பேலியோ சீருணவு என்கிற கற்பிதம்

By செய்திப்பிரிவு

அந்தப் பெண்ணுக்கு 35 வயது. அதீத உடல்பருமன் அவரை அவதிக்கு உள்ளாக்கியது. அவர் உடல் எடை 104 கிலோவைத் தாண்டிவிட்டது. அந்தச் சூழலில், பேலியோ உணவு முறை குறித்து பிரபலத் தமிழ் வார இதழில் வெளியான தொடர் ஒன்று அவர் கவனத்தை ஈர்த்தது.

அந்தத் தொடரின் உந்துதலில் பேலியோ உணவு முறையைப் பின்பற்றத் தொடங்கினார். ஆறு மாதத்துக்குள் அவரது எடை 10 கிலோ குறைந்தது. இருப்பினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது எடை 105 கிலோவைத் தாண்டிவிட்டது. இது அந்தப் பெண்ணுக்கு மட்டும் நேர்ந்த அனுபவமல்ல; பேலியோ உணவு முறையைப் பின்பற்றிய பலருக்கும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் பலனளித்த பேலியோ, சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஏன் பயனற்றுப் போனது?

பேலியோவின் பின்னணி: 1985இல் ஓர் அறிவியல் இதழில் ஆராய்ச்சி யாளர்கள் ஈட்டன், கானர் ஆகியோர் உணவு முறை தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டனர். அதில் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட பல பாதிப்புகள் தற்போதைய தொழில்நுட்பக் காலகட்டத்தில் அதிக அளவில் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். மனிதர்கள் உணவுக்காக வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கிய பின்னர் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்களே அதற்கு முக்கியக் காரணம் என்பது அந்தக் கட்டுரையின் அடிப்படை.

அவர்களின் கூற்றுப்படி, மனிதர்கள் சமூகரீதியாக நிறைய மாறியிருக்கிறார்கள். இருப்பினும், மனிதர்களின் மரபணுக்கள் இன்றும் மாறாமல் இருக்கின்றன. அவை வேளாண்மைக்கு முந்தைய காலத்தில், அதாவது 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்றே உள்ளன. பேலியோ காலகட்டத்தில் இறைச்சி, மீன், பழங்கள், காய்கறிகள் போன்றவையே மனிதர்களின் முதன்மை உணவாக இருந்தன; தானியங்களையோ பால் அல்லது பால் தொடர்பான பொருள்களையோ அவர்கள் சாப்பிடவில்லை.

இன்றைய நவீன நோய்ப் பாதிப்புகளிலிருந்து மனித நலத்தை மீட்டெடுப்பதற்கு அன்றைய குகை (பேலியோ) மனிதர்களின் உணவுமுறையே சிறந்தது எனும் கருத்தை அந்தக் கட்டுரையில் அவர்கள் முன்வைத்தனர். அதுவே இன்று பரவலாக அறியப்படும் பேலியோ உணவு முறை.

கருத்தியல் சரியா? - 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தானியங்களைச் சாப்பிடவில்லை என்பதே பேலியோ பரிந்துரையின் அடிப்படை. இந்தக் கூற்று சரியா என்றால், இல்லையென்பதே அறிவியலின் பதில். 30,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் தானியங்களைச் சாப்பிட்டதற்கு அறிவியல் ஆதாரங்கள் உள்ளன.

மனிதனின் விருப்ப உணவாக இறைச்சி இருந்தபோதும், அவை கிடைக்காத காலகட்டத்தில் வேர்கள், சோளம், கிழங்குகள் போன்றவையே மனிதர்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துள்ளன என இனவரைவியல் தரவுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இன்றைய பேலியோ உணவு முறை தானியங்களையும் மாவுச்சத்து நிறைந்த உணவை யும் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல எனும் கருத்தை தவறாகப் பரப்பிவருகிறது.

முக்கியமாக, மனிதக் குடல் அமைப்பும், பற்கள் அமைப்பும் மாமிச உண்ணிகளிடமிருந்து கணிசமாக வேறுபட்டவை; குரங்குகளுக்கு இருப்பதைப் போன்றே அவை உள்ளன. இது ஆதி மனிதனின் முக்கிய உணவாகத் தாவரங்கள் (தானியங்கள், ஸ்டார்ச் உணவுகள்) இருந்தன என்பதை உணர்த்தும் முக்கிய ஆதாரம்.

இறைச்சியின் தரம்: புரதம் நிறைந்த இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என போலியோ பரிந்துரைக்கிறது. ஆனால், இன்று நாம் சாப்பிடும் வளர்ப்பு இறைச்சியின் தரம், காட்டுயிர்களைவிடத் தரத்தில் குறைந்ததே. காட்டுயிர்களின் இறைச்சியில் கெட்ட கொழுப்பு குறைவாக இருக்கும்; நல்ல கொழுப்பு அதிகளவில் இருக்கும்; புரதச் சத்தும் அதிகமாக இருக்கும் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

காட்டுயிர்களைச் சாப்பிடலாம் என்றால், இன்றைய காலகட்டத்தில் காடுகளுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவதோ, காட்டில் பழங்களைப் பறித்துச் சாப்பிடுவதோ நடைமுறையில் சாத்தியமற்றது, தடை செய்யப்பட்டதும்கூட.

கலப்பின மாற்றங்கள்: இன்று நாம் சாப்பிடும் தானியங்கள், இறைச்சி, பழங்கள், காய்கறிகள் போன்ற அனைத்து உணவுகளும் மனிதர்களால் விளைவிக்கப்பட்டவை. பேலியோ கால கட்டத்துடன் ஒப்பிடும்போது இவை மனிதர்களால் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

நெல் தானியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கலப்பினம் (Hybrid) சார்ந்த ஆராய்ச்சிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பாரம்பரிய அரிசியில் இருக்கும் கலோரியும் கலப்பின அரிசியில் கிடைக்கும் கலோரியும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன. ஆனால், இந்த அரிசியின் நார்ச்சத்து, பாரம்பரிய அரிசியின் நார்ச்சத்துடன் ஒப்பிடும்போது பத்தில் ஒரு பங்கே.

அறிவியல் ஆய்வுகள்: பேலியோ உணவு முறையின் பலன்களைக் காட்டும் பெரும்பாலான ஆய்வுகள் குறுகிய காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவை; குறைந்த பங்கேற்பாளர்களைக் கொண்டவை. ஆய்வில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பருமனாக இருந்தனர் என்பதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எந்த நோய்களும் இருந்திருக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, பங்கேற்பாளர்களின் எடை ஆரம்ப சில மாதங்களில் குறைவதைக் காட்டியது, ஆனால் இரண்டு ஆண்டு முடிவில் அவர்களின் உடல் எடை பேலியோவுக்கு முந்தைய நிலைக்கே அதிகரித்திருந்தது.

இன்றைய தேதியில் பேலியோ உணவு முறையின் நீடித்த பலனுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதே உண்மை. முக்கியமாக, பேலியோ உணவை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் ஈட்டன், கானர் தங்கள் கூற்றுக்கு அறிவியல் அடிப்படையில் போதுமான ஆதாரம் இல்லையென்பதை 2016இல் ஒப்புக்கொண்டனர்.

என்ன செய்ய வேண்டும்? - உடல் பருமன் தடுப்பு என்பது குழந்தையின் கருத்தரிப்பு முதல் தொடங்கப்பட வேண்டிய ஒன்று. நீரிழிவுப் பாதிப்பு இல்லாத ஆரோக்கியமான, சாதாரண எடையுள்ள தாய் ஒருவரால் மட்டுமே ஆரோக்கியமான சந்ததியைப் பெற முடியும். குழந்தைப் பருவத்திலிருந்தே, நவீனத்துவம் எனக் கருதப்படும் மேற்கத்திய உணவு முறையைத் தவிர்ப்பது அவசியம்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், துரித உணவு வகைகள், பிஸ்கட்கள், சர்க்கரை சேர்க்கப் பட்டவை, ஐஸ்கிரீம், வறுத்த உணவு, செயற்கை பானங்கள் போன்றவற்றைக் குறைவாகச் சாப்பிடலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம்.

காய்கறிகள், பழங்கள், மீன், கோழி, இறைச்சி (கொழுப்புப் பகுதி அகற்றப்பட்டது), முழுத் தானியங்கள், பாரம்பரிய தானியங்கள், பாரம்பரிய அரிசி, பால் ஆகியவற்றைச் சீரான முறையில் சாப்பிடுவது நல்லது. வறுத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக வேக வைத்துச் சாப்பிடுவது எடை குறைப்புக்கு உதவும்.

மிக அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்ட வர்கள் மருத்துவ உதவியை நாடுவது அவசியம். எண்டோகிரனாலஜிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர், உளவியலாளர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு அவர்களின் எடை இழப்புக்கு உதவும்.

எலும்பு வலுவிழப்பு நோய், நீரிழிவு நோய், இதயம், சிறுநீரகம் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த உணவு முறை ஒருபோதும் எடுக்கக் கூடாது.

நிரந்தரப் பலன்: உடல் பருமன் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு பாதிப்பு. அதற்குக் குறுக்குவழிகளோ அதிசய மருந்துகளோ கிடையாது. இது சீருணவு முறைகளுக்கும் பொருந்தும். இதுவரை 200க்கும் மேற்பட்ட சீருணவு முறைகள் பிரபலமாகி, நடைமுறைக்கு வந்து மறைந்துவிட்டன. ஒரு மனிதரால் தன் வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு சீருணவு முறையையும் பின்பற்ற முடியாது என்பதே நிதர்சனம். இன்று பிரபலமாக விளங்கும் பேலியோவுக்கும் இது பொருந்தும்.

முக்கியமாக, பேலியோ உலகில் நாம் வாழவில்லை. உணவகங்கள், துரித உணவு வகைகள் போன்றவை நிரம்பிய சூழலில் வாழ்கிறோம். நமது விருப்பத்தைக் கட்டுப்படுத்தி, பேலியோ உணவு முறையைப் பின்பற்றுவது கடினம். அப்படியே பின்பற்றி முயன்றாலும், நமது உணவுத் தேவைகளைத் தீர்மானிக்கும் ஹைபோதாலமஸ் எனும் தன்னிச்சை அமைப்பு அதனை நீண்ட நாள்களுக்குப் பின்பற்ற அனுமதிக்காது; நாளடைவில் நம்மை வழக்கமான உணவு முறைக்கு இட்டுச் செல்லும். இதனால் நம் உடல் எடை மீண்டும் அதிகரிக்கும்.

உடல் எடை இழப்புக்கு பேலியோ கால மனிதர்களின் உடல் செயல்பாடுகளைப் பின்பற்றுவது சிறந்த வழி. பேலியோ காலத்தில் மனிதர்கள் உணவுக்காகத் தினமும் 14 கிமீ தொலைவுக்கு மேல் நடந்தோ ஓடியோ செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. பேலியோ கால மனிதர்களின் அளவுக்கு இல்லை யென்றாலும், அதில் பகுதி அளவு நடப்பது அல்லது ஓடுவதுகூட நமக்கு நிரந்தரப் பலனைத் தரும். இன்று நம்மில் எத்தனை பேர் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது நடக்கிறோம்?

- டாக்டர் சிவப்பிரகாஷ்; sivaprakash.endo@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்