ந
மது விருந்துச் சாப்பாட்டின் தனித்துவமான அம்சம் கமகமக்கும் சாம்பார். சாதாரணச் சாப்பாட்டிலும்கூட வாரத்தின் இரண்டு மூன்று நாட்களாவது சாம்பார் இடம்பெற்றுவிடுகிறது. சாப்பாட்டுடன் சாம்பாரைக் கலந்து சாப்பிடுபவர்கள் ஒரு ரகம் என்றால், சாம்பாரை சர்பத் போலக் குடிப்பவர்கள் இன்னொரு ரகம்.
அதைப் பார்த்து யாராவது இனி உங்களை ‘சரியான ‘சாம்பார்’ கணேசனாக இருப்பே போலிருக்கே’ என்று சொன்னால், சந்தோஷமாகச் சிரியுங்கள். ஏன் தெரியுமா, அவர்களைக் காட்டிலும் குடல் புற்றுநோய் உண்டாவதற்கான சாத்தியம் உங்களுக்கு மிகவும் குறைவு.
ஆம், தினமும் சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
புற்றைத் தடுக்கும் மஞ்சள்
மணிப்பால் மருந்தியல் கல்லூரியும், மணிப்பால் பல்கலைக்கழகமும் இணைந்து தென்னிந்தியர்களின் முக்கிய உணவான சாம்பாரில் குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.
மருந்தியல் ஆய்வாளர்கள் வி.கங்கா பிரசாத், அல்பி பிரன்சிஸ், கே. நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘பார்மகோக்னாஸி மேகசின்’ எனும் மருந்தியல் இதழில் சமீபத்தில் வெளியாயின.
உலகளவில் நடத்தப்பட்ட புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளில் அதிக அளவு மஞ்சள் உட்கொள்வதால் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
உணவும் மருந்தும்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவரீதியான ஆய்வில் அமெரிக்கர்களைத் தாக்கும் புற்றுநோய்களில் குடல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் உள்ளதும் அது பெரும்பாலும் உணவுப் பழக்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
“அதிக அளவு மஞ்சள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் கொண்ட வெங்காயம் சேர்த்த உணவுப் பொருட்களில் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது” என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.
மரபுரீதியாகச் சிலருக்கு, குடல்களில் ‘பாலிப்ஸ்’ எனும் சிறு கட்டிகள் தோன்றும். முறையாகக் கவனிக்காமல் விட்டால், இவை பின்னாளில் புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம். இந்தக் கட்டிகளுக்கு ஏற்ற அருமருந்தாக சாம்பார் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அந்த சாம்பாரில் உள்ள மசாலாப் பொருட்கள்தான்.
சாம்பாரில் உள்ள மல்லிவிதை, வெந்தயம், மஞ்சள், கறுப்பு மிளகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் ஆகிய மசாலாப் பொருட்களால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசாலாவின் மகிமை
மும்பை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் முதன்மை ஆய்வாளர் ஒருவர் கூறும்போது சாம்பாரில் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு மசாலாப் பொருளும் தனித்தன்மை உடையதாக உள்ளது. சாம்பாரில் உள்ள சீரகம், பெருங்காயம் போன்ற பொருட்கள் உடலுக்குச் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன. செரிமானம் நன்றாக இருந்தாலே, குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்.
“பொதுவாக சாம்பார் அதிகளவு காரம் இல்லாத உணவாக இருப்பதால் குடலின் உட்புறம் பாதுகாக்கப்படுவதுடன், குடல் புற்றுநோயை உண்டாக்கும் டைமெத்தில்ஹைட்ராக்சின் எனும் காரணியை, சாம்பாரில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுகின்றன” என்கிறார் புற்றுநோய் மருத்துவர் எஸ்.வி.எஸ்.எஸ்.பிரசாத்.
மலச்சிக்கல் இல்லை
இந்தியாவைப் பொறுத்தவரை குடல் புற்றுநோயின் தாக்கம் வடஇந்தியர்களுக்குத்தான் அதிகளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்களின் உணவில் கோதுமை அதிக அளவு இருப்பதே. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், தென்னிந்தியர்களின் உணவு முறையில் எளிதில் செரிமானமாகக்கூடிய பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.
“இந்தியாவில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் வடஇந்தியர்கள். பொதுவாக வறுத்துப் பொடித்த மசாலாப் பொருட்களை அவர்கள் அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால், தென்னிந்தியர்களின் உணவில் பெரும்பாலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மஞ்சளில் பொதுவாகவே புற்றுநோயைத் தடுக்கும் அம்சங்கள் உண்டு. அதனால், இவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு” என்கிறார் புற்றுநோய் மருத்துவர் டி.பி.எஸ்.பண்டாரி.
காய்களும் ஒரு காரணம்
அதேபோல, ருசிக்காக மட்டுமல்லாமல் சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகளுக்காகவும் இரைப்பைக் குழாய் நிபுணர்களால் மக்களுக்கு அது பரிந்துரைக்கப்படுகிறது.
“பொதுவாக இந்திய உணவு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. அதிலும் சாம்பாரில் கேரட், பாகற்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி போன்ற காய்கறிகள் சேர்த்துச் சமைக்கப்படுகின்றன. காய்கறிகளில் உள்ள சத்துகளும் சாம்பார் மூலமாகக் கிடைப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க இவை உதவுகின்றன. அதனால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். பொதுவாக அதிக அளவு கொழுப்புச் சத்து, குறைந்த அளவு நார்ச்சத்துக் கொண்ட சக்கை உணவை (Junk food) உட்கொண்டால் குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்” என எச்சரிக்கிறார் குடல் இரைப்பை மருத்துவ நிபுணர் விமலாகர் ரெட்டி.
சாம்பார் மிகவும் பிரபலமான உணவாக இருப்பதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் மிளகு, பெருங்காயம் போன்ற மசாலாப் பொருட்கள்தான். சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்ற ஆராய்ச்சி தற்போது முதல்கட்டத்தில்தான் உள்ளது. என்றாலும் அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைப் புறக்கணிக்க முடியாது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஆயிஷா பாத்திமா.
இனி, சாம்பாரே மருந்து!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago