‘உலக கை கழுவும் நாள் ஒவ்வோர் ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது’ என்ற கேள்விக்கு, ‘அக்டோபர் 15’ என்று பதில் சொல்லி விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், ‘ஏன் கை கழுவ வேண்டும்?’ என்கிற கேள்விக்கு எத்தனை பேரிடம் பதில் உள்ளது?
அந்த வகையில் அண்மையில் எங்கள் நிலையத் தலைமை மருத்துவர் எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘கைகளை நீங்கள் எல்லோரும் அடிக்கடி கழுவுகிறீர்களா? அதுவும் சாப்பிடுவதற்கு முன் கழுவுகிறீர்களா?’ என்று.
‘கழுவுகிறோம்’ என்று சிலர் சொன்னார்கள். சிலர் சோப் போட்டும், சிலர் வெறும் தண்ணீரில் கழுவுவதாகவும் சொன்னார்கள். ‘சோப்புப் போட்டு என்றால் எப்படிக் கழுவுகிறீர்கள்? எவ்வளவு நேரம் கைகளை ஊற வைப்பீர்கள்?’ என்று கேட்டார். சோப்பு போட்டவுடன், உடனே கழுவிவிடுவதாகச் சொன்னார்கள்.
அதற்கு அவர்: “துணி துவைக்கும்போது என்ன செய்கிறோம். துணிகளைச் சிறிது நேரம் சோப்பு நுரையில் ஊற வைக்கிறோம் இல்லையா? அதுபோல் சற்று நேரமாவது கைகளை சோப்புப் போட்டு ஊறவைத்த பிறகே கழுவ வேண்டும். அதுதான் பயன் தரக்கூடிய சரியான முறை” என்றார்.
‘என்னடா இது... கை கழுவுவதே பெரிய விஷயம். இதில் கைகளை ஊறவைத்து வேறு கழுவ வேண்டுமா’ என்று கேட்கிறீர்களா?
ஏன் கைகளைக் கழுவ வேண்டும்?
சாப்பிடும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுவதன் மூலம் வயிற்றுப்போக்கையும் நிமோனியாவையும் தடுக்கலாம். மேலும், வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவாமலும் தடுக்கலாம்.
அதுவும் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுவதே சிறந்த வழி என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சோப் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்தான். அதற்காக அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.
கை கழுவுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக 2008-ல் அனுசரிக்கப்பட்ட முதல் உலகக் கை கழுவும் நாளில், 70 நாடுகளைச் சேர்ந்த 12 கோடிக் குழந்தைகள் கைகளைக் கழுவி விழிப்புணர்வு பெற்றதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் எஸ்.இளங்கோ, 15 ஆயிரம் பள்ளி மாணவர்களைக்கொண்டு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒரே நேரத்தில் அனைவரையும் சோப்பைக் கொண்டு கைகளைக் கழுவவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நாளில், இப்படியான விழிப்புணர்வு நடைபெறுவதோடு நின்றுவிடக் கூடாது. பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்குக் கை கழுவுவதன் அவசியத்தை அடிக்கடி உணர்த்த வேண்டும். அவர்களும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கை கழுவ நேரமில்லையா?
நினைத்துப் பாருங்கள். எத்தனை பேர் கழிவறை சென்ற பின்னர் கை கழுவுகிறோம்? சரி, சாப்பிடுவதற்கு முன்னதாகவாவது கைகளைச் சரியாகக் கழுவுகிறோமா? ‘கண்ணா, சாப்பிட வாடா’ என்றவுடன் ‘இந்தா வந்துட்டேன்’ என்று வேகவேகமாக ஓடிவந்து சாப்பாட்டுத் தட்டின் முன் உட்காருபவர்கள்தான் இந்தக் காலத்துப் குழந்தைகள் பலரும். ‘போ... கைகளைக் கழுவிவிட்டு வா’ என்று சொன்னால் குழாயைத் திருகி, ஒரு கைக்கு மட்டும் ‘தண்ணி காட்டிவிட்டு’ வருவார்கள்.
சிற்றூரில் என்றால் பாத்திரத்தில் இருக்கும் நீரில் கையை அமிழ்த்திவிட்டு வருவார்கள். இன்னும் சிலர் ‘கை டிரையாகத்தானே இருக்கு. ஒண்ணும் பிரச்சினையில்லை, அப்படியே சாப்பிடலாம்’ என்பார்கள். வேலைக்கு இடையில் சாப்பிட நேரும்போது அப்படியே வந்து சாப்பாட்டில் கையை வைப்பவர்களும் இருக்கிறார்கள். கை கழுவ நேரமில்லை என்பவர்களும்கூட இருக்கிறார்கள்.
திருமணம், விருந்து, கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் சாப்பிடுவதற்குக் கூட்டம் அதிகமாக இருக்கும். அது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்காக அவசரப்பட்டு பலரும் கைகளைக் கழுவுவதே கிடையாது. இதுதான் இன்று பலரிடத்திலும் காணப்படும் போக்கு.
நம் எதிர்காலம் நம் கையில்
அன்றாட, அவசர உலகில் கைகளை சோப்பு போட்டுக் கழுவுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்று தோன்றலாம். ஆனால், அது நம் வாழ்க்கையில் நோய்களிலிருந்து பாதுகாப்பைத் தருகிறதே. அப்படியிருக்கும்போது, அதைக் கடைப்பிடிப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்?
கைகுலுக்கல் என்பது ஆங்கிலேயர் வழக்கம். ஒருவருக்கு ஒருவர் கைகளைக் குலுக்கிக்கொள்வதன் மூலம் நோய்க் கிருமி ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவ சாத்தியம் உண்டு.அடுத்த முறை கைகுலுக்க யாராவது கைகளைக் காட்டினால், வணக்கம் சொல்லி முகமன் செலுத்துங்கள். நம் எதிர்காலம் நம் கையில்தான் இருக்கிறது. அதுதான் உலகக் கை கழுவும் நாளின் இந்த ஆண்டு கருப்பொருளும்கூட!
கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
35 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago