என் பாதையில்: நிச்சயம் மீண்டுவிடுவாள் உங்கள் மகள்

By Guest Author

தன் பதின் பருவத்து மகளின் அதீத செல்போன் பயன்பாடு குறித்தும் சக மாணவனுக்கு அவள் அனுப்புகிற குறுஞ்செய்திகள் குறித்தும் கவலையுடன் எழுதியிருந்த தாய்க்குப் பலரும் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் சில இவை:

அந்தத் தாய் குறிப்பிட்டிருந்த விஷயம் இப்போது பல வீடுகளிலும் நடப்பதுதான். அதனால், அவர் இந்த அளவுக்குக் கலங்க வேண்டியது இல்லை. பருவ வயதில் ஆண்,பெண் ஈர்ப்பு இயல்பான விஷயம்தான். ஆனால், எல்லையை மீறாதவரை தவறல்ல. சிறு வயதிலிருந்தே பெற்றவர்கள் குறிப்பாக அம்மாக்கள் பெண் பிள்ளைகளிடம் ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் சங்கடங்களை நம் நாட்டு நடப்பிலிருந்தே எடுத்துக் கூறலாம். அதேபோல ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களும் தங்கள் பையன்களுக்குப் பெண்ணுடன் பழகும் முறையைப் பற்றிக் கண்டிப்பாக எடுத்துக்கூற வேண்டும். பல குழந்தைகளுக்கு வீட்டில் அவர்களுக்குத் தேவையான அன்பு, அரவணைப்பு, பாதுகாப்புணர்வு கிடைக்காததாலேயே வெளியே தேடுகிறார்கள். அவையெல்லாம் வீட்டிலேயே கிடைக்கும்பட்சத்தில் அவர்கள் கவனம் வெளியே செல்ல அதிக வாய்ப்பில்லை.

பருவ வயது எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆசைப்படும் வயது. பிள்ளைகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளட்டும். கூடவே, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சேர்த்தே தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளிகளிலும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குப் போதிய நேரம் தரப்பட வேண்டும்.

ஆண் - பெண் பழகினாலே தவறாகப் பார்க்கும் கண்ணோட்டம் இருப்பதாலேயே பல பிள்ளைகள் அதை மறைமுகமாகச் செய்கிறார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதே அவர்களை இதுபோன்ற தவறான பாதைகளில் செல்லவிடாமல் தடுக்கும். குழந்தைகள் இப்படிச் செய்துவிட்டால் உடனே அவர்களை விரோதிகளைப் போல நடத்தாமல், அவர்கள் மனதில் குற்ற உணர்வு எழாத வகையில் பக்குவமாகப் புரியவைக்க வேண்டும். தேவையற்ற பல பதிவுகளை இணையத்தில் இருந்து நீக்கினாலே பெரும்பாலான சங்கடங்கள் குறைந்துவிடும். அரசாங்கம் என்றைக்குத்தான் கண்விழித்துப் பார்க்குமோ?

- ஜே. லூர்து, மதுரை.

பள்ளிக் குழந்தைக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தவர் நீங்களே. அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியதும் நீங்களே. பிள்ளைகளின் மேல் பழிபோடுவது சரியல்ல. அவள் எவ்வாறு இதனுள்ளே சிக்கிக்கொண்டாளோ அதைப் போலவே வெளியே வந்துவிடுவாள். அதற்கு நீங்கள் வழியை மட்டும் காட்டுங்கள். உங்கள் மகள் கூறுவதை எந்த முன் முடிவும் இல்லாமல் கேளுங்கள். செல்போன் ஒரு பொழுதுபோக்கு சாதனமே. அதை மகளுக்கு உணர்த்தினாலே போதும்.

- விக்னேஷ், பாண்டிச்சேரி.

நம் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் நம் பார்வையில் அவர்கள் குழந்தைகள்தான். ஆனால், அவர்களுக்கென்று தனி மனம், உணர்வு, விருப்பு வெறுப்புகள் உண்டு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வளரிளம் பருவத்துக் குழந்தைகளிடம் பெற்றோர், நண்பர்களாகப் பழக வேண்டும். எது நடந்தாலும் முதலில் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அப்படி அவர்கள் சொல்லும்போது அவர்கள் மீதே குற்றத்தை நீங்கள் திருப்பக் கூடாது. அவர்கள் தவறே செய்திருந்தாலும் நீங்கள் முதலில் அவர்களிடம் பரிவு காட்டி அரவணைக்க வேண்டும்.

அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களைக் கண்காணிப்பதாக நினைத்துக்கொண்டு பிரச்சினை செய்யக் கூடாது. அடக்கி வைக்கவும் நினைக்கக் கூடாது. நடந்தது நடந்து விட்டது. இதை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள். முதலில் இது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லை என்று நீங்கள் நினையுங்கள். இந்த வயதின் இயல்பான தூண்டுதல் இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். எதிர்காலம் குறித்து மென்மையாக விவாதியுங்கள். உங்கள் மீதான அவளது நம்பிக்கையை அதிகரியுங்கள். காதல், பாலுணர்வு போன்றவை தலைதூக்கும் பருவம் இது. முதலில் நீங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் மகள் உங்களைப் புரிந்து கொள்ளுவாள்.

- தேஜஸ் சுப்பு (எ) கனலி.

நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். இந்து தமிழ்திசை, பெண் இன்று, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்