தினமும் மனதைக் கவனி - 19: இனிக்கும் முதுமை

By பிருந்தா ஜெயராமன்

முதுமை உடலுக்கும் மனதுக்கும் சவாலான பருவம். ஏற்க இயலாவிடினும் தவிர்க்க முடியாது; ஆனால், மனதளவில் இளமையாக இருப்பதை யாரும் தடுக்க இயலாது.

உடல்:

சரியான பராமரிப்பு இல்லையென்றால் உடம்பு எனும் இயந்திரம் தலை முதல் கால் வரை ஒவ்வொரு பாகமாகத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கும். இதய நோய், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறு, பார்கின்ஸன், மறதி நோய் போன்றவை பயமுறுத்தும். உடனே கவனிக்கப்பட வேண்டிய உங்கள் இணையரின் உடல் - மனநலப் பிரச்சினைகள் வேறு இருக்கும். சில குடும்பங்களில் பணத்தை, சொத்தைப் பராமரிப்பது பெண்ணின் தலையில் விழும். அதனால் அந்தப் பெண்ணோ தனது உடல்நலத்தைப் பட்டியலின் கடைசிக்குத் தள்ளிவிடுவார். நாளை நோய் முற்றிப் போய்விட்டால்? நீங்கள் அவதிப்படுவதோடு நில்லாமல், மற்றவருக்கும் கஷ்டம்தானே. தியாகச் சிந்தனை உடல்நலத்தில் வேண்டாமே!

குடும்பச் சூழல்களுக்கு ஏற்ப இப்போ தெல்லாம் வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ளத் தீர்வுகள் உள்ளன. பெற்றோர் தனியாகத்தான் இருப்போம் என்று பிடிவாதம் செய்யாமல், இனி பிள்ளைகள் சொல்படி கேட்டால் இரு தரப்பினருக்கும் நல்லது. ஒரு மகளது பொறுப்பில் இருக்கவைத்து, பராமரிப்புச் செலவை அனைவரும் பகிர்ந்துகொள்வது; ஒருவரது வீட்டுக்குப் பக்கத்தில் பெற்றோரைக் குடியிருக்க வைப்பது, ரிடையர்மென்ட் ஹோம் அல்லது முதியோர் இல்லத்தில் வைப்பது இப்படிப் பல தெரிவுகள் உண்டு. விருப்பமின்றி முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட பெற்றோர் மனம் நொந்துபோவார்கள். இந்தக் காலத்தில் இவையெல்லாம் இயல்பு என ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

மனம்:

முதுமையில் பதற்றமும் படபடப்பும் கூடுதலாகவே இருக்கும். இதனால், ‘என் பிள்ளை சாப்பிட்டுவிட்டானா?’, ‘பேத்தி காலேஜிலிருந்து வந்தாச்சா?’, ‘யார் போன் பண்ணினாங்க?’ என்பது போன்ற கேள்விகளை, மறதியின் காரணமாகத் திரும்பத் திரும்பக் கேட்டு, மற்றவரை எரிச்சல்படுத்தும் தினசரி நிகழ்வுகளும் நடக்கலாம். முதுமையில் நலிந்தவராகிவிட்டால், ‘பூமிக்குப் பாரமாக இருக்கிறேனே’ என்கிற குற்ற உணர்வு உங்களை வாட்டும். மேலும், குடும்பத்தவர் கடிந்துகொண்டால் கூசிப்போவீர்கள். யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூட முடியாது. தினசரி நடப்புகளில் ஏன் தலையிட வேண்டும்? உங்கள் தேவைகள் கவனிக்கப்படுகின்றனவா? நீங்கள் திருப்தி அடையுங்கள். அநாவசியப் பேச்சைத் தவிர்த்தால், உங்கள் மரியாதை வட்டத்துக்குள் இருப்பீர்கள்; கௌரவம் மிஞ்சும்!

தான் வாழ்ந்த வாழ்வை மதிப்பீடு செய்யும் காலம் முதுமை. கடந்த காலத் தவறுகளை அசைபோட்டு வருந்துவதும், அனுபவித்த உயர்ந்த வாழ்வின் நினைவுகளைப் பெருமையடித்துக்கொள்வதும் நடக்கும். கடந்த காலம் சரித்திரம்; அதைக் கொண்டுவரவோ மாற்றவோ முடியாது. எதிர்காலம் புதிர், உங்களைப் பயமுறுத்தும். நிகழ்காலம் மட்டுமே உங்கள் கையில் இருக்கிறது. அதை மனதுக்கு இதம் தரும் செயல்களில் செலவிடுங்கள்.

உலக வாழ்வின் மீதுள்ள பற்றைக் குறைக்க, ஆரோக்கியமான/ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்பது, தியானம் செய்வது, தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, தோத்திரங்களைச் சொல்வது, நடமாட்டம் உள்ளவராக இருந்தால் நடைபயிற்சி, வெளியே வந்து இயற்கையை ரசிப்பது, சம வயதினருடன் உரையாடுவது போன்ற செயல்கள் உதவும். இவை சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும். வாழ்க்கையில் கிடைத்தவற்றை எண்ணி மன நிறைவடையச் செய்யும். ‘எனக்கு மட்டும் துன்பம் ஏன்?’ என்பது பதில் இல்லாத கேள்வி. அவரவர் பங்குக்கு துன்பத்தை அனுபவித்தாக வேண்டும் என்கிற உலக நியதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் ‘முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன்’ என்கிற விழிப்புணர்வோடு, செய்யவேண்டியவற்றை (உயில் எழுதுவது போன்றவை) முடியுங்கள். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால், இடைப்பட்ட வாழ்க்கை நம் கையில்தான். அறிந்தே செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடுங்கள்.

முதுமையில் தனிமை, வறுமை, உயிர்க்கொல்லி நோய், உறவுகளின் உதாசீனம் இவையெல்லாம் கொடுமை. மாற்று இல்லாதபோது ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. முதுமைக்கு மனதைத் தயார் செய்துகொள்வோமா?

.(மனம் திறப்போம்)

கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்