ம
ருத்துவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிற அலோபதி மருத்துவர்கள் வாழ்கின்ற காலத்தில் டாக்டர் கு.கணேசன் போன்றவர்கள் விதிவிலக்கு.
தான் கற்றுக்கொண்ட மருத்துவத்தைப் பாமரனும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த டாக்டர் கணேசன். தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் முன்னணி நாளிதழ்களிலும் வார, மாத இதழ்களிலும் உடல்நலம் சார்ந்த மருத்துவக் கட்டுரைகளை எளிமையான முறையில் தொடர்ந்து எழுதிவருபவர்.
சுவாரசியப் புதையல்
கண் பார்த்தால் கை வேலை செய்யப் போகிறது என்று சொல்வார்கள். ஆனால், மருத்துவத் துறை மற்ற துறைகளைப் போன்றது அல்ல. புத்தகத்தைப் படித்து மருத்துவம் செய்துவிட முடியாது. அதேநேரம், வருமுன் காத்துக்கொள்ளவும் நோய் அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளவும் புத்தகங்கள் நமக்கு உதவுகின்றன. அவருடைய ‘மருத்துவ மாயங்கள்’ (மெடிக்கல் மிராக்கிள்) என்கிற இந்த நூல் வார இதழொன்றில் தொடராக வெளிவந்தது. காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பொதுவாகவே மருத்துவம் சார்ந்த நூல்கள் சற்று ஆயாசம் தருபவை, சாமானியர்களுக்கு அது புரியாது என்கிற ரீதியில்தான் பலரும் அணுகுவார்கள். ஆனால், டாக்டர் கணேசனோ கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி இந்த நூலைச் சுவாரசியமாகத் தந்திருக்கிறார். 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழிலும் அறிவியல் பெயர்களுக்கு ஆங்கில மேற்கோளுடனும் எழுதியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் மருத்துவத் துறை தொடர்பான பொதுவான பல அரிய தகவல்களும் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. அதில் ஒன்று, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு முதன்முதலாக தமிழில் ஒரு மருத்துவ நூலை அச்சுப் பிரதியாகக் கொண்டுவந்தவர் சாமுவேல் பிஷ் கிரீன் என்ற ஆங்கிலேய மருத்துவர் என்பதும், அவர் தமிழை முறையாகக் கற்றுக்கொண்டு இந்தப் பணியைச் செய்திருக்கிறார் என்பதும் புதிய செய்தி. அதற்குப் பிறகே ஏனைய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட புத்தகங்கள் மக்களின் பார்வைக்கு வந்துள்ளன என்கிறார்.
bookபன்றியின் இதயம்
இதயச் செயலிழப்பு என்பது இப்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஆனால், அதற்கு இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது தற்போதைய சூழலில் பலராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இதற்கும் ஆராய்ச்சிகள் மூலம் தீர்வு கிடைக்க இருக்கிறதாம். இறந்துபோன விலங்குகளின் இதயத்தின் செல்களை எடுத்து, வளரும் ஆற்றல் கொண்ட மனித செல்களை அதற்குள் செலுத்துவதன் மூலம் இதயத்தை இயங்கச் செய்யலாம் என்கிறது நவீன ஆய்வு. எலி, பன்றி போன்ற விலங்குகளிடம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிற இந்த ஆய்வை மனிதர்களிடையேயும் நிகழ்த்தி வெற்றி பெறச் செய்யலாம் என்கிறார் மருத்துவர் கணேசன்.
மேலும் டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் பற்றாக்குறை நிலவும் நமது நாட்டில் சிகிச்சை அளிப்பதற்குள்ளாக நோயாளிகள் இறந்துபோகிற அவலம் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதைச் சீர்செய்ய மருத்துவத் துறையில் ரோபோக்களை ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் உயிர்ச்சேதம் குறையக்கூடும் என்கிறார்.
எங்கோ தொலைவில் இருக்கிற நோயாளியை ரோபோக்கள் மூலம் கண்காணித்துக் கணினி மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் விதமாக ரோபாட்டிக் துறை வளர்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிடுகிறார்.
படங்களுடன் கூடிய விளக்கம்
இதுபோல ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு நியூரோ ஸ்டிமுலேட்டர் சிகிச்சை, புற்றுநோய் வந்த பிறகும் தாய்மைப் பேறு அடைய செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை, ரத்த அழுத்தம் சீராக ‘சிறுநீரகச் செயல் முடக்க சிகிச்சை’(!), வழுக்கைத் தலையில் முடி வளர பிளேட் ரிச் பிளாஸ்மா சிகிச்சை, சர்க்கரை நோய் வர இருப்பதை முன்கூட்டியே அறியும் ஸ்கேனிங் கருவி, தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் பயோமார்க்கர் ரத்தப் பரிசோதனை என்று புத்தகம் முழுவதும் அனைத்துவிதமான நோய்களுக்கும் சிகிச்சைகளும் அவற்றுக்குரிய கண்டுபிடிப்புக் கருவிகளுமாக நிறைந்திருக்கின்றன.
அதில், சமீபகாலமாக மருத்துவ உலகம் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை பயோனிக். இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில் இயந்திரங்களும் நம் உடலோடு இணைந்து பயணிப்பதுதான் பயோனிக். விபத்துகளால் உடல் உறுப்புகளை இழந்த ஒருவர், அந்த உறுப்புகள் செய்யும் பணியை நம் மூளையின் கட்டளைகளுக்கேற்ப இயந்திரங்கள் மூலம் துல்லியமாகச் செய்யவைப்பது. இதற்கான முன்னுதாரணங்களை, படங்களுடன் அழகாக விளக்கிச் செல்கிறார் ஆசிரியர். கூடவே இதுபோன்ற கருவிகளைக் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்த மருத்துவர்களின் பின்னணியையும் தொட்டுச் செல்கிறார்.
இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பல சிகிச்சைகள் தற்போது இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் வழங்கப்படுகின்றன என்பதே பலருக்கும் தெரியாத ஆச்சரியம். தற்போது ஆராய்ச்சி நிலையில் இருக்கும் மேலும் பல சிகிச்சைகள், கருவிகள் இன்னும் சில வருடங்களில் நடைமுறைக்கு வரும்போது அவை எதிர்காலச் சந்ததியினருக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்தப் புத்தகம் அந்த நம்பிக்கையைத் தருகிறது!
மருத்துவ மாயங்கள்!
டாக்டர் கு. கணேசன்,
காவ்யா வெளியீடு,
தொடர்புக்கு: 9840480232
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago