கருப்பை நீர்க்கட்டியைச் சமாளிக்கும் வழிகள்

By செய்திப்பிரிவு

பெண்களுக்கு நீர்க்கட்டி (பிசிஓஎஸ் - பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்பது உடலில் உள்ள ஹார்மோன்களின் அசாதாரண அளவுகளால் ஏற்படுகிறது. இது கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு நீண்ட கால ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பொதுவாக, 24 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நீர்க்கட்டியால் பாதிப்படைகிறார்கள். அதாவது, குழந்தைப்பேறு வயதுடையவர்களில் 10 ல் ஒரு பெண் இதனால் பாதிக்கப்படுகிறார். ஆனால், இந்த பிரச்சனை சந்திப்பவர்களில் பாதிப் பேர் மட்டுமே அதற்கான சிகிச்சை பெற முற்படுகிறார்கள்.

கருப்பை நீர்க்கட்டி

வழக்கமாக, கருப்பை நீர்க்கட்டிகள் கருமுட்டை வெளியேறுவதைப் பாதிக்கிறது. இதுவே கர்ப்பப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது; கருச்சிதைவு உள்ளிட்ட நீர்க்கட்டி தொடர்பான சில கர்ப்பச் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், கருப்பை நீர்க்கட்டி குறித்த தகவல்களையும், தன்மைகளையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதுவே அவர்களின் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். இதன் மூலம் அவர்கள் அறிகுறிகள், நோயறிதல், சிகிச்சை, வாழ்க்கை முறை, ஆபத்து ஏற்படுத்தும் காரணங்கள், தேவையான வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றை எளிதில் கையாளவும் முடியும். மகப்பேறு மருத்துவர், கருப்பை நீர்க்கட்டியைக் கையாள்வதற்குக் கருவுறுதல் நிபுணரைத் தவிர உணவியல் நிபுணர், தோல் மருத்துவர், உளவியலாளர், உடற்பயிற்சி உடலியல் நிபுணர் ஆகியோரின் ஆலோசனையும் மிகவும் முக்கியம்.

கவனிக்கப்பட வேண்டிய காரணங்கள்

கருப்பை நீர்க்கட்டியை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஒரு பயனுள்ள அணுகுமுறை அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம் அதன் விளைவுகளைக் குறைக்க முடியும். கருப்பை நீர்க்கட்டி உள்ள பெண்கள் முதலில் தனிப்பட்ட கவனிப்பு பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். முழு முயற்சியுடன் தங்களின் அறிகுறிகளைக் குறைக்க அவர்கள் முற்படவேண்டும். உளவியல் ரீதியாகத் தங்களை மேம்படுத்திக் கொள்வதுடன் உணர்ச்சி வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். முக்கியமாக, கர்ப்பக்காலத்தை அவர்கள் நம்பிக்கையுடன் அணுக வேண்டும்.

நிர்வகிக்கும் வழிமுறைகள்

கருப்பை நீர்க்கட்டி பற்றிய சரியான புரிதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் சார்ந்த செயல்பாடுகள், அத்துடன் மருத்துவச் சிகிச்சைகளைப் பின்பற்றுதல் ஆகியவை கருப்பை நீர்க்கட்டியை நிர்வகிப்பதற்கான முக்கிய வழிமுறைகளாகக் கருதப்படுவது.

உணவுப் பழக்கம்

சரியான அளவு காய்கறிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகளுடன் கூடிய சமச்சீரான உணவு கருப்பை நீர்க்கட்டி அறிகுறிகளைக் குறைத்து, சிறந்த வாழ்க்கையை வாழ உதவும். உணவியல் நிபுணர், பிற சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள் ஆரோக்கியமான உணவு குறித்த அணுகுமுறைகளுக்கு உதவும்.

உடல் சார்ந்த பழக்கவழக்கங்கள்

அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் நீண்ட காலப் பிரச்சனைகளைக் குறைக்கவும் வழக்கமான உடற்பயிற்சி அல்லது உடல் சார்ந்த பணிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், வழக்கமான வீட்டுப் பணிகள், திட்டமிட்ட உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகள் கருப்பை நீர்க்கட்டி அறிகுறிகளைச் சமாளிக்க உதவும். இத்தகைய உடற்பயிற்சியும் உடல் செயல்பாடுகளும் மனநிலையை மேம்படுத்துவதோடு, எடை அதிகரிப்பு, நீரிழிவு வகை-2, இதய நோய்களையும் தடுக்கும்.

மனநல ஆரோக்கியம்

மன உளைச்சல், கடுமையான மன அழுத்தம், அதிர்ச்சியுடன் கூடிய நிலை ஆகியவை நீர்க்கட்டியின் (பிசிஓஎஸ்) முதல் அனுபவ அறிகுறிகள். பல பெண்கள் விரும்பத்தகாத உணர்ச்சி நிலையை அனுபவிக்கின்றனர். உணர்ச்சி சார்ந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இதில் மிகவும் அவசியம்.

ஹார்மோன் மாற்றங்களினால், எரிச்சல், பயம் பதற்றம் போன்ற உணர்ச்சிகரமான பிரச்சினைகள் தோன்றக்கூடும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆதரவுடன் இருக்க வேண்டும். முக்கியமாக, அவர்கள் தகுந்த மருத்துவர்களிடம் தொடர்ந்து ஆலோசனை பெறுவது நல்லது.

உறவு

நீர்க்கட்டியினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாம்பத்தியம் சார்ந்த சவால்களைச் சந்திக்க நேரும். இருப்பினும் அவரின் துணைவர், பிரச்சனையைப் புரிந்து கொண்டு ஆதரவளித்தால், அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். ஒரு மருத்துவர், உளவியலாளர் அல்லது ஆலோசகர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதன் மூலம் பெண்களுக்கு உறவு தொடர்பான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சமாளிக்க முடியும்.

மாதவிடாய்க் காலங்கள்

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதுடன், சிலருக்கு அதிக இரத்தப்போக்கு, உறைதல், கடுமையான மாதவிடாய் வலி போன்றவையும் ஏற்படும். இவற்றைச் சமாளிக்கச் சத்தான, சீரான உணவுகளை உள்ளடக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களும், வழக்கமான உடல் பயிற்சிகளும் அவர்களுக்கு உதவும். உணவியல் நிபுணரால் பரிந்துரைக்கப்படும் உணவு முறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றுவது மாதவிடாய்களை ஒழுங்குபடுத்த உதவும்.

முடி, சருமப் பிரச்சனைகள்

அதிகப்படியான முடி வளர்ச்சி, உச்சந்தலையில் முடி உதிர்தல், நீர்க்கட்டி உள்ள பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் முகப்பரு ஆகியவை ஆண் வகை ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் ஏற்படுகின்றன. தகுந்த மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சிகிச்சையின் மூலம், அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு உட்படச் சருமத்தின் ஆண்ட்ரோஜனின் விளைவுகளைத் தடுக்கலாம்.

கருவளம்

நீர்க்கட்டி உள்ள பெண்கள் கருச்சிதைவு அல்லது கர்ப்பத்தின் ஆரம்ப இழப்பு உள்ளிட்ட கர்ப்பச் சிக்கல்களை அனுபவிக்கின்றனர். பொதுவாக அவர்களுக்குக் கர்ப்பம் அடைவதே ஒரு போராட்டமாக அமைவதுடன் கர்ப்பச் சிக்கல்கள் ஏற்படும் சாத்தியங்களையும் அனுபவிக்கிறார்கள்.

இவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன. ஆனால், மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குக் கருத்தரிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதே உண்மை. நீர்க்கட்டி அறிகுறிகளுக்கான சரியான முறையில் சிகிச்சை பெற்றால், நீர்க்கட்டி உள்ள பெண்கள் பெண்கள் கர்ப்பமாகி ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும்.

- டாக்டர் சிந்தியா. எம்

கட்டுரையாளர், கருத்தரிப்பு நிபுணர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE