வெ
ளிநாட்டிலிருந்து ஒருவர் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடி, அதற்கான தீர்வுகளை நோக்கி உழைத்தால் நம்மில் பலரும் கேட்கும் முதல் கேள்வி, ‘இதனால் உங்களுக்கு என்ன பயன்?’ என்பதாக இருக்கிறது.
அந்தக் கேள்வியை எதிர்கொண்ட பல வெளிநாட்டவர்கள் உண்டு. சிலர் இங்கு வந்து ஆய்வு செய்தார்கள். சிலர் ஒளிப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தினார்கள். இன்னும் சிலர், இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதற்காக, இங்கேயே தங்கள் மொத்த வாழ்க்கையையும் கடத்தினார்கள்; கடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் இல்ஸ் கோஹ்லர் ரோலெஃப்சன். இவர், ஒட்டகங்களுக்காக ஒருவர்!
ஈர்த்த ஒட்டகங்கள்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இல்ஸ் கோஹ்லர், அடிப்படையில் கால்நடை மருத்துவர். இருந்தாலும், அவரது முதன்மைப் பணி விலங்குகளுக்குச் செயற்கை முறை கருவூட்டல். இதனால் மருத்துவப் பணி அலுத்துப்போக, தனது ஆர்வத்தை மானுடவியல், தொல்லியல் போன்றவற்றின் பக்கம் திருப்பினார்.
தொல்லியல் பணிக்காக யோர்தானில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு ஒட்டகம் வைத்திருக்கும் குடும்பத்துடன் அறிமுகம் ஏற்பட்டது. ஒரு முறை, சுமார் 100 ஒட்டகங்கள் கொண்ட கூட்டம், கோஹ்லர் பணியாற்றிக்கொண்டிருந்த பகுதியைத் தாண்டிச் சென்றது. அந்தப் பகுதிக்குப் பக்கத்திலிருந்த நீர்நிலையை அடைந்தவுடன் முட்டி மோதிக்கொண்டு நீர் அருந்தாமல், சீரான வரிசையில் வந்து நீரை அருந்திச் சென்றன ஒட்டகங்கள்.
அவ்வளவு பெரிய உயிரினத்திடம் அப்படியான ஒழுங்கை அவர் அதற்கு முன் கண்டிருக்கவில்லை. வெளியிலிருந்து எந்தவோர் அழுத்தமும் இல்லாமல், இயல்பாகவே அவை ஓர் ஒழுங்குடன் நடந்துகொண்டதைப் பார்த்து அவற்றின் பால் ஈர்க்கப்பட்டார் இல்ஸ் கோஹ்லர்.
பாலைவனக் கப்பலைக் காப்பாற்ற
அந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஒட்டகங்கள் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள விரும்பினார் கோஹ்லர். அந்த விருப்பம் அவரை ராஜஸ்தானுக்கு அழைத்து வந்தது. அங்கு ராய்கா நாடோடி இன மக்களுக்கும் அவர்கள் வளர்க்கும் ஒட்டகங்களுக்கும் இடையேயான உறவு குறித்த ஆய்வு மேற்கொண்டார்.
ஒட்டகங்களுக்கு ‘பாலைவனக் கப்பல்’ என்றொரு அடைமொழி உண்டு. பாலைவனம் என்பது பகலில் வீட்டுக்கு வெளியேயும் இரவில் வீட்டுக்குள்ளும் வெப்பம் சுட்டெரிக்கும் பகுதி. இந்த நிலப்பரப்புக்குத் தன்னைக் கச்சிதமாகத் தகவமைத்துக்கொண்ட ஓர் உயிரினம் ஒட்டகம். காரணம், இதன் உடல் வெப்பம் பகலில் உச்சநிலையை அடைந்து, இரவில் குறைந்துவிடும். இதனால் வியர்வை ஏற்படுவதற்கான தேவை ஒட்டகத்துக்குக் குறைகிறது. எனவே, ஒட்டகத்தால் தனது உடலில் அதிக அளவு நீரைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
இப்படி ஓர் உடல் தன்மை காரணமாக, ஒட்டகத்தால் அதிக நேரம் பாலைவனத்தில் உழைக்க முடியும். எனவே நீர் இறைத்தல், சரக்குகளை ஏற்றிச் செல்லுதல், போக்குவரத்து போன்ற விஷயங்களுக்காக ஒட்டகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு காலத்தில் இவை ராணுவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட ஒட்டகத்துக்கு நிறையச் சிக்கல்கள் உள்ளன. தேவையான உணவு கிடைக்காதது அவற்றில் முக்கியமானது. காரணம், மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்த முடியாதபடி இன்று பெரும்பாலான வனங்கள், ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’யாக அறிவிக்கப்பட்டுவிட்டன. ராஜஸ்தானின் ஆரவல்லி மலைப் பகுதிக்கும் இதுதான் நடந்தது. இதனால் அங்குள்ள ஒட்டகங்களுக்குத் தேவையான அளவு உணவு கிடைக்காமல், கரு கலைந்து, இனப்பெருக்கம் செய்வதற்குச் சக்தியில்லாமல் இறந்துபோயிருக்கின்றன.
இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் ஒட்டகப் பாலைக் கொண்டு தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளத் தெரியாமல் ராய்கா நாடோடி மக்கள் வறுமையில் உழன்றுவந்தனர். அதற்கு, ‘ஒட்டகப் பாலைப் பணத்துக்காக விற்றால் தங்களுக்கு ஆபத்து நேரிடும்’ என்ற அவர்களின் மூடநம்பிக்கை ஒரு காரணமாக இருந்தது. தனது ஆய்வின் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளைத் தெரிந்துகொண்ட இல்ஸ் கோஹ்லர், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி உழைக்கத் தொடங்கினார்.
பொருளாதார வழிகாட்டல்
மேற்கண்ட சிக்கல்களுடன் இயற்கையாகவே ராஜஸ்தான் பகுதி ஒட்டகங்களுக்கு இன்னொரு பிரச்சினையும் இருந்தது. கடிக்கும் ஈக்களால் பரவும் ‘திபுர்ஸா’ எனும் நோயால் அவை பாதிக்கப்பட்டிருந்தன. எனவே, இந்த நோயிலிருந்து அவற்றைக் காப்பதற்காக 1992-ம் ஆண்டு ‘லீக் ஃபார் பாஸ்டோரல் பீப்பிள்ஸ்’ எனும் அமைப்பைத் தொடங்கினார் கோஹ்லர். அதன் மூலம், ஒட்டகங்களுக்குத் தேவையான மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரவழைத்து பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றினார்.
1996-ம் ஆண்டு ராஜஸ்தானில் ‘லோகித் பசு பாலக் சன்ஸ்தான்’ எனும் அமைப்பை, உள்ளூர் மக்கள் சிலருடன் இணைந்து தொடங்கினார். அதன் மூலம், வனப் பகுதிகளில் ஒட்டகங்கள் மேய்ப்பதற்கான உரிமையைப் பெற சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்தார்.
பொதுவாக, ஒட்டகங்கள் இதர உயிரினங்களைப் போல நிலத்தில் உள்ள புல், பூண்டு, புதர்களை ஒட்டுமொத்தமாக வேரோடு பிடுங்கிச் சாப்பிடுவதில்லை. மாறாக, உயர்ந்த மரங்களில் உள்ள இலைகளையே உணவாகக் கொள்கின்றன. எனவே அவற்றை ஆங்கிலத்தில் ‘பிரவுசர்ஸ்’ என்று விலங்கியலாளர்கள் அழைக்கிறார்கள். இவ்வாறு மேலோட்டமாக மேய்வதாலும், ஒட்டகங்களின் சாணத்தாலும் வனப்பகுதி வளமடைகிறது. அதனால் இதர உயிரினங்கள் பயனடைகின்றன. ராஜஸ்தானில் பரத்பூர் சரணாலயத்தில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடை விதித்ததால், அங்கே களைத் தாவரங்கள் பெருகி ஒரு கட்டத்தில் சைபீரியக் கொக்குகள் வராமலேயே போய்விட்டன. அதேபோன்றதொரு நிலை ஆரவல்லி மலைப் பகுதிக்கும் நடக்கலாம் என்று அறிவியல்பூர்வமான தகவல்களை முன்வைத்துப் கோஹ்லர் போராடினார்.
2010-ல் ராய்கா மக்கள் தங்கள் மூடநம்பிக்கையிலிருந்து வெளிவந்து, ஒட்டகப் பாலை விற்பனை செய்வதற்காக ‘கேமல் கரிஸ்மா’ எனும் சிறிய அளவிலான பால் பண்ணையைத் தொடங்கினார். அது இன்று பல ராய்கா குடும்பங்களை வாழவைக்கிறது.
இந்தச் சாதனைகளுக்காக தேசிய, சர்வதேச அளவிலான விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்கிறார் இல்ஸ் கோஹ்லர். 2016-ம் ஆண்டு மத்திய அரசின் ‘நாரி சக்தி’ (பெண் சக்தி) விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டவர் இவர்தான். ஒட்டகங்கள் தொடர்பான தன் அனுபவங்களை ‘கேமல் கர்மா’ என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதிய இவர், இன்றும் ராய்கா மக்களின் நலனுக்காக ராஜஸ்தானில் பாடுபட்டுவருகிறார். அந்த உழைப்பு 25 ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago