'அஞ்சாமை அல்லால் துணைவேண்டா' – திருக்குறள்
மகாபாரதத்தில் தர்மனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று ‘எதை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்?’ என்பது. அதற்கு தர்மன் அளித்த பதில் ‘தைரியத்தை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்’ என்பதே.
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம் அச்சம். மாணவராக இருக்கும்போது போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாதோ எனத் தொடங்கும் அச்சம், படித்த பின் வேலை கிடைக்காதோ, வேலை கிடைத்த பின் உயர் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் எடுத்துவிடுவோமோ என்றெல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் நம்முடனேயே அச்சமும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
கற்பனையே காரணம்
அச்சத்தின் தாய் கற்பனை. பெரும்பாலான அச்சங்களுக்குக் காரணம் ‘இப்படி நடந்துவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ’ என்ற வீண் கற்பனைதான். நாம் கற்பனை செய்வனவற்றில் பெரும்பாலானவை நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும்கூட நாம் நினைத்ததைவிட நன்றாகவே அதைச் சமாளித்திருப்போம். சில நேரம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத விஷயங்கள் எதிர்பாராமல் நடந்திருக்கும். அதையும் சமாளித்துக் கடந்து வந்திருப்போம். ஆக, மனிதனை நிஜம் கொல்வதைவிட வீண் கற்பனையே அதிகம் கொல்கிறது.
அதிவேகமாக வண்டியில் போகும்போது விபத்து ஆகிவிடுமோ எனப் பயப்படுவது நியாயமானது. ஆனால், சாலையில் நடக்கும்போது விமானம் தலையில் விழுந்துவிடுமோ எனப் பயப்படுவது எவ்வளவு அபத்தமோ, அது போன்றே பல நேரம் நாம் அச்சப்படுவது அபத்தமாக இருக்கும்.
மனப்பதற்ற நோய்
மனநல பாதிப்புகளில் மிகப் பரவலாகக் காணப்படுவது மனப்பதற்ற நோயே. காரணமே இல்லாமல் சிறு விஷயங்களுக்குக்கூடத் தேவைக்கு அதிகமாகப் பதற்றப்படுவதே இதன் முக்கிய அறிகுறி. அதிகமாகப் பதற்றப்படும்போது, உடலிலும் பல அறிகுறிகள் தூண்டப்படுகின்றன. இதயம் அதிகமாகத் துடிப்பது, படபடப்பு, மூச்சு முட்டுவது, உடல் நடுங்குவது, தலைசுற்றுவது , வயிற்றைக் கலக்குவது போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.
உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்துக்கொண்டு பல சமயங்களில் மாரடைப்பு, ஆஸ்துமா என்றெல்லாம் நினைத்து மருத்துவமனைக்கு அவசரமாகச் சென்று மருத்துவர்களையும் சிலர் பதற்றப்பட வைப்பதுண்டு.
பயமா, மூட நம்பிக்கையா?
இன்னும் சிலருக்குக் குறிப்பிட்ட செயலையோ குறிப்பிட்ட விஷயங்களையோ எதிர்கொள்ளும்போது மட்டும் அளவுக்கு அதிகமாகப் பயம் இருக்கும். கூட்டத்தில் பேசுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது, லிஃப்டில் செல்வது போன்ற செயல்களுக்கு அதீத பயம் ஏற்படும். இன்னும் சிலருக்கு நாய், பூச்சி போன்ற உயிரினங்களைக் கண்டால் பயம் ஏற்படும். இதை 'ஃபோபியா' என்று சொன்னால் அனைவருக்கும் புரியும். பல விசித்திரமான 'ஃபோபியா'க்களெல்லாம் இருப்பதாக மருத்துவ உலகம் பட்டியலிடுகிறது. பல சமயம் அது பயமா மூடநம்பிக்கையா எனத் தெரியாத அளவுக்கு இருக்கும்.
சில நேரம் இந்த மருட்சி அல்லது மிகையச்சம் ஏதேனும் மோசமான அனுபவத்தால் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒருமுறை லிஃப்டில் போகும்போது நின்றுவிட்டால் அதீதமாக அச்சப்பட்டு, அடுத்து மின்தூக்கியிலேயே செல்லாமல் சென்னை எல்.ஐ.சி. போன்ற உயரமான கட்டிடங்களில்கூட மூச்சிரைக்க படிகளில் ஏறியே செல்லும் ஆட்கள் உண்டு. தேவையற்ற இந்த அச்சத்தால் பல நல்ல வாய்ப்புகளை இழந்தவர்கள் உண்டு. விமானத்தில் பறக்க வேண்டியிருக்கும் என்பதால் வெளிநாட்டு வேலையையே வேண்டாம் என்று சொல்பவர்களும்கூட இருக்கிறார்கள்.
தேவையானவற்றுக்கு அஞ்சுவதும் தேவையற்றவற்றுக்கு அஞ்சாமையுமே நமக்குத் தேவை. ‘அச்சம் என்பது மடமையடா’ என்பதற்கும் ‘தீயவை தீயினும் அஞ்சப்படும்’ என்பதற்கும் இடையேயான ‘சமநிலை’யே வாழ்க்கைப் பயணத்தில் நலம் அளிக்கும் நான்கெழுத்து.
(அடுத்த வாரம்: கோபம் எனும் கொதிநிலை)
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago