண்டாடிப் போனேன். ஒரு பக்கம் தேர்வுக்காகத் தீவிரமாகத் தயாராக வேண்டிய நிர்ப்பந்தம். இன்னொரு பக்கம் பல இடங்களிலிருந்து வரும் புதிய வாய்ப்புகள். இரவில் ஒலிப்பதிவு இருக்கும்போது பகலில் படிப்பு. பகலில் ஒலிப்பதிவு இருக்கும் நேரத்தில் இரவில் படிப்பு என ஒருவழியாக இரண்டையும் பேலன்ஸ் செய்து, இதோ டாக்டர் நிகிடா காந்தியாகிவிட்டேன் என்கிறார்” புன்னகையுடன்.

சுதந்திர இசை

“எல்லைகள் இல்லாதது இசை. அதனால் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஒவ்வொரு கலைஞருடனும் அவர்கள் சார்ந்த இசையோடும் பயணப்படவே நான் விரும்புகிறேன். திரையிசை தவிர்த்து சுற்றுச்சூழல், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு செய்திகளையும் பிரச்சாரமாக இல்லாமல் துள்ளலான கொண்டாட்டப் பாணியில் சொல்லும் பாடல்களைப் பாடுவதற்கும் ஆர்வமாக இருக்கிறேன். இதற்கான முயற்சிகளையும் எடுத்துவருகிறேன்” என்கிறார் நிகிடா காந்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 mins ago

சிறப்புப் பக்கம்

12 mins ago

சிறப்புப் பக்கம்

37 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்