வான் மண் பெண் 28: பெண்ணின் மகத்துவத்தை உலகுக்குச் சொன்னவர்

By ந.வினோத் குமார்

 

பெ

ண் - ‘உலகின் தாய்’, ‘உயிர்ச் சூழலின் சக்தி’, ‘கருணைமிக்கவள்’, ‘இயற்கையின் இன்னொரு முகம்’... இப்படிப் பெண்ணைப் பற்றி நம்மில் பலருக்கும் பல கற்பிதங்கள் இருக்கும். இவற்றைச் சிலர் நிராகரிக்கலாம்.

ஆனால், நிராகரிக்கவே முடியாத ஒரு உண்மை: பெண்தான் இந்த உலகின் முதல் விவசாயி! பெண் ஒரு குச்சியை வைத்து, நிலத்தைத் தோண்டியதுதான் உலகில் நடந்த முதல் உழவு. ஆனால், இந்த உண்மை காலப்போக்கில், நவீன வேளாண்மையின் வரவால் மறைக்கப்பட்டுவிட்டது. அதன் காரணமாக, உலகுக்கு உணவூட்டும் ‘விவசாயி’களாக இருந்த பெண்கள், வெறும் ‘விவசாயக் கூலி’களாக மாற்றப்பட்டனர். நிலத்தைச் சீர்திருத்த அவர்களிடம் இருந்த கைப்பக்குவம் பறிக்கப்பட்டுவிட்டது.

“அந்தப் பெண்களின் கைப்பக்குவத்தை நாம் மீட்டால்தான், நஞ்சு இல்லாத உணவை, உலகைப் படைக்க முடியும்” என்கிறார் வந்தனா சிவா.

22CHNVK_V1இயற்பியலுக்குள் இயற்கையியல்

1952-ம் ஆண்டு நவம்பர் 5 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் டேராடூனில் பிறந்தார் வந்தனா சிவா. அவருடைய தந்தை வனக் காவல் அதிகாரி. தாய், இயற்கையின் மீது நேசம் கொண்ட விவசாயி. இயற்கை மீதும் உழவு மீதும் வந்தனா பற்றுக்கொள்வதற்கு இது போதாதா?

அதேநேரம் ஒரு சில செயல்பாட்டாளர்களுக்கு மாறாக, அறிவியல் சார்ந்த சூழலியல் கருத்துகளை முன்வைப்பவர் வந்தனா. அதற்குக் காரணம் அவரது கல்விப் பின்னணி. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்த அவர், லண்டனில் உள்ள வெஸ்டர்ன் ஆண்டாரியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் தத்துவம் குறித்து முனைவர் பட்ட ஆய்வையும் முடித்திருக்கிறார்.

இந்தக் காரணத்தால் அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் கொள்கை, உயிரினப் பன்மை, மரபணுப் பொறியியல் போன்ற பல துறைகளைச் சார்ந்து அவரால் இயங்க முடிகிறது.

 

தொழுவத்தில் ஆய்வுக்கூடம்

லண்டனில் முனைவர் பட்டம் பெற்றவுடன் இந்தியாவுக்குத் திரும்பிய அவர் இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய மேலாண்மை நிறுவனம் போன்றவற்றில் ஆய்வாளராகச் சில காலம் பணியாற்றினார். கல்லூரிக் காலத்திலிருந்தே கள ஆய்வில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அதையே பிற்காலத்தில் தன் வாழ்க்கைக்கான ஆதாரமாகவும் கொண்டார்.

1982-ம் ஆண்டில் தன் தாய் நடத்திவந்த மாட்டுத் தொழுவத்தில் ‘அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சூழலியலுக்கான ஆய்வு அறக்கட்டளை’யை நிறுவிய வந்தனா, உள்ளூர் உழவர்கள், அடித்தள சமூக இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது, அந்த உழவர்கள் பல விதமான நாட்டு விதைகள், மண்ணுக்கே உரித்தான விவசாய முறைகள் போன்றவற்றைப் பின்பற்றி வருவதை அறிந்தார். சூழலுக்குத் தீங்கிழைக்காத அந்த அம்சங்களைப் பாதுகாக்கவும், இன்னும் பரவலாக எடுத்துச்செல்லவும் நினைத்த அவர், 1991-ம் ஆண்டு ‘நவதானியம்’ என்றோர் அமைப்பை ஏற்படுத்தினார்.

பாரம்பரிய அறிவுக்குப் பாதுகாப்பு

‘நவதானியம்’ அமைப்பைத் தொடங்கிய பிறகு, வந்தனா சிவா சந்தித்த முக்கியப் பிரச்சினை ‘பயோபைரஸி’ எனும் ‘பாரம்பரிய அறிவுத் திருட்டு’. அதாவது, நம் ஊரில் மருத்துவக் குணம்மிக்க மூலிகை ஒன்று வளர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதைக் காலம்காலமாக நம் முன்னோர்கள், மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருப்பார்கள். ஆனால், அதற்கான பொருளாதார மதிப்பைப் பற்றி அறியாமல் இருப்பார்கள்.

இந்நிலையில், எங்கிருந்தோ வரும் ஒரு வெளிநாட்டு நிறுவனம், அந்த மூலிகையின் மருத்துவக் குணங்களை அறிந்த நம் முன்னோர்களுக்கு எந்த வகையான உரிமத்தொகையும் வழங்காமல், அந்த மூலிகைக்குக் காப்புரிமை பெற்றுவிடும். இதனால் அந்த நிறுவனத்துக்குப் பணம் செலுத்தாமல், நம் ஊரில் அந்த மூலிகையைப் பயன்படுத்த முடியாது.

இப்படி வேம்புக்கான காப்புரிமையை 1994-ம் ஆண்டில் அமெரிக்கா பெற்றது. அதை எதிர்த்து இந்தியாவிலிருந்து மூன்று அமைப்புகள் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டன. அதில் ஓர் இயக்கம் வந்தனா சிவாவுடையது. இதுபோல மஞ்சள், கோதுமை, பாஸ்மதி அரிசி போன்றவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களின் ‘காப்புரிமைத் தாக்குதலில்’ இருந்து காப்பாற்றத் தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பி வருகிறார் வந்தனா.

பாரம்பரிய விதைகள், பாரம்பரிய அறிவுச் செல்வங்கள் போன்றவற்றுக்காகப் போராடிவரும் வந்தனா, மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் தனது கண்டனங்களைப் பதிவுசெய்து வருகிறார். இதன் காரணமாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான சில மேற்கத்திய ஊடகங்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார் வந்தனா சிவா.

வேளாண்மையில் ஆணாதிக்கம்

சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை சார்ந்த தனது பணிகளுக்காக 1993-ம் ஆண்டு ‘மாற்று நோபல் பரிசு’ என்று சொல்லப்படும் ‘ரைட் லைவ்லிஹுட்’ விருதைப் பெற்ற இவர், தனது கருத்துகளை பல்வேறு புத்தகங்களாக வெளியிட்டுவருகிறார்.

‘ஸ்டேயிங் அலைவ்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய முதல் புத்தகம், உலகம் முழுவதுமுள்ள சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சூழலியல் பெண்ணியத்தை உலகுக்கு எடுத்துக் கூறிய நூல் இது. அத்துடன் ‘பசுமைப் புரட்சி’யை மிகவும் காட்டமாக விமர்சித்தும் இருந்தார்.

பசுமைப் புரட்சியால், பெண்களிடமிருந்த விவசாயம் ஆண்களிடம் கைமாறியது. ஆண் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே கூலியிலும் வேறுபாடு வந்தது. இதனால், பெண் விவசாயிகள் வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களைத் திருமணம் செய்துகொள்ள அதிக வரதட்சிணை கோரப்பட்டது. ஒரு கட்டத்தில், பெண் குழந்தைகளைச் சிசுவிலேயே அழிக்கும் அளவுக்கு, கலாச்சார மாற்றத்தையும் பசுமைப் புரட்சி மறைமுகமாக ஏற்படுத்தியது என்கிறார் வந்தனா. ‘அறிவியல்’ என்கிற ஆணால், ‘இயற்கை’ என்கிற பெண் எவ்வாறு பாதிக்கப்படுகிறாள் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் இதைக் கொள்ளலாம் என்கிறார் அவர்.

எப்போது பெண்ணிடமிருந்த குச்சி பறிக்கப்பட்டு, அவளது கையில் கரண்டி திணிக்கப்பட்டு சமையலறையில் உட்கார வைக்கப்பட்டாளோ, அப்போதிருந்து நமது மண் சீர்கெடத் தொடங்கியது. அந்த மண்ணை மீட்டெடுக்க, மீண்டும் அவள் கழனிக்கு வர வேண்டும் என்கிறார் வந்தனா சிவா. ஆம், அவளின் வருகைக்காகக் காத்திருக்கிறது இந்த நிலம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்